சிவாணி சக்திவேல்
வெண்பலகைகளும் பாடநூல்களும் நிறைந்திருந்த வகுப்பறைகளில் இன்று மடிக்கணினிகளும் இணையக் கற்றல் தளங்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) அதிவேக வளர்ச்சி, கற்பிக்கும் முறையையும் மாணவர்களது கற்றல் முறையையும் மெதுமெதுவாக மாற்றியமைத்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவை மனிதர்கள் ஆள்கின்றனரா அல்லது அதன் ஆளுகைக்குள் மனிதர்கள் சிக்குண்டுள்ளனரா என்பது இன்றைய உலகளாவிய கல்விச் சூழலில் மிக முக்கியமான விவாதமாக இருக்கிறது.
ஒரு பாடத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும், புதிய சிந்தனைகளை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது கற்றல் மேம்பாடாகும்.
ஆனால், நம்முடைய மூளையைப் பயன்படுத்தாமல் வீட்டுப் பாடங்களையும் கட்டுரைகளையும் அதனைப் பயன்படுத்தியே எழுதி முடிப்பதால் சிந்தனைத்திறன் மழுங்கிப் போக வாய்ப்புண்டு.
அண்மையில் தமிழ் முரசின் ‘இளைய தலைமுறை’ தளத்தின் ‘கொஞ்சம் டெலுலு நிறைய சொலுலு’ வலையொளியில் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பங்கைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.
செயற்கை நுண்ணறிவை ஒரு துணைக் கருவியாகப் பயன்படுத்துவதற்கும், அதனையே முழுமையாகச் சார்ந்து வாழ்வதற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை 22 வயது ஸ்ருதிகா குமார் எடுத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய பிறகு ஒரு கருத்தை என்னால் இன்னும் விளக்கிக் கூற முடிந்தால், அதனை நான் ஒரு துணைக்கருவியாக பயன்படுத்தி உள்ளேன் என்று பொருள்.
“ஆனால், அதனுடைய உதவியின்றி என்னால் எந்தவொரு விளக்கமும் தரமுடியவில்லை என்றால் எனக்குப் பதிலாக அதுதான் சிந்தித்துள்ளது என்பதே உண்மை,” என்றார் அவர்.
சிந்தனைத் திறனை வளர்ப்பதே கல்வியின் நோக்கம். அதனைச் செயற்கை நுண்ணறிவிடம் அடகு வைத்து வெறும் மதிப்பெண்களை மட்டும் பெறுவது அறிவாகாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
அதிகரிக்கும் திரை நேரம்
இன்றைய காலகட்டத்தில் ஆராய்ச்சி, கற்றல், பயிற்சி என அனைத்திற்கும் திரைகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
இவ்வகையான தொழில்நுட்பப் பயன்பாடு, மாணவர்களின் அன்றாடத் திரை நேரத்தைப் பெரிதும் அதிகரித்துள்ளது.
பல்வேறு உலகளாவிய கல்வி, மருத்துவ ஆய்வுகளின்படி, இந்த அதிகப்படியான திரை நேரம் மாணவர்களின் உடல், மனநலத்தைப் பாதிப்பதோடு நின்றுவிடுவதில்லை.
அது சக மனிதர்களுடனான நேரடித் தொடர்புகளைக் குறைத்து, தனிமைப்படுத்துதலையும் கவனச் சிதறல்களையும் ஏற்படுத்துகிறது என்ற கவலை எழுந்துள்ளது.
ஈடுசெய்ய முடியாத அரும்பணி
அதிகரித்துவரும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என்னதான் புயல் வீசினாலும், அதற்கு ஒருபோதும் அசைந்து கொடுக்கக்கூடாத ஒன்று என்ன என்று வலையொளியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆசிரியர் பணி என்று ஆணித்தரமாக விடையளித்தார் பாலு விஜயலட்சுமி, 18.
“செயற்கை நுண்ணறிவை உருவாக்கியதே ஓர் ஆசிரியர்தான். அப்படிப் பார்த்தால், மாணவர்களுக்கும் அதே செயற்கை நுண்ணறிவிற்கும் வழிகாட்டுவதற்கு ஓர் ஆசிரியர் என்றென்றும் தேவை,” என்றார் அவர்.
ஆசிரியப் பணியின் முக்கியத்துவத்தை மற்றொரு கோணத்திலிருந்து விளக்கும் வகையில், மனித உணர்வு சார்ந்த பிணைப்பை முன்வைத்தார் ஸ்ருதிகா.
“ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு பாடத்தை மட்டும் கற்பிப்பவர் அல்லர்; அவர்களிடத்தில் தன்னம்பிக்கையை விதைத்து, வாழ்க்கைத்திறன்களைக் கற்றுத்தருபவர்களும்கூட. அதற்குச் செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் ஈடுகொடுக்க முடியாது,” என்று அவர் விளக்கினார்.
தொழில்நுட்ப அடிப்படையில், கணினிகளும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளும் உடனுக்குடன் துல்லியமான தரவுகளையும் தகவல்களையும் வழங்கிவிட முடியும்.
ஆயினும், ஒரு மாணவனின் கற்றல் குறைபாடுகள், சோர்வு, உணர்வு சார்ந்த தேவைகளைக் கண்டறிந்து, அவரை ஊக்குவித்து, தன்னம்பிக்கை கொள்ளச் செய்வதில் ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பு இன்றியமையாதது .
செயற்கை நுண்ணறிவும் சிந்தனைத் தூண்டலும்
கல்வியில் செயற்கை நுண்ணறிவு என்பது கற்பித்தலையும் கற்றலையும் மேம்படுத்தும் ஒரு சிறந்த திசைகாட்டி மட்டுமே.
ஒரு திசைகாட்டி நாம் செல்ல வேண்டிய சரியான பாதையைக் காட்ட முடியுமே தவிர, நமக்காக அந்தப் பாதையில் நடந்து செல்ல முடியாது.
இலக்கை அடைய வேண்டிய உழைப்பையும் அதற்கான சிந்தனையையும் மாணவர்களே மேற்கொள்ள வேண்டும்.
தகவல்களைத் திரட்டுவதை எளிதாக்கும் இந்தத் தொழில்நுட்பம், இறுதி முடிவெடுக்கும் மனித மூளையின் ஆற்றலுக்கு மாற்றாக முடியாது.
இத்தகைய கருத்துகளை ஓர் உவமையுடன் தொகுத்துக் கூறினார் 25 வயது சஞ்சய் முத்துக்குமரன்.
“செயற்கை நுண்ணறிவு நமது சிந்தனையை மேலும் தூண்டி, வேகமாக முன்னோக்கிச் செல்ல உதவும் ஒரு மிதிவண்டியாகத்தான் என்றும் திகழவேண்டும்.
“அந்த மிதிவண்டி, நமது இயக்கத்தையே முடக்கிவிடும் ஒரு சக்கர நாற்காலியாக என்றைக்கும் மாறிவிடக்கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.

