உலகின் ஆக வயதானவருக்கு 117 வயது

உலகின் ஆக வயதானவருக்கு 117 வயது

2 mins read
73e588e5-8e20-4cf7-b3e2-91c34725f06a
117 வயது எத்தல் கேட்டர்ஹம். - படம்: நியூஸ்வையர்
Google News Preferred Icon

லண்டன்: உலகின் ஆக வயதானவரான எத்தல் கேட்டர்ஹம் எனும் மூதாட்டிக்கு வயது 117.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அவர் தமது பிறந்தநாளைக் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் கொண்டாடினார்.

கேட்டர்ஹம், சரீ எனும் கிராமத்தில் பராமரிப்பு இல்லத்தில் வசித்துவருகிறார். சரீ கிராமம், பிரிட்டன் தலைநகர் லண்டனிலிருந்து கிட்டத்தம்டட 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மேலும் ஒரு சாதனை

பிரிட்டனில் இத்தனை காலம் வாழ்ந்திருக்கும் முதல் மனிதர் என்ற பெருமையும் அவரைச் சேரும்.

“குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் கொண்டாடிய பிறந்தநாள் மிகச் சிறப்பாக அமைந்தது. அடுத்த ஆண்டு எப்படி அமைகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்,” என்று அவர் பிரிட்டனின் தேசிய செய்தி நிறுவனமான பிஏ மீடியாவிடம் தெரிவித்தார்.

உலகின் ஆக வயதான ஆணான 113 வயது ஜோவாவ் மரின்யோ நெட்டோவும் வாழ்த்து தெரிவித்தோரில் அடங்குவார். பிரேசிலில் தமது வீட்டிலிருந்து நெட்டோ, கேட்டர்ஹமைக் கொண்டாடும் வகையிலான படத்தைக் கையில் காட்டியதாக கின்னஸ் உலகச் சாதனைகள் தெரிவித்தன.

கேட்டர்ஹம் 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி பிறந்தார். எட்வர்ட் VII மன்னர் காலத்தில் பிறந்த கடைசி மனிதர் இவர். இரண்டு உலகப் போர்கள் நடந்த காலத்தில் வாழ்ந்திருக்கிறார். டைட்டானிக் கப்பல் மூழ்கியது, ர‌ஷ்யப் போராட்டம் ஆகியவற்றையும் தமது காலத்தில் பார்த்திருக்கிறார்.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலையும் எதிர்கொண்டவர் கேட்டர்ஹம். 2020ஆம் ஆண்டு 110வது வயதில் இவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டார். இவரே ஆக அதிக வயதில் அக்கிருமித்தொற்றுக்கு ஆளானவர்.

பிள்ளைகளின் ஆயுளையும் விஞ்சியவர்

குடும்பத்தில் பிறந்த எட்டுக் குழந்தைகளில் கேட்டர்ஹம் இரண்டாவது ஆக இளையவர். தமது 18வது வயதில் பிரிட்டி‌ஷ் குடும்பம் ஒன்றுக்கு குழந்தைப் பராமரிப்பாளராகப் பணியாற்ற இந்தியா சென்றார்.

அங்கு பிரிட்டி‌ஷ் ராணுவ வீரரான மேஜர் நோர்மன் கேட்டர்ஹமை 1931ஆம் ஆண்டு சந்தித்தார். ஈராண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மணமுடித்தனர்.

சில காலம் ஹாங்காங்கில் இருந்த பிறகு அத்தம்பதி தங்களின் இரண்டு மகள்களுடன் சரீயில் குடிபுகுந்தனர்.

கேட்டர்ஹமின் கணவர் 1976ல் மாண்டார். மகள்களின் இறப்புக்குப் பிறகும் கேட்டர்ஹம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

தற்போது இவருக்கு மூன்று பேரப் பிள்ளைகளும் ஐந்து கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் இருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்