அடையாளத்தை உரக்கச் சொல்லும் ஆடை அலங்காரம்

அடையாளத்தை உரக்கச் சொல்லும் ஆடை அலங்காரம்

3 mins read
cbf7f77b-3b15-465f-b502-0cd14a7802e2
வேட்டி உடையுடன் ‘ராஜுன் ஃப்லோ’ பாலகிருஷ்ணன் - படம்: ராஜுன் ஃப்லோ

தனிமனித சிந்தனைகள், நிலைப்பாடுகள், அனுபவக் கதைகள் ஆகியவற்றைப் புத்தம்புது ஆடைகள் வெளிப்படுத்துகின்றன. பாரம்பரிய ஆடைகள் காலங்காலமாகத் தழைப்பவை என்றாலும் அவற்றின் தோற்றங்கள் காலத்தோடு மாறுபவை.

ஒவ்வொரு காலகட்டத்தின் எண்ணப்போக்குகளை ஆடை அலங்காரம் பிரதிபலிக்கிறது. அதில் உள்ள ஒவ்வோர் அணிகலனும் ஆடையும் கலாசார வடிவமைப்புகளால் செதுக்கப்பட்ட சிற்பங்களே.

பண்பாட்டின் அழகையும் தொன்மையையும் போற்றும் இன்றைய தமிழ் இளையர்கள், அதே பண்பாட்டுக்குக் கட்டுண்டு கிடக்காமல் ஆடை அலங்காரம் வழி புரட்சி செய்கின்றனர்.

சிந்தையளவில் எவ்வளவுதான் முன்னேறினாலும், முன்னோர்களுடன் இணைக்கும் பாலமாகப் பாரம்பரிய உடைகள் திகழ்வதாகத் தமிழ் முரசிடம் பேசிய இளையர்கள் சிலர் கருதுகின்றனர்.

மீசை வைத்த ஆணுக்கும் மூக்குத்தி

‘முறுக்கு மீசை குறும்புப் பார்வை’ என்ற தொடருக்கு ஏற்ற விதமாகத் தோற்றமளிக்கும் சமூக ஊடகப் பிரபலம் 26 வயது ராஜுன் ‘ ஃப்லோ’ பாலகிருஷ்ணன், தமிழ்ப் பாரம்பரிய ஆடைகளை மாறுபட்ட, புத்தாக்கமிக்க முறையில் உடுத்துவதாகக் கூறிக்கொள்கிறார். 

பக்கத்து வீட்டுத் தமிழ்ப் பையனைப் போலப் பொதுவாகக் காணப்பட்டாலும், அழகு என்பது ஆண், பெண் வேறுபாடுகளைக் கடந்தது என்ற கருத்தை இவரது தனித்துவமான நடை பிரதிபலிக்கிறது.

வேட்டி அணிந்துகொண்டே திரு. ராஜுன் மூக்குத்தியும் மருதாணியும் பூண்டுள்ளது நூதனமாகத் தோன்றலாம். ஆனால் பாரம்பரியத் தோற்றத்தைப் புதுமையாக வெளிப்படுத்தி இளையர்கள் தங்களது தனித்தன்மைகளை வெளிப்படுத்தலாம்.

“நாம் அன்றாடம் அணியும் உடையும் அணிகலன்களும் வாழும் வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றன. இன, சமூக வரலாறு மட்டுமன்றித் தனிநபர்களாக வாழும் நம் வாழ்க்கையையும் இது எடுத்துக்காட்டுகிறது,” என்று திரு. ராஜுன் கூறினார்.

தாம் அணியும் அணிகலன்களில் மூக்குத்தி முதல் மீசை ஒப்பனை வரை, எங்கு சென்றாலும் தம் தமிழின வேர்களைத் தொலைக்காமல் பிரதிபலிப்பதாகவும் திரு. ராஜுன் கூறினார்.

சேலையுடன் இழையோடும் உணர்வு  

படிகளின்மீது நயமாய்ப் படரும் ராஜாராமன் நித்யதர்சினியின் சேலைத் தலைப்பு
படிகளின்மீது நயமாய்ப் படரும் ராஜாராமன் நித்யதர்சினியின் சேலைத் தலைப்பு - படம்: ராஜாராமன் நித்யதர்சினி

சேலையுடன் இழையோடும் உணர்வு தமிழ் ஆடைகளை உடுத்துவதற்குச் சிறு வயதில் தயங்கிய ராஜாராமன் நித்யதர்சினி, இப்போது அதே ஆடைகளை விருப்பத்துடன் அணிகிறார். சமூக ஊடகங்களில் தமிழ் சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து நம் பண்பாட்டைக் கொண்டாடுகிறார் 22 வயது பட்டதாரி மாணவியான நித்யதர்சினி. ‘‘பல்லினச் சமுதாயத்தில் வாழ்ந்து வரும் சூழலில் நான் அணியும் ஆடையை வைத்து, மற்றவர்கள் என்னைத் தவறாக எடைபோடுவார்களோ என்ற அச்சம் சிறு வயதின்போது இருந்தது,’’ என அவர் நினைவுகூர்ந்தார். இப்போதோ இதே உடைகள் தமக்கு நம்பிக்கை அளிப்பதாக நித்யதர்சினி கூறினார். “தமிழராக நம் ஆடைகளை நாம் அணியாவிட்டால், வேறு யார் நம் கலாசாரத்தைப் போற்றிப் பாதுகாப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார் இந்த இளையர்.

அன்றாட ஆடையிலும் பண்பாடு

பட்டுத்தாவணியில் மின்னும் மாணவி செந்தில்நாதன் மீனாட்சி.
பட்டுத்தாவணியில் மின்னும் மாணவி செந்தில்நாதன் மீனாட்சி. - படம்: மீனாட்சி

குடும்ப நிகழ்ச்சிகள், ஆலயங்கள் ஆகியவற்றைக் கடந்தும் பல்வேறு இடங்களில் தமிழ் உடைகளை உடுத்தும் 20 வயது செந்தில்நாதன் மீனாட்சி, இந்நாட்டின் பன்முகத்தன்மைக்குச் சான்றாகத் திகழ்கிறார்.

ஆடைகளின் வண்ணங்கள், ஓசை கொஞ்சும் அணிகலன்கள் எனப் பாரம்பரியம் வழி இன்பம் துய்ப்பதாக நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவியான மீனாட்சி கூறினார். இவர் பாரம்பரிய உடைகளை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அணிவதில்லை; மாறாகத் தன் அன்றாட வாழ்விலும், பள்ளிக்கும், தமிழ் அல்லாத நிகழ்வுகளுக்கும்கூட அணிகிறார்.

‘‘ஜீன்ஸ் அணிந்தாலும் தமிழ்ப் பாணியிலான மேலாடையோ காதணியோ போட்டுக்கொள்வேன். நவீன ஆடைகள் அணிந்தாலும் புடவை உடுத்தும்போது கிடைக்கும் தன்னம்பிக்கையும் பெருமையும் வேறு எதற்கும் ஈடாகாது,’’ என்றார் மீனாட்சி.

கலையையும் மக்களையும் பிரதிபலிக்கும் ஆடை நிறுவனங்கள்

உடைகள் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை என்பதால், இளம் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆடை வடிவமைப்பாளர்கள் செயல்படுகின்றனர்.

“துணிசார்ந்த கைவினை வேலைகளில் நல்ல அனுபவமுள்ள உள்ளூர்க் கலைஞர்களோடு சேர்ந்து பணியாற்றுகிறோம். நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வடிவமைப்புகளையே நாங்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறோம்,” என்று ‘ஐவரா பூட்டிக்’கின் இணை நிறுவனர் 25 வயது மதுமிதா ரெங்கநாதன் தெரிவித்தார்.

தற்காலச் சமூகத்திலும் ஆடை வழியாகத் தங்கள் கலாசாரத்தைப் போற்றும் இவர்களின் முயற்சி, பழமையையும் புதுமையையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலம். இவர்களின் பெருமிதம், தமிழ் மரபு காலங்கடந்து நிலைத்திருக்கும் என்பதற்குச் சிறந்த சான்று.

குறிப்புச் சொற்கள்