அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்யக் கைதிகள் பரிமாற்றம்: பைடன் பெருமிதம்

2 mins read
34c6eec7-8411-4e97-b80f-4a47ed55a0de
அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் பால் வீலன் (இடம்), பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச் (வலமிருந்து இரண்டாவது), ரஷ்ய - அமெரிக்க இரட்டைக் குடியுரிமையுள்ள வானொலி செய்தியாளர் அல்சு குர்மஷேவா (வலது). - படம்: ஏஎஃப்பி

மாஸ்கோ/அங்காரா/வாஷிங்டன்: அமெரிக்காவின் தலைமையில் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கடந்த ஓராண்டாக நடந்த ரகசியப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஐரோப்பிய சிறைகளில் இருந்த எட்டு ரஷ்யக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பதிலுக்கு ரஷ்யாவும் அமெரிக்க, ஐரோப்பியக் கைதிகளை விடுவித்தன.

கைதிகள் பரிமாற்றத்தை ஒருங்கிணைத்த துருக்கி, இரண்டு குழந்தைகள் உட்பட, 10 கைதிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டதாகவும், 13 கைதிகள் ஜெர்மனிக்கும் மூவர் அமெரிக்காவுக்கும் விடுதலையாகி சென்றுள்ளனர் என்று அறிவித்துள்ளது.

போலந்து, சுலோவேனியா, நார்வே, பெலரஸ் ஆகிய நாடுகளில் சிறையிலிருந்த கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 26 கைதிகள் இந்தப் பரிமாற்றத்தால் விடுதலை ஆகியுள்ளனர். துருக்கியின் தலைநகரான அங்காராவிலிருந்து விமானங்களில் கைதிகள் அவரவர் நாடுகளுக்குச் சென்றனர்.

“அரசதந்திரத்துக்கும் நட்புறவுக்கும் கிடைத்த வெற்றி,” என்று நடவடிக்கை எடுத்த மேற்கத்திய அரசாங்கங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டினார். நட்பு நாடுகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமாகியிருக்காது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

மருத்துவப் பரிசோதனைகள், ஆவணப் பரிவர்த்தனைகள் ஆகிய நடைமுறைகள் முடிவுற்றதும், சம்பந்தப்பட்ட கைதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர் என்று அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு கூறியது.

மேற்கத்திய நாடுகளில் கைதான ரஷ்யர்களை நாடு திரும்பவைக்கும் எண்ணத்துடன், தமது சிறையில் இருந்த வெளிநாட்டினரை மன்னித்து, விடுவிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று ரஷ்யா தெரிவித்தது.

ரஷ்யா விடுவித்தோரில் அமெரிக்கப் பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச், முன்னாள் ராணுவ வீரர் பால் வீலன், ரஷ்ய - அமெரிக்க இரட்டைக் குடியுரிமை உள்ள வானொலிச் செய்தியாளர் அல்சு குர்மஷேவா ஆகியோர் அடங்குவர்.

ஜெர்மனி, ரஷ்யக் கைதியான வடிம் கிராசிகோவ் என்பவரை விடுவித்தது. ரஷ்யாவை விட்டு நாடு கடந்து ஜெர்மனியில் குடியேறிய செச்னியர் ஒருவரைக் கொன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர் தண்டனை அனுபவித்து வந்தார்.

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முன்பு நடந்த பனிப்போர் காலத்துக்குப் பிறகு நடந்துள்ள பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம் என்று இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

விடுதலையான அமெரிக்கர்கள் மூவரும் வாஷிங்டன் அருகே, ஜாயின்ட் பேஸ் அன்ட்ரூஸ் விமான நிலையத்தை சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) முற்பகல் 11.40 மணிக்கு சென்றடைந்தனர்.

அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் அவர்களை வரவேற்றனர். விமானத்தைவிட்டு இறங்கியதும் காத்திருந்த குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களைப் பார்த்ததும் ஆரவாரம் செய்தனர்.

ரஷ்யா சென்றடைந்த உளவாளி என்று நம்பப்பட்ட வடிம் கிராசிகோவ் உள்ளிட்ட விடுதலையானோருக்கு வரவேற்பு நிகழ்வை அதிபர் புட்டின் ஏற்பாடு செய்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்