தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுற்றுலா வழிகாட்டிகளாக முயலும் படித்த இளம் சீனர்கள்

2 mins read
efbf162b-a87c-458e-8bad-4b120f35f538
சுற்றுலா வழிகாட்டுதல் சீனாவில் பிரபலமடைந்து வருகிறது. - படம்: பிக்சல்ஸ்

பெய்ஜிங்: சீனாவில் சுற்றுலா வழிகாட்டிகள் ஆவதற்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறும் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்நாட்டில் உறுதியற்ற வேலை வாய்ப்புகள் நிலவிவரும் வேளையில், உள்நாட்டுச் சுற்றுலாத் துறையில் நிலையான சம்பளம் வழங்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சீனாவின் வருடாந்திரச் சுற்றுலா வழிகாட்டிச் சான்றிதழ் தேர்வுகளுக்கு இவ்வாண்டு கிட்டத்தட்ட 320,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்ற ஆண்டைக் காட்டிலும், இது 45 விழுக்காடு அதிகம்.

‘சீனச் சுற்றுப்பயணச் செய்தி’ எனும் அரசாங்க சார்புடைய தொழில்துறைப் பதிப்பு அத்தகவல்களை வெளியிட்டது.

விண்ணப்பதாரர்களில் சிலருக்குப் பல்கலைக் கழகப் பட்டங்கள் உள்ளன என்றும் அவர்கள் வெளிநாட்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் அது கூறியது.

சீனாவில் பொருளியல் மெதுவடைந்துவரும் நிலையில், சுற்றுலா வழிகாட்டுதல் பிரபலமடைந்து வருகிறது. தொழில்நுட்ப, நிதித் துறைகளில் செய்யப்பட்டுள்ள ஆட்குறைப்பினால், வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மில்லியன்கணக்கான பட்டதாரிகள் குறைவான தொடக்கநிலை பதவிகளுக்குப் போட்டியிடுகின்றனர்.

நிலையான வேலையைத் தேடுவது, நன்கு படித்த சீனர்களுக்கும் மேலும் சவாலாக அமைந்துள்ளது.

இளையோர் வேலையின்மை விகிதம் ஏறக்குறைய 17 விழுக்காடாக உள்ளது. பலர் பகுதிநேர வேலைகளைச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

“சுற்றுலா வழிகாட்டுதல் முன்பெல்லாம் குறுகியகால அல்லது பருவ காலத்திற்கான வேலையாகப் பார்க்கப்பட்டாலும், கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு கண்ணோட்டங்கள் மாறிவிட்டன,” என்று ‘சைனா டிரேடிங் டெஸ்க்’ (China Trading Desk) எனும் மின்னிலக்க விளம்பர, ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் சுப்ரமணிய பாட் கூறினார்.

கடந்த ஆண்டு சீனா உள்நாட்டுப் பயணத்தில் துடிப்பான மீட்சி கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்