ஹனோய்: இவ்வாண்டின் சக்திவாய்ந்த புயலாகக் கருதப்படும் ‘யாகி’ புயலின் பாதிப்பால் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 12) வெள்ளத்தாலும் மின்வெட்டாலும் பாதிப்படைந்துள்ள போக்குவரத்து சேவைகளாலும் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டிவிட்டது. பல நூறாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மிக மோசமான பாதிப்புக்குள்ளான வியட்னாமில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்ததுள்ளது.
தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் ஒன்பது பேர் உயிரிழந்ததை தாய்லாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியது. தாய்லாந்தின் வட்டாரங்களில் ஒன்று 80 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் மோசமான வெள்ளத்தை இவ்வாண்டு சந்தித்துள்ளது.
வியட்னாமின் வடக்குப் பகுதி, லாவோஸ், தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளில் மிகவும் மோசமான நிலச்சரிவுகளையும் வெள்ளத்தையும் ‘யாகி’ புயல் ஏற்படுத்தியது.
வியட்னாமில் உள்ள 26 மாநிலங்களில் 1,40,000க்கும் அதிகமான வீடுகள் புயலால் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) தெரிவித்துள்ளது.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் நாள்களில் வியட்னாம் அரசாங்கத்திற்கு மருத்துவ, சுகாதாரப் பொருள்களை அனுப்ப இருப்பதாகவும் யுனிசெஃப் கூறியுள்ளது.