ஆசியான் இளையர் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் 2024

ஆசியான் இளையர் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் 2024

2 mins read
e5771bef-4ff1-4034-94fb-1be5a9158efe
எஸ் ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வுக் கழகப் பள்ளியின் அரசியல் வன்முறை, பயங்கரவாத ஆராய்ச்சிக்கான அனைத்துலக நிலையத்தில் மூத்த பகுப்பாய்வாளராக உள்ள காளிச்சரண் வீரசிங்கம், 35. - படம்: சாவ்பாவ்

தேசிய இளையர் மன்றமும் சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் ஆசியான் இளையர் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம், அதன் 6வது பதிப்பாக நவம்பர் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.

பத்து ஆசியான் உறுப்புநாடுகளிலிருந்தும் மொத்தம் 44 இளம் தலைவர்களை ஒன்றிணைத்துள்ள இவ்வாண்டின் நிகழ்வில் 12 சிங்கப்பூரர்களும் முதன்முறையாக திமோர்-லெஸ்டேயிலிருந்து 2 பங்கேற்பாளர்களும் கலந்துகொண்டார்கள்.

2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆசியான் இளையர் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம், பல்வேறு துறைகளின் வளர்ந்துவரும் தலைவர்களை உள்ளடக்கிய வலுவான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. அத்துடன் மூத்த கொள்கை வகுப்பாளர்கள், ஆழ்ந்த நிபுணத்துவமுடைய தலைவர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல்களில் சிக்கலான விவகாரங்களைப் பற்றிய தெளிவான, ஆழமான புரிதலையும் பெற முடிகிறது.

‘இணைப்பையும் மீள்திறனையும் மேம்படுத்துதல்’ என்ற இவ்வாண்டு நிகழ்வின் கருப்பொருளானது, லாவோஸின் ஆசியான் தலைமைத்துவத்துடன் ஒத்துப்போவதோடு ஒத்துழைப்பு, புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் ஆசியான் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிகழ்வின் முதல் பகுதியில் இளம் தலைவர்கள் சிங்கப்பூரில் நான்கு நாள் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றனர். இரண்டாம் பகுதியில் லாவோஸிற்குப் பயணம் மேற்கொண்டு நான்கு நாள் வெளிநாட்டு நிகழ்வில் பங்கேற்று, நிறுவன வருகைகளிலும் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்கள்.

“ஆசியான் நாடுகளின் தனியார், பொது, மக்கள் துறைகளின் பலத்தை ஒன்றுதிரட்டுவதன் வழியாகவும் புத்தாக்கத்தை வளர்ப்பதன் வழியாகவும் நமது இணைப்புகளை மேலும் வலுவாக்குவதன் வழியாகவும் நாம் நமது எதிர்காலத்திற்குத் தயாராகிறோம். அத்துடன் அந்த எதிர்காலத்தைத் தொடர்ந்து வடிவமைக்கிறோம்,” என்று நவம்பர் 3ஆம் தேதி ஆசியான் இளையர் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கூறினார்.

அனைவரும் ஒன்றிணைந்தால் சவால்களை எதிர்கொண்டு உலகிற்கு முன்னேற்றத்தையும் வளமையையும் பரப்பும் ஒரு முன்னுதாரணமாக ஆசியான் உருவெடுக்கலாம் என்றார் அவர்.

இவ்வாண்டு பங்கேற்ற இளம் தலைவர்களில் ஒருவர் காளிச்சரண் வீரசிங்கம், 35. இவர், எஸ் ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வுக் கழகப் பள்ளியின் அரசியல் வன்முறை, பயங்கரவாத ஆராய்ச்சிக்கான அனைத்துலக நிலையத்தில் மூத்த பகுப்பாய்வாளராக உள்ளார்.

வேறுபடும் கண்ணோட்டங்களை ஏற்றுக்கொண்டு, நமது வட்டாரத்தில் தீவிரவாதச் சிந்தனை போன்ற வளர்ந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இளம் தலைவர்கள் ஒன்றுதிரண்டால் ஆசியான் வட்டாரத்தில் அவர்களால் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

“இளம் தலைவர்களாகிய நாம், மற்ற ஆசியான் நாடுகளுடன் எவ்வாறு கைகோர்த்து, சிறந்ததொரு தாக்‌கத்தை ஏற்படுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்து கலந்துரையாட இந்த நிகழ்ச்சி பொருத்தமான ஒரு தளமாக இருந்தது,” என்றார் காளிச்சரண்.

இந்த வாய்ப்பின்மூலம் வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் தலைவர்களுடன் தாம் வலுவான தொழில்முறை தொடர்புகளை உருவாக்‌க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

வேறுபடும் கண்ணோட்டங்களை ஏற்றுக்கொண்டு, நமது வட்டாரத்தில் தீவிரவாதச் சிந்தனை போன்ற வளர்ந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இளம் தலைவர்கள் ஒன்றுதிரண்டால் ஆசியான் வட்டாரத்தில் அவர்களால் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
காளிச்சரண் வீரசிங்கம், 35
குறிப்புச் சொற்கள்