காத்மண்டு: 18 வயதாகும் நிமா ரிஞ்சி ஷெர்பா, உலகின் 8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து 14 சிகரங்களையும் எட்டிய ஆக இளையவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
திபெத்தின் ஷிஷாபங்மா சிகரத்தை அக்டோபர் 9ஆம் தேதி காலை எட்டியதன் மூலம் இந்தப் பெருமையை அவர் அடைந்தார்.
திபெத்திய நேரப்படி காலை 6.05 மணிக்கு (சிங்கப்பூரிலும் காலை 6.05) அவர் அச்சிகரத்தைத் தொட்டார். இதன் மூலம் தனது உறவினர் மிங்மா கியாபு ஷெர்பாவின் உலகச் சாதனையை அவர் முறியடித்ததாகக் கூறப்படுகிறது.
திரு மிங்மா 2019ஆம் ஆண்டு தனது 30வது வயதில் இச்சிறப்பைப் பெற்றார்.
நிமாவின் தந்தை டாஷி லக்பா ஷெர்பா, “வாழ்த்துகள் நிமா! உன் பயணம் தொடர்ந்து எங்கள் அனைவருக்கும் உந்துதலாக அமைகிறது,” என்று ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு டாஷி, அவரது 19வது வயதில் ஆக்சிஜன் உருளை இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஆக இளையவர் என்ற சிறப்புக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிமா, 2022ஆம் ஆண்டு தனது 16வது வயதில் மானஸ்லு சிகரத்தில் முதல்முறையாக ஏறினார். அது 8,163 மீட்டர் உயரமானது.
அதைத் தொடர்ந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு உலகச் சாதனைகளை அவர் முறியடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
2023ல், 8,000 மீட்டருக்கும் உயரமான ஒன்பது சிகரங்களை ஒரே ஆண்டில் ஏறிய பெருமையும் இவரைச் சாரும்.
‘ஷெர்பாபவர்’ எனும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிமா, ஷெர்பாக்களைப் பற்றிய உலகின் கண்ணோட்டத்தை மாற்றியமைக்க இலக்கு கொண்டுள்ளார்.


