வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அண்மையில் நடந்த அமைதிக் கையெழுத்துச் சடங்கு ஒன்றின்போது பெண் செய்தியாளர் ஒருவரின் தோற்றம் குறித்து கருத்துரைத்ததன் மூலம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கேமராவில் பதிவான அந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியுள்ளது. அரசியல் நிகழ்வுகளில் முறையாகவும் நிபுணத்துவத்துடனும் நடந்துகொள்வது குறித்த விவாதத்தை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் ஒருங்கிணைப்பில், ருவாண்டாவுக்கும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் இடையே நடந்த அமைதிக் கையெழுத்துச் சடங்கின்போது இந்தச் சலசலப்பு ஏற்பட்டது.
அமெரிக்கா, காங்கோ, ருவாண்டா வெளியுறவு அமைச்சர்கள், அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வேன்ஸ், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் இந்தச் சடங்கில் கலந்துகொண்டனர்.
அங்கோலாவைச் சேர்ந்த வெள்ளை மாளிகை நிருபர் ஹரியானா வெரஸ் என்பவரும் செய்தியாளர்களில் ஒருவர். வந்திருந்தோர் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்த திரு டிரம்ப், சற்று நிறுத்தி தமது கவனத்தை வெரஸ் பக்கம் திருப்பினார்.
“அரசியல் ரீதியாக இது சரியாக இருக்காது என்பதால் இதைச் சொல்லக்கூடாது என்று கேரலின் (வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்) கூறினார். இருந்தாலும் சொல்கிறேன், நீங்கள் அழகாக இருக்கிறீர்,” என்றார் திரு டிரம்ப்.
மேலும், நகைத்தவாறு கருத்துரைத்த அவர், “இவ்வாறு சொல்வதால் என் அரசியல் பயணத்தின் இறுதியாக அமையலாம். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் அழகாக இருக்கிறீர். உங்களைப் போன்று கூடுதலான செய்தியாளர்கள் இங்கு இருக்கவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்,” என்று சொன்னார்.
அப்போது அறையில் இருந்த மற்றவர்கள் சிரித்துக்கொண்டிருந்த வேளையில், திரு டிரம்ப்பின் கருத்துகளை செய்தியாளர் வெரஸ் நல்ல முறையில் எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. எனினும், இந்தத் தருணம் இணையத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசதந்திர நிகழ்வில் இவ்வாறு கூறுவது சரியானதன்று என்று பலரும் கருதினர்.

