புத்ராஜெயா: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தரையும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமையும் சீன அதிபர் ஸி ஜின்பிங் பாராட்டியுள்ளார்.
மலேசியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ஸி, மலேசிய மாமன்னரையும் பிரதமர் அன்வாரையும் சந்தித்துப் பேசினார்.
இருவரின் தலைமையின்கீழ் மலேசியா புதிய உச்சத்தை எட்டும் என்று தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டேன். மலேசியா இயற்கை எழில்மிக்க நாடு. அதன் பல்வேறு கலாசாரங்களுடன் பரிவுமிக்க மக்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தனர். 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளேன். மலேசியா பேரளவில் வளர்ச்சி அடைந்து நவீனமடைந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அதிபர் ஸி கூறினார்.
புதன்கிழமையன்று (ஏப்ரல் 16), பிரதமர் அன்வார் தமது அதிகாரபூர்வ மாளிகையான ஸ்ரீ பெர்டானாவில் அதிபர் ஸிக்கு இரவு விருந்துபசரிப்பு அளித்துக் கௌரவித்தார்.
மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசதந்திர உறவு வலுவாக இருந்து வருவதை அதிபர் ஸி சுட்டினார்.
இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மேலும் வலுவடைந்து வருவதாக அவர் கூறினார்.
“அரசியல் ரீதியாக இருநாடுகளிடையே மதிப்பும் நம்பிக்கையும் உள்ளன. பொருளியல் அடிப்படையில் பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளது. இதன்மூலம் இருநாடுகளும் பலனடைகின்றன. கலாசார ரீதியில் சீனாவும் மலேசியாவும், ஒரு நாடு மற்றொரு நாட்டிடமிருந்து கற்றுக்கொண்டு ஒன்றுக்கொன்று ஊக்குவித்து புத்துணர்ச்சி காண்கின்றன,” என்றார் அதிபர் ஸி.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டில் மலேசியா-சீனா உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியதாக அவர் கூறினார்.
ஒரே இலக்கைக் கொண்ட எதிர்காலத்துக்கு ஏற்ற சமூகத்தை உருவாக்க இருநாடுகளும் இணக்கம் தெரிவித்திருந்ததை அவர் சுட்டினார்.
அதிபர் ஸி மலேசியாவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மாமன்னர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று அதிபர் ஸி புதன்கிழமை (ஏப்ரல் 16) மலேசியா சென்றடைந்தார்.

