கஸன்: உக்ரேன் போர் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ரஷ்யாவின் கஸன் நகரில் கடந்த இரு நாள்களாக 16ஆவது ‘பிரிக்ஸ்’ மாநாடு நடைபெற்றது.
ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது என்பதைக் காட்டும் நோக்குடன் ரஷ்யா இந்த உச்சநிலை மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பில் இணைய 30க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக புதன்கிழமையன்று (அக்டோபர் 23) அதிபர் புட்டின் தெரிவித்தார்.
“தெற்கிலும் கிழக்கிலும் உள்ள நாடுகள் ‘பிரிக்ஸ்’ அமைப்பில் இணைந்து, அதனை வலுப்படுத்த ஆர்வம் காட்டுவதை நாம் புறக்கணித்துவிடக்கூடாது. அதே நேரத்தில், ‘பிரிக்ஸ்’ அமைப்பை விரிவுபடுத்துவதில் ஒரு சமநிலையைப் பேணுவதும் அதன் செயல்திறன் குறைந்துபோகாமல் தடுப்பதும் அவசியம்,” என்று திரு புட்டின் கூறினார்.
மாநாட்டில் உரையாற்றிய திரு மோடி, பயங்கரவாதம், பணவீக்கம், உணவுப் பாதுகாப்பு, இணைய அச்சுறுத்தல் போன்ற உலகளாவிய சவால்கள் குறித்துப் பேசினார்.
“பயங்கரவாதத்திற்கும் அதற்கு நிதியளிப்பதற்கும் எதிரான போரை நாம் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் எதிர்கொள்ள வேண்டும், நம் நாடுகளைச் சேர்ந்த இளையர்கள் சுயதீவிரவாதப் போக்கை நாடாமல் இருக்க முனைப்பான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்,” என்று திரு மோடி வலியுறுத்தினார்.
அனைத்துலக அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ‘பிரிக்ஸ்’ பங்காளிகள் கூட்டாகக் குரல் எழுப்ப வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
உக்ரேனில் அமைதி நிலவ வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அதிபர் புட்டினிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
உக்ரேன் போர் குறித்து திரு ஜின்பிங், திரு புட்டினுடன் தனிப்பட்ட முறையில் பேசினார்.
ரஷ்யா - உக்ரேன் இடையிலான பதற்றத்தைக் கூடிய விரைவில் தடுக்க ‘பிரிக்ஸ்’ நாடுகள் மூன்று கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திரு ஜின்பிங் வலியுறுத்தினார்.
போர்க்களத்தை விரிவுபடுத்தக்கூடாது, சண்டையை மேலும் தீவிரப்படுத்தக்கூடாது, எந்த ஒரு தரப்பும் இன்னொரு தரப்பிற்குச் சினமூட்டக்கூடாது - இவையே அம்மூன்று கொள்கைகள்.
மேலும், அமைதியைக் கட்டியெழுப்பும், பொதுப் பாதுகாப்பைப் பேணும் அமைப்பாக ‘பிரிக்ஸ்’ திகழ வேண்டும் என்றும் திரு ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
இதனிடையே, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திரு மோடியும் திரு ஜின்பிங்கும் இருதரப்புச் சந்திப்பில் பங்கேற்க இருந்ததாகக் கூறப்பட்டது.
எல்லைப் பிரச்சினை தொடர்பில் இந்தியா - சீனா இடையே அண்மையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், அவர்களின் சந்திப்பு இடம்பெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்முறை ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அதிபர் ஷேக் முகம்மது அல் நஹ்யான், ஈரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியன் உட்பட 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்றனர்.

