பெய்ஜிங்: சில்வண்டுகளின் ரீங்கார ஒலியே கோடைக்காலத்தின் அறிகுறியாகப் பலராலும் கருதப்படுகிறது.
ஆயினும், இந்த ரீங்காரச் சத்தம் மனிதர்களின் செவித்திறனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தொடர்ந்து பல மணிநேரம் இந்த இரைச்சலைக் கேட்பது காது கேட்கும் திறனைப் பாதிக்கக்கூடும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சில வேளைகளில் காது கேளாமையைக்கூட அந்தத் தொடர் இரைச்சல் ஏற்படுத்தலாம் என்கின்றனர் அவர்கள்.
அவர்களின் எச்சரிக்கைப்படியே, சீனாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் முகாமிட்டு தங்கிய 18 வயது மாணவர் ஒருவர் தொடர்ந்து நான்கு மணி நேரம் சில்வண்டுகளின் இரைச்சலைக் கேட்டதால் அவருக்குத் தற்காலிகக் காது கேளாமை பாதிப்பு ஏற்பட்டதாக உள்ளூர் நாளிதழில் செய்தி வெளியானது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சில்வண்டுகளின் ஒலியின் அபாயம் குறித்த கவலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இதேபோன்ற பாதிப்புகள் மேலும் சிலரிடமும் கண்டறியப்பட்டுள்ளன.
பூங்கா பராமரிப்பாளர் ஒருவரும் அடர்ந்த மரங்களும் புதர்களும் நிறைந்த குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் வேறொருவரும் பாதிக்கப்பட்டோரில் அடங்குவர்.
அந்த இருவருக்கும் சில்வண்டுகளின் இரைச்சலில் நீண்ட நேரம் இருந்ததன் காரணமாகவே காது கேட்கும் திறன் குறைந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவித்தன.


