வாஷிங்டன்: ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்படுவதற்கு ரஷ்யா அல்ல, உக்ரேன்தான் தடையாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (ஜனவரி 14) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அதிபர் அலுவலகத்தில் திரு டிரம்ப்புடன் பிரத்யேக நேர்காணலை நடத்தியது.
அப்போது உக்ரேன்மீதான நான்காண்டு படையெடுப்பை முடித்துக்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தயாராக இருப்பதாய்த் திரு டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அதிகம் ஈடுபாடு காட்டுவதாகத் தெரியவில்லை என்றார் அவர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மூண்டுள்ள ஆகப் பெரிய தரைவழி தாக்குதலாக ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை வர்ணித்த ராய்ட்டர்ஸ், அமெரிக்கா முன்னெடுத்த சமரசப் பேச்சால் போர் ஏன் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை என்று கேட்டது.
அதற்கு, “ஸெலென்ஸ்கி,” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார் திரு டிரம்ப்.
திரு ஸெலென்ஸ்கிக்கும் திரு டிரம்ப்புக்கும் இடையே நீண்டகாலமாக நிலையற்ற உறவு நீடித்தது.
அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீஃப் விட்காஃப்பும் திரு டிரம்ப்பின் மருமகன் திரு ஜேரட் குஷ்னரும் நடத்திய சமரசப் பேச்சில் உக்ரேனிய அதிகாரிகள் அண்மையில் கலந்துகொண்டனர்.
எனினும், உக்ரேன், அமெரிக்கா உள்பட ஐரோப்பியத் தலைவர்கள் முன்வைத்த நிபந்தனைகளுக்குத் திரு புட்டின் ஒப்புக்கொள்வாரா என்ற ஐயம் நீடிப்பதாகச் சில ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அனைத்துலகப் பொருளியல் மாநாட்டில் திரு ஸெலென்ஸ்கியைத் திரு டிரம்ப் சந்திப்பாரா என்ற கேள்விக்கு, “அவர் அங்கிருந்தால் சந்திப்பேன்,” என்றார்.
திரு ஸெலென்ஸ்கி ஏன் சமரசப் பேச்சுக்கு ஒப்புக்கோள்ளாமல் இருக்கிறார் என்ற கேள்விக்குத் திரு டிரம்ப் விரிவான பதில் அளிக்கவில்லை.

