சிலி: ஏட்ரியன் சிமன்காஸ் எனும் 24 வயது இளையர் சிலி நாட்டின் மெகெல்லன் நீரிணையில் படகோட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கிட்டத்தட்ட மரணத்தைத் தொட்டு மீண்டுள்ளார்.
தந்தையோடு சென்றிருந்த ஏட்ரியனைப் படகோடு விழுங்கிய கூனல் முதுகுத் திமிங்கிலம் (humpback whale) அதிசயிக்கத்தக்க வகையில் அவரை மட்டும் துப்பிவிட்டது.
கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடந்த சம்பவத்தில் ஏட்ரியனுக்குக் காயமேதும் ஏற்படவில்லை.
மற்றொரு படகிலிருந்த அவரது தந்தை இச்சம்பவத்தைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
திமிங்கிலத்தை அழகான அலைகள் என்று தவறாகக் கருதியதாகக் கூறினார் ஏட்ரியனின் தந்தை.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், முதலில் திமிங்கிலம் தன்னை விழுங்கிவிட்டதாக நினைத்து அஞ்சியதாகக் கூறிய ஏட்ரியன், சில நொடிகளில் உயிர்காப்பு அங்கி மேலே இழுப்பதை உணர்ந்ததாகவும் நீரின் மேற்பரப்புக்கு வந்த பிறகே நடந்ததைப் புரிந்துகொண்டதாகவும் கூறினார்.