ஐரோப்பிய இளையர் காற்பந்துப் போட்டியில் மின்னிய 12 வயது சிங்கப்பூர் தமிழர்

ஐரோப்பிய இளையர் காற்பந்துப் போட்டியில் மின்னிய 12 வயது சிங்கப்பூர் தமிழர்

4 mins read
70b5991b-84a3-4121-bedb-bdd9dc751562
லயன் சிட்டி சேலர்ஸ் இளையர் குழுவின் விளையாட்டாளர் அயான் அப்துல் ரஹீம். - படம்: அப்துல் ரஹீம்

நம்முள் பலர் 12 வயதில் தொடக்கப் பள்ளி இறுதி தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருந்திருப்போம். ஆனால், அயான் அப்துல் ரஹீம், ஏப்ரல் மாதம் போர்ச்சுகலில் நடந்த எல்ஜிஎஸ்பி அனைத்துலக இளையர் காற்பந்துப் போட்டியில் லயன் சிட்டி செய்லர்ஸ் குழுவின் விளையாட்டாளராகச் சென்று போட்டியிட்டார்.

அயான் அக்குழுவிலிருந்த ஒரே இந்தியரும் தமிழரும் ஆவார்.

தற்போது ஓயேசிஸ் தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை ஆறில் பயின்று வரும் இவர், போட்டியின் தகுதி சுற்றின் முதல் ஆட்டத்திலும் இறுதி ஆட்டத்திலும் தனது அணி வெற்றிபெற உதவிய கோல்களை அடித்தார்.

“ரியோ அவென்யூ குழுவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நான் விளையாட்டின் ஆரம்பக்குழுவில் இல்லை. மாற்று விளையாட்டாளராகத் தான் இருந்தேன். ஆட்டம் 0-0 என்றிருந்த நிலையில், எனக்கு இறுதி 12 நிமிடங்கள் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்த போது நான் கோல் அடித்ததால் நாங்கள் ஆட்டத்தை வென்றோம்,” என்றார் அயான்.

“லைக்ஸ்சோஸ் காற்பந்துக் குழுவை எதிர்த்த தகுதி சுற்றின் இறுதி ஆட்டத்தில் 1-1 என்று இருந்த நிலையில், நான் வெற்றி கோலை அடித்தேன்.”

அயானின் பயணத்தில் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரது தந்தை, அப்துல் ரஹீம், தனது மகனை எண்ணி பெருமைக்கொள்வதாகக் கூறினார்.

“என்னால் இன்னும் அயான் முதல் ஆட்டத்தில் விளையாடியதை மறக்க முடியவில்லை. குறுகிய நேரம் விளையாடி இருந்தாலும் அவர் விளையாடிய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் வெற்றி கோலை அடித்தபோது, நான் என்னையே மறந்து அனைவருடனும் சேர்ந்து கத்தி, ஆரவாரம் செய்துக்கொண்டிருந்தேன்,” என்றார் அயானை ஆதரிக்க ஐரோப்பா சென்றிருந்த 45 வயதான கட்டடப் பொறியாளர் அப்துல்.

ஐரோப்பாவில் சென்று விளையாடியது முற்றிலும் மாறுப்பட்ட அனுபவமாக இருந்ததென கூறினார் அயான்.

“ஐரோப்பாவில் மிகவும் குளிராக இருந்ததால் மூச்சுவிடுவதே கடினமாக இருந்தது. அதுமட்டுமின்றி, அங்கிருந்த விளையாட்டாளர்கள் எங்களைவிட பெரிதாக இருந்தனர், வேகமாக ஓடினர். அதனால், அங்கு போட்டியிடுவது கடினமாக இருந்தாலும், திறன் அளவில் நாங்கள் மிகவும் பின்தங்கிவிடவில்லை,” என்று அவர் கூறினார்.

அப்போட்டியில் போட்டியிட்ட 20 குழுக்களில் லயன் சிட்டி செய்லர்ஸ் மட்டுமே ஐரோப்பாவைச் சேராக் குழு. அக்குழு, அந்தப் போட்டியில் ஏழு ஆட்டங்களில் நான்கை வென்று 12ஆம் இடத்தைப் பிடித்தது.

அயான் சிறு வயதிலிருந்தே துடிப்பான சிறுவன் என்பதைத் தான் உணர்ந்ததாகவும் அந்த துடிப்பைச் சரியான திசையில் திருப்ப காற்பந்து நல்ல தளமாக அமைந்ததென அப்துல் ரஹீம் கூறினார்.

“நான் ஒரு தீவிர காற்பந்து ரசிகன் என்பதால் நிறைய காற்பந்தாட்டங்கள் பார்ப்பேன். அயான் வீட்டின் கீழ் காற்பந்து விளையாடுவதைப் பார்த்தபோது இயற்கையாகவே அவருக்கு நல்ல திறன் இருப்பதுபோல் தோன்றியது. அதனால், அவரது ஒன்பதாம் வயதில் அவரை ஃபிளேர் காற்பந்துப் பயிற்சி நிலையத்தில் சேர்த்தேன்.”

அக்காற்பந்துப் பயிற்சி நிலையத்தில் தொடங்கிய அயானின் பயணம் இப்போது லயன் சிட்டி செய்லர்ஸின் 13 வயதுக்கும் குறைந்தோருக்கான இளையர் குழுவில் தொடர்கிறது.

வாரத்திற்கு ஐந்து முறை காற்பந்துப் பயிற்சிக்குச் செல்லும் அயான் தனது பள்ளி ஹாக்கி குழுவிலும் இருக்கிறார்.

“சென்ற ஆண்டு எங்கள் பள்ளி ஹாக்கிக் குழு சிங்கப்பூரில் முதல் இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தோம்,” என்று அவர் கூறினார்.

“இவ்வாண்டு தொடக்கப் பள்ளி இறுதித்தேர்வு ஆண்டு என்பதால் படிப்பு, காற்பந்து, ஹாக்கி என அனைத்தையும் சமாளிப்பது கடினமாக இருந்தாலும், என் பெற்றோர் எனக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். என் தந்தை எனக்கு துணைப்பாட வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். பயிற்சி இல்லாத நேரங்களில் பாடங்களில் கவனம் செலுத்துவேன். அவை உதவியாக இருக்கின்றன.”

மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் ரசிகரான அயான், எதிர்காலத்தில் லயன் சிட்டி செய்லர்ஸின் முதல்நிலைக் குழுவில் முழு நேர தொழில்முறை காற்பந்தாட்டக்காரர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்.

“பிடித்த குழு மான்செஸ்டர் யுனைடெட் என்றாலும், அங்கு விளையாடுவது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும். அதனால், முதலில் லயன் சிட்டி செய்லர்ஸ் குழுவில் விளையாட விரும்புகிறேன்,”

“ஆனால், அதே நேரத்தில் என் தந்தை என்னிடம் கூறுவது போல், பட்டக்கல்வி பயில வேண்டும் என்ற இலக்கும் உள்ளது. ஏனெனில், காற்பந்து பயணம் எப்படிச் சென்றாலும் பட்டம் கைகொடுக்கும்,” என்று அவர் கூறினார்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு செயின்ட் ஜோசஃப் அனைத்துலக கல்வி நிலையத்தில் உயர்நிலைக் கல்வி பயில உபகாரச் சம்பளம் பெற்றுள்ள ஆறு லயன் சிட்டி செய்லர்ஸ் இளைய விளையாட்டாளர்களுள் அயானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்