பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங், உலகளாவிய நிலையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திற்காகப் புதிய அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் நடைபெறும் ஏபெக் உச்சநிலை மாநாட்டில் சனிக்கிழமை (நவம்பர் 1) உரையாற்றியபோது திரு ஸி அதனைத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நிர்வகிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வர்த்தக ஒத்துழைப்பில் அமெரிக்காவுக்கு மாற்றாகச் சீனாவை நிலைநிறுத்த அதிபர் ஸி முயல்வதாகக் கூறப்படுகிறது.
அனைத்துலக அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் யோசனைகளை அமெரிக்கா ஏற்கெனவே நிராகரித்துள்ளது.
உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பு, நிர்வாக விதிமுறைகளை வகுக்கலாம் என்று சீன அதிபர் குறிப்பிட்டார். அதன் மூலம் ஒத்துழைப்பை ஊக்குவித்து அனைத்துலகச் சமூகம் பயன்பெற வழிசெய்யலாம் என்றார் அவர்.
சீன அதிபரின் கருத்துகளை அந்நாட்டின் அதிகாரத்துவச் செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டது.
“எதிர்கால வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து நாடுகளிலும் வட்டாரங்களிலும் வசிக்கும் மக்களின் நலனுக்காக அவ்வாறு செய்வது அவசியம்,” என்றார் திரு ஸி.
புதிய அமைப்பை வர்த்தக நடுவமான ஷங்காயில் நிறுவலாம் என்று சீன அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏபெக் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. சீன அதிபர் ஸியைச் சந்தித்த பிறகு, அவர் வாஷிங்டனுக்குத் திரும்பினார்.
தொடர்புடைய செய்திகள்
சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைத் தொழில்நுட்பமும் அனைவருக்கும் கிடைக்க ஏபெக் ஆவன செய்யவேண்டும் என்றும் திரு ஸி கேட்டுக்கொண்டார். மின்கலன்கள் முதல் சூரிய சக்தித் தகடுகள் வரையிலான தொழில்துறையில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது.
ஏபெக் மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தை உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. மூத்தோர் எதிர்நோக்கும் சவால்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முதலியன அதில் இடம்பெற்றிருந்தன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஏபெக் மாநாட்டைச் சீனா ஏற்று நடத்தவிருக்கிறது. உற்பத்தித் துறை நடுவமான ஷென்சென் நகரில் அது நடைபெறும். உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட பாதியைப் பிரதிநிதிக்கும் 21 நாடுகள் ஏபெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

