தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவால்களை எதிர்கொள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கைகோக்க சீனா தயார்: அதிபர் ஸி

2 mins read
0122b22f-55bd-494f-9181-862775c40e92
மலேசியாவின் புத்ராஜெயாவில் புதன்கிழமை (ஏப்ரல் 16) சீனா-மலேசியா இடையே உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கைகுலுக்கி தோழமை பாராட்டினர். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: ஒருதலைப்பட்சம், தன்னைப்பேணித்தனம் ஆகியவற்றைத் தடுக்க மலேசியாவோடும் பரந்து விரிந்த தென்கிழக்கு ஆசிய வட்டாரத்துடனும் சீனா கைகோக்கும் என்று அதன் அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சீனாமீது வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு தெரிவித்தார்.

திரு ஸி, தமது மலேசிய வருகையின் இரண்டாம் நாளன்று புதன்கிழமை (ஏப்ரல் 16) இரவு வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார்.

ஆசிய குடும்பத்தின் வருங்காலத்தைப் பாதுகாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அப்போது அவர் வலியுறுத்தினார்.

“உலகளாவிய பொருளியல் அதிர்ச்சிகளையும் சவால்களையும் சந்திக்கும் நிலையில் மலேசியாவுக்கும் அதன் வட்டார நாடுகளுக்கும் சீனா துணை நிற்கும்.

“புவிசார் அரசியல் போட்டி, வட்டார அடிப்படையிலான மோதல், ஒருதலைப்பட்சம் மற்றும் தன்னைப்பேணித்தனத்தால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை எதிர்கொள்ள இந்த ஒற்றுமை அவசியம்,” என்றார் திரு ஸி.

வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் திரு ஸியின் கருத்துகளை ஆமோதித்தார்.

மேலும், சீனாவின் வெளிப்புற அணுகுமுறையையும் அவர் பாராட்டினார்.

திரு அன்வார் மேலும் கூறுகையில், “விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கு சில வட்டாரங்களில் தலைகீழாக உள்ளது. தங்கு தடையின்றி வரிகள் விதிக்கப்படுகின்றன. அச்சுறுத்தல்கள் மற்றும் வற்புறுத்தல்களால் ஒற்றுமையுணர்வு மூழ்கடிக்கப்படுகிறது,” என்றார்.

அமெரிக்க வரிவிதிப்புகளால் உலகளாவிய நிச்சயமற்ற நிலை நீடிக்கும் நிலையில், பகுத்தறிவு வாய்ந்த வலிமையான, நம்பகமான கூட்டாளியாகச் சீனா திகழ்வதாகவும் மலேசியப் பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்