மலாக்கா: மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், தற்போதைய முதலமைச்சர் அப் ரவூஃப் யூசோவே மீண்டும் முதலமைச்சராகத் தொடர்வார் என்று கூட்டணியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மலாக்கா மாநில ஆளுநர் முகம்மது அலி முகம்மது ருஸ்தமின் ஒப்புதலுக்கு உட்பட்டு இம்முடிவு அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
அலோர் காஜாவில் உள்ள ஜாபெருன் தஞ்சோங் பிடாரா வளாகத்தில் அமைந்துள்ள தேவான் டத்தோ கேப்ட் ஹாஜி அப் கரீமில் உள்ள தஞ்சோங் பிடாரா தொகுதி வேட்புமனுத் தாக்கல் நிலையத்திற்குத் திரு அப் ரவூஃபுடன் சென்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தலில் வாக்களிக்கும் முன்னர், திரு அப் ரவூஃப் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளை மக்கள் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்று திரு ஸாஹிட் கேட்டுக்கொண்டார்.
“அவதூறு பிரசாரங்களையோ முறையற்ற தந்திரங்களால் தேர்தல் பிரசாரங்கள் பாழாவதையோ நாங்கள் விரும்பவில்லை; மலாக்காவில் தேர்தல் பிரசாரச் சூழல் அமைதியாகவே இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்,“ என்று அவர் கூறினார்.
மேலும், தமது கூட்டணிக் கட்சியான பெரிக்கத்தான் நேஷனலுடன் இணைந்து, மலாக்கா தேர்தலில் உள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி போட்டியிடுவதை அவர் உறுதிப்படுத்தினார்.
“அம்னோ 18 தொகுதிகளிலும் மலேசியச் சீனர் சங்கம் (மசீச) நான்கு தொகுதிகளிலும் மலேசிய இந்திய காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன; எஞ்சியுள்ள தொகுதிகளில் எங்கள் கூட்டணிக் கட்சியான பிஎன் போட்டியிடுகிறது.
மலாக்கா மாநிலத் தேர்தலை மசீச புறக்கணிக்கும் என்றோ குறைந்தபட்சம் இந்த இடப் பங்கீட்டில் அதிருப்தி அடையும் என்றோ பலர் எதிர்பார்த்திருந்த வேளையில், இது எங்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது. ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை; மாறாக, ‘மசீச’வுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
16வது மலாக்கா மாநிலத் தேர்தல், நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்கூட்டியே வாக்களிப்பது நவம்பர் 10ஆம் தேதி இடம்பெறும்.
