சிட்னி: தடுத்துவைக்கப்பட்ட உலகின் ஆகப்பெரிய முதலை எனும் பெயர்பெற்ற 5.48 மீட்டர் நீள ஆஸ்திரேலிய முதலை ஒன்று இறந்துவிட்டதாக வனவிலங்கு சரணாலயம் ஒன்று சனிக்கிழமை (நவம்பர் 2) தெரிவித்தது.
அந்த முதலை 110 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு டன் (907 கிலோ) எடைகொண்ட கசியஸ் எனும் அந்த முதலைக்கு அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்து உடல்நலம் குன்றியதாக Marineland Melanesia Crocodile Habitat எனும் அந்தச் சரணாலயம் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
“அதற்கு வயதாகிவிட்டது. பொதுவாக வனப்பகுதி முதலை வாழும் காலத்தையும் கடந்து அது வாழ்ந்ததாக நம்பப்படுகிறது,” என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டது.
உப்புநீர் முதலையான கசியஸ், தடுத்துவைக்கப்பட்ட உலகின் ஆகப்பெரிய முதலை எனும் கின்னஸ் சாதனையைப் பெற்றிருந்தது.

