இணையவெளியில் கவனத்துடன் செயல்பட வலியுறுத்திய கலந்துரையாடல்

இணையவெளியில் கவனத்துடன் செயல்பட வலியுறுத்திய கலந்துரையாடல்

படம்: சுபலக்‌ஷ்மி

16 Nov 2026 - 6:00 am

2 mins read

இணையத்தில் புதுப்புது வசதிகள் வந்தாலும் அவற்றில் ஆபத்துகளும் ஒளிந்திருக்கின்றன.

குறிப்பாக, இளையர்களிடையே பிறரின் தகவல்களை இணையத்தில் பரப்புவது (Doxxing), செயற்கை நுண்ணறிவுமூலம் பிறரது படங்களின் தோற்றத்தை  உருமாற்றுவது (AI Manipulation), மோசடிகள் (Scams) போன்ற சிக்கல்கள் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளன.

இதன் தொடர்பில் இணையப் பாதுகாப்பு ஆணையம் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைப்படி, பாதிக்கப்பட்டோரில் 20 விழுக்காட்டினர் 18 வயதிற்கு உட்பட்ட இளையர்கள். ஏழு வயதுச் சிறுவன் ஒருவனும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.

அனுபவமே பாடம்

இது குறித்து அண்மையில் ‘கொஞ்சம் டெலுலு நிறைய சொலுலு’ வலையொளியில் இளையர்கள் பேசினர்.

‘எடுவில்’ அமைப்பின் கௌசியா மூர்த்தி, 22, அறிவு முதிர்ச்சியின்றிப் பிறரை இணையம்வழி துன்புறுத்துவோரைச் சாடினார்.

“பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது முக்கியம்தான். ஆனால், அதற்கு அவர்களுடைய தனிப்பட்ட விவரங்களைப் பரப்பிப் பழிவாங்குவது (Doxxing) சரியான தீர்வன்று. அதற்குப் பதிலாக அதிகாரிகளிடம் புகார் செய்வதே நல்லது,” என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலிப் படங்கள் குறித்து நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி கார்த்திகை பாபு பிரித்தா, 18, எச்சரித்தார்.

அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டு வாங்க முயன்ற தம் தோழி ஒருத்தி, இணைய மோசடியில் ஏறக்குறைய $700 வரை இழந்ததை அவர் நினைவுகூர்ந்தார். பகுதிநேர வேலை செய்து சிறுக சிறுக சேமித்த பணத்தை ஒரே கணத்தில் இழந்ததால் தம் தோழி மிகுந்த ஏமாற்றமடைந்ததாக அவர் கூறினார்.

இளையர்களைக் குறிவைக்கும் மோசடிக்காரர்கள் நவீன முறைகளில் திறம்படச் செயல்படுவதால், இணையத்தில் பதிவிடும்போதும் வாங்கும்போதும் மிகுந்த எச்சரிக்கை தேவை என்று அவர் அறிவுறுத்தினார்.

இசை நிகழ்ச்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் நுழைவுச்சீட்டுகளை வாங்கும்போது இளையர்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி வெங்கடேசன் ஷிவாணி, 20.

தம் தந்தையும் சகோதரியும் கிரிக்கெட் போட்டி ஒன்றிற்கு நுழைவுச்சீட்டு வாங்க முயன்றபோது, தளத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் கிடைக்காமல் போனதால் இடைத்தரகர்களை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதை அவர் பகிர்ந்தார்.

போட்டியை நேரில் காண வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் விலையை உயர்த்துவதாக ஷிவாணி குறிப்பிட்டார், உணர்ச்சிவயப்பட்டு அவசரமாக முடிவெடுத்து, ஏமாறாமல் இருக்க அதிகாரத்துவத் தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஷிவாணி வலியுறுத்தினார்.

இணையத்தில் சிக்கல்கள் ஏற்படும்போது புகார் செய்யத் தயங்கக்கூடாது என்பதை இளையர்கள் வலியுறுத்தினர்.

“மோசடியில் சிக்கி, பணத்தை இழந்துவிட்டோமே என்ற அவமானத்திலோ அச்சத்திலோ இளையர்கள் பலர் புகார் செய்யத் தயங்குகின்றனர். ஆனால், நடந்ததை மூடி மறைக்காமல் துணிச்சலுடன் இணையப் பாதுகாப்பு ஆணையத்திடம் புகாரளிப்பதுதான் எதிர்காலத்தில் மற்றவர்கள் ஏமாறாமல் தடுக்க உதவும்,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்