சோல்: கிளர்ச்சி ஏற்படுத்தியது, பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் எதிர்கொள்கிறார்.
இந்நிலையில், விசாரணையில் ஒத்துழைக்க அவர் தொடர்ந்து மறுத்து வருவதாக திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) தெரிவிக்கப்பட்டது.
ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பது திரு யூனுக்குச் சிரமமாக இருக்கும் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விசாரணை நடத்தும் அதிகாரிகளைத் தவிர்த்து வேறு யாரும் திரு யூனை நேரில் காண முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15ஆம் தேதி முதல் திரு யூன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அப்போதிலிருந்து அவர் விசாரணையில் ஒத்துழைக்க மறுத்து வருகிறார்.
ஜனவரி 15ஆம் தேதியன்று அவரிடம் பத்து மணி நேரம் வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அதிகாரிகளின் கேள்விகளுக்குத் திரு யூன் பதிலளிக்கவில்லை.
ஜனவரி 19ஆம் தேதியன்று திரு யூனுக்கு எதிராக சோல் நீதிமன்றம் இன்னொரு கைது ஆணை பிறப்பித்தது.
இதன்மூலம் வழக்கு விசாரணை முடியும் வரை அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியும்.
புதிய கைது ஆணை மூலம் அவரது தடுப்புக் காவல் ஆறு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதியன்று ராணுவ ஆட்சியைத் திரு யூன் அமல்படுத்தினார்.
அதையடுத்து, ராணுவத்துக்கும் காவல்துறையினருக்கும் அவர் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.
டிசம்பர் 3ஆம் தேதி இரவு நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயற்சி செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய சோலின் தற்காப்புத்துறை தலைவர் லீ ஜின் வூவுக்கு திரு யூன் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கதவை உடைத்து, தமக்கு எதிராகச் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தரதரவென வெளியே இழுத்துச் சென்று தேவை ஏற்பட்டால் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளும்படி திரு யூன் உத்தரவிட்டதாக அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.