நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், யூடியூப் (YouTube) தளத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் வெற்றிபெற்றுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் கலவரம் ஏற்பட்டது. அதன் தொடர்பாகத் திரு டிரம்ப்பின் யூடியூப் கணக்கு முடக்கப்பட்டது.
இதை எதிர்த்து வழக்குத் தொடுத்த திரு டிரம்ப்புக்கு தற்போது இழப்பீடாக 28.4 மில்லியன் வழங்குவதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
ஜனவரி 6 சம்பவத்திற்குப் பிறகு திரு டிரம்ப்பின் சமூக ஊடக கணக்குகளை நிறுவனங்கள் முடக்கின. இதை எதிர்த்து அவர் வழக்குத் தொடர்ந்தார். தற்போது ஒவ்வொரு சமூக ஊடகங்களைத் திரு டிரம்ப் வெற்றி கண்டுவருகிறார்.
தனக்குக் கிடைத்த 28.4 மில்லியன் வெள்ளியை வெள்ளை மாளிகையில் நடக்கும் கட்டுமானப் பணிக்கு அதிபர் டிரம்ப் கொடுத்துள்ளார்.
அந்த நிதி, லாப நோக்கமற்ற அமைப்பான Trust for the National Mall மூலம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
28.4 மில்லியன் வெள்ளி போக யூடியூப் நிறுவனம் மேலும் 3.2 மில்லியன் டாலரை திரு டிரம்ப் சார்ந்த யூடியூப் பக்கங்களுக்கு வழங்குகிறது.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி முதல் யூடியூப் பக்கத்தில் திரு டிரம்ப் காணொளிகளைப் பதிவேற்றம் செய்ய முடியாமல் போனது.
யூடியூபின் நடவடிக்கையைப் பார்த்து ஃபேஸ்புக், டுவிட்டர் (இப்போது எக்ஸ்) தளங்களும் டிரம்ப்பின் கணக்குகளை முடக்கின.
கடந்த பிப்ரவரி மாதம் எக்ஸ் நிறுவனம் டிரம்ப்புக்கு இழப்பீடாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியது.
அதேபோல் ஜனவரி மாதம் மெட்டா நிறுவனம் டிரம்ப்புக்கு இழப்பீடாக 25 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியது.