ஏதென்ஸ்: உலகின் ஆகப் பெரிய சிலந்தி வலையை அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 100,000 சிலந்திகள் அதில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சிலந்திப் பெருநகரம் முதன்முதலில் 2022ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சுண்ணாம்புப் பாறைக் குகைகளில் அந்தச் சிலந்தி வலை காணப்படுகிறது. அந்தக் குகைகளின் நுழைவாயில் கிரீஸ் நாட்டில் தொடங்கும் நிலையில், அவை அண்டை நாடான அல்பேனியாவரை நீள்கின்றன.
அந்தக் கந்தகக் குகைகள் கந்தக அமிலத்திலிருந்து உருவாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. நிலத்தடி நீரிலுள்ள அழுகிய முட்டைபோல் மணம் வீசும் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு, ஆக்சிஜனுடன் வினையில் ஈடுபடுவதன்மூலம் அது தோன்றுகிறது.
அந்த 106 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வலையில் ‘ஃபார்ன் ஃபனல் வீவர்’, ‘ஷீட் வீவர்’ எனும் இருவேறு இனச் சிலந்திகள் ஒன்றாக வாழ்வது அறிவியல் வல்லுநர்கள் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஷீட் வீவர் போன்ற அளவில் சிறிதாக உள்ள சிலந்திகளையே ஃபார்ன் ஃபனல் வீவர் இனச் சிலந்திகள் உணவாகக் கொள்ளும் எனக் கூறப்படும் நிலையில், அவை இரண்டும் சேர்ந்து வாழ்வது ஆய்வாளர்களை வியக்கவைத்துள்ளது
குகையில் வெளிச்சம் குறைவாக இருப்பதும் போதிய உணவு கிடைப்பதுமே அது நிகழாதிருப்பதற்குக் காரணம் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கொசுக்களைப் போன்ற சிறு பூச்சிகள் அல்லது ஈக்கள் அந்தச் சிலந்திகளுக்கு உணவாகக் கிடைப்பதால் அவை குகையைவிட்டு வெளியேற வேண்டிய தேவை ஏற்படவில்லை.
அச்சிலந்திகளை மரபணுப் பகுப்பாய்விற்கு உட்படுத்திய ஆய்வாளர்கள், அவை குகைக்கு வெளியே உள்ள சிலந்திகளிடமிருந்து மாறுபட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அதன்மூலம் குகைச் சூழலுக்கு ஏற்ப அவை தங்களைத் தகவமைத்துக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் முடிவிற்கு வந்தனர்.

