சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் ஈராண்டுகள் பயில உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார் 14 வயது ரித்திகா சோமசுந்தரம்.
சிங்கப்பூர் பூப்பந்துச் சங்கமும் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியும் இணைந்து வழங்கும் வெளிநாட்டு விளையாட்டு உபகாரச் சம்பளத்தோடு 2026ஆம் ஆண்டு சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் சேரவிருக்கிறார் ரித்திகா.
அண்மையில், தாய்லாந்தில் நடைபெற்ற ‘யோனெக்ஸ் சிபி இளையர் அனைத்துலகத் தொடர் 2025’ (Yonex-CP Junior International Series 2025) போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் இந்த இளையர்.
மேலும், கடந்த ஆண்டு இந்தோனீசியாவில் நடந்த போட்டியிலும் மலேசியாவில் நடந்த போட்டியிலும் ஒற்றையர் பிரிவில் இவர் தங்கம் வென்றார்.
ஸ்பெயின், இந்தோனீசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாடி பதக்கங்களை வென்றுள்ள ரித்திகா, ஆறு வயதில் பூப்பந்து விளையாடத் தொடங்கினார்.
இவருக்குப் பூப்பந்து விளையாட்டை அறிமுகப்படுத்தியவர் தந்தை சோமசுந்தரம் திருமலை, 48.
“அப்பாவிடம் பெற்ற அடிப்படைப் பயிற்சியோடு ஒரு போட்டியில் கலந்துகொண்டு தோல்வி அடைந்தபோதுதான், மேலும் முயற்சியும் முறையான பயிற்சியும் தேவை என்பதை உணர்ந்தேன்,” என்றார் ரித்திகா.
எட்டு வயதிலிருந்தே இவர் முறையாகப் பயிற்சி பெறத் தொடங்கினார். கடந்த ஆறு ஆண்டுகளில் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஈஸ்ட் ஸ்பிரிங் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது, கடந்த ஆண்டு இளையர் செயல்திறன் திட்டத்திற்குத் (Junior Performance Programme) தேர்ந்தெடுக்கப்பட்டு கடுமையான தொடர் பயிற்சியைப் பெற்றார் ரித்திகா.
“அத்திட்டத்தில் இணைந்த பிறகு உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று முறையாக உடலை விளையாட்டுக்காகத் தயார்ப்படுத்தத் தொடங்கினேன்,” என்று தமது திறமையை மேம்படுத்த எடுத்துவரும் முயற்சிகளை விவரித்தார் இப்பூப்பந்து வீராங்கனை.
விளையாட்டோடு படிப்பிலும் கவனம் செலுத்தி நேரத்தைச் சரியாக நிர்வகிப்பது மிகவும் கடினம். எனினும், ரித்திகா தொடர்ந்து கடுமையாக உழைத்து வருவதற்கு பூப்பந்தில் அவருக்கு இருக்கும் ஆர்வமே காரணம் என்கிறார் ரித்திகாவின் தாயார் தேவி சோமசுந்தரம், 43.
ஒவ்வொரு போட்டிக்குச் செல்லும்போதும் ரித்திகாவின் பள்ளியில் கொடுக்கப்பட்ட ஆதரவு அவரது படிப்புக்கு இன்றியமையாததாக விளங்கியது.
“ரித்திகாவின் வெற்றிக்குப்பின் பல தியாகங்களும் இருக்கின்றன,” என்று கூறிய திருவாட்டி தேவி, இரண்டு ஆண்டுகளாக விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு செல்வதைக் கூடத் தவிர்த்துவிட்டதாகப் பகிர்ந்துகொண்டார்.
பூப்பந்தில் கவனம் செலுத்தி விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக ரித்திகா 2026ஆம் ஆண்டில் உயர்நிலை 3ஆம் வகுப்புக்காகச் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் சேரவிருக்கிறார்.
தொடர்ந்து கடுமையான பயிற்சி, அயராத உழைப்பின் மூலம் பல போட்டிகளில் கலந்துகொண்டு, சிங்கப்பூரைப் பிரதிநிதித்து ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே ரித்திகாவின் கனவு.

