கற்றலுக்குக் கைகொடுக்கும் செயற்கை நுண்ணறிவு

மாணவச் செய்தியாளர் கட்டுரை

கற்றலுக்குக் கைகொடுக்கும் செயற்கை நுண்ணறிவு

படம்: செயற்கை நுண்ணறிவு

23 Nov 2026 - 6:30 am

3 mins read

இராஜகுமார் ரெஜினா கிறிஸ்டா

மின்னல் வேகத்தில் வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ), பல துறைகளுக்கு அடித்தளமாகவும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத கருவியாகவும் மாறிவிட்டது. 

அவ்வகையில், கல்வித் துறையிலும் செயற்கை நுண்ணறிவு கோலோச்சி வருகிறது. சேனல் நியூ‌ஸ் ஏ‌ஷியா ஊடகத்தின் ‘டாக்கிங் பாயின்ட்‘ நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட ஆய்வில், உயர்நிலைப்பள்ளிகள் முதல் உயர்கல்வி நிறுவனங்கள்வரை பயிலும் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட 500 சிங்கப்பூர் மாணவர்கள் பங்கேற்றனர். 

உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் 84 விழுக்காட்டினர், தங்கள் வீட்டுப்பாடங்களுக்காக வாரத்திற்கு ஒருமுறையாவது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது அந்த ஆய்வின்மூலம் தெரியவந்தது.

அவர்களில் 29 விழுக்காட்டினர் வாரத்தில் பலமுறை அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். எஞ்சியவர்கள் மாதம் ஒருமுறையேனும் அதனைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்.

மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உதவியாக அமைய பல்வேறு செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உருவாகியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக ‘பெர்பிளெக்சிட்டி.ஏஐ’ (Perplexity) திகழ்கிறது. 

மாணவர்களின் ஆய்வுகளை எளிதாக்க ‘பெர்பிளெக்சிட்டி ஏஐ’  பெரிதும் உதவுகிறது. அது நம்பகமான இணையத்தளங்களைக் கண்டறிந்து, பாடத்திட்டங்களுக்குத் தேவையான துல்லியமான தகவல்களைப் பெற உதவுகிறது.

அத்துடன், கடினமான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், தகவல்களைச் சரிபார்க்கவும், அண்மைத் தகவல்களை வழங்கவும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வீட்டுப்பாடம் செய்யும்போது ஏதேனும் ஒரு கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால், அது அந்த வினாவைத் தீர்ப்பதற்கான விரிவான விளக்கங்களைத் தமக்கு வழங்குவதாக சங்காட் சாங்கி உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 16 வயது அருள் செல்வமணி ஜெனிஷா தெரிவித்தார்.

“அதுமட்டுமன்றி, அந்தக் கேள்வியைப்போல பல வினாக்களை உருவாக்கித் தருகிறது. இதனால், எதிர்காலத்தில் இதுபோன்ற கேள்விகளை எப்படி அணுகி விடையளிக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் எந்தெந்த இடங்களில் கவனம் செலுத்தினால் எளிதாகத் தீர்வுகாண முடியும் என்பதையும் அது எனக்குக் கற்றுக்கொடுக்கிறது,” என்று அவர் சொன்னார்.

மேலும், கணிதம், அறிவியல், வரலாறு போன்ற பாடங்களில் உள்ள கடினமான கருத்துகளை எளிய சொற்களிலும் எடுத்துக்காட்டுகளுடனும் விளக்கிப் புரியவைக்கிறது. அது மாணவர்களின் கற்றலை வளர்க்க உதவியாக இருக்கிறது.

அத்துடன், ‘கிராமர்லி’ செயலி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தத் துணைபுரிகிறது. சிங்கப்பூரில் ஆங்கில மொழிப் புழக்கமே அதிகம் என்பதால் மாணவர்கள் அம்மொழியில் சிறந்து விளங்குவது இன்றியமையாதது. 

மாணவர்கள் எழுதும் கட்டுரைகள், ஆங்கிலம் தொடர்பான பணிகளில் காணப்படும் இலக்கணப் பிழைகள், எழுத்துப்பிழைகள், வாக்கிய அமைப்பு ஆகியவற்றில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய ‘கிராமர்லி’ செயலி பயனுள்ளதாகத் திகழ்கிறது.

“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும்போது ஏற்படும் பெருஞ்சவால் என்னவெனில், முழுக் கட்டுரையையுமே அதன்மூலம் எழுதிவிடத் தோன்றும் தூண்டுதல்தான். அது நமது கற்றல் திறனைப் பாதிக்கும். ஆனால், ‘கிராமர்லி’ ஒரு திருத்துநராகச் செயல்பட்டு, ஏன் மாற்றங்கள் தேவை என்பதை விளக்குவதன்மூலம் அந்தச் சவாலை எதிர்கொள்ள எனக்கு உதவியது. அதனால், என்னால் என் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள முடிந்தது,” என்று டன்மன் உயர்நிலைப்பள்ளி மாணவர் ராஜகுமார் ரேகன் கிறிஸ்டோ, 13, கூறினார்.

மேலும், மாணவர்கள் ஒரே மாதிரியான சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், பொருத்தமான மாற்றுச் சொற்களையும் சிறந்த சொற்றொடர்களையும் அது பரிந்துரைக்கிறது. இதன்மூலம், மாணவர்களின் சொல்வளம் விரிவடைவதோடு அவர்களின் எழுத்துத் திறனும் மேம்படுகிறது.

ஆகையால், மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியை மட்டுமே சார்ந்திருக்காமல், தாங்களாகவே தங்களது மொழித்திறனை மேம்படுத்திக்கொண்டு சிறந்தமுறையில் கல்வி கற்க முடியும். இருப்பினும், ‘கிராமர்லி’ வழங்கும் திருத்தங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றைப் புரிந்துகொண்டு பயன்படுத்துவது அவசியமாகும்.

இறுதியாக, ‘பெர்பிளெக்சிட்டி’, ‘கிராமர்லி’ போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் அறிவுத்திறன், மொழித்திறன், தாமாகக் கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றையும் வளர்க்க உதவுகின்றன. 

இத்தகைய தொழில்நுட்பங்களைப் பொறுப்புடனும் சரியான முறையிலும் பயன்படுத்தினால், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு எதிர்காலத்திலும் பல்வேறு சாதனைகளைப் படைக்க முடியும். அதே வேளையில், செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சார்ந்திருக்காமல், தானாகச் சிந்தித்துக் கற்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்