போதைப்பொருளுக்கு எதிராகப் போர்க்கொடி ஏந்தும் பார்த்திபன்

3 mins read
சிங்கப்பூரைப் பாதுகாப்புடன் வைத்திருக்கும் உன்னதத் தொழிலான மத்திய போதைப்பொருள் ஒழிப்பில் படைப்பிரிவுத் தலைவராக பார்த்திபன் மதிவாணன் பணியாற்றி வருகிறார். ஆபத்துகளை எதிர்கொண்டு, நீதியை நிலைநாட்டி, நாட்டுக்கு நன்மை பயக்கும் கொள்கைகளுக்குக் குரல் கொடுத்து வருகிறார் இந்த அதிகாரி. 
e7507d28-d47b-4e8b-988c-e3566b49593d
அண்மையில் கண்காணிப்பாளர் பதவி உயர்வு பெற்ற பார்த்திபன் மதிவாணன், 35.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சேர நினைத்த துறை ஒன்று, இறுதியில் சேர்ந்த துறை வேறு. ஆனால், தான் எடுத்த முடிவில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார் பார்த்திபன் மதிவாணன், 35.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிர்மருத்துவப் பொறியியல் படித்த அவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அதே துறையில் படித்துப் பட்டம் பெற்றார்.

விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர், நாள் முழுவதும் ஒரே இடத்தில் இருந்தவாறு வேலை செய்வதற்குப் பதிலாகப் பல இடங்களுக்குச் செல்லக்கூடிய துடிப்புமிக்க வேலையை விரும்பினார்.

காவல்துறை உள்ளிட்ட சீருடைச் சேவைக் குழுக்களைப் பரிசீலனை செய்து இறுதியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் சேர முடிவெடுத்தார்.

அதே வேலையில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் திரு பார்த்திபன், அண்மையில் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.

“போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வேலை முக்கியமானது என்ற உணர்வு எனக்கு முன்கூட்டியே தோன்றியது. சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவது, புழங்கிகளையும் கடத்தல்காரர்களையும் கையாள்வது போன்ற வேலைகளை நீண்டநாள் செய்வதில் எனக்கு ஆர்வம் இருப்பதை அறிந்தேன்,” என்று அவர் கூறினார். 

சீருடைச் சேவைக்குழு பயிற்சிக் கழகத்தில் ஒன்பது மாதம் நீடித்த பயிற்சியில் திரு பார்த்திபன், சட்டக் கல்வி பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொண்டார்.

“சோதனை நடவடிக்கை, பறிமுதல் நடவடிக்கை, விசாரணை ஆகியவற்றைப் பற்றிக் கற்றேன்,” என்றார் திரு பார்த்திபன்.

விசாரணை அதிகாரியாகச் செயலாற்றிய பின் திரு பார்த்திபன், போதைப்பொருளை அதிக அளவில் கடத்துவோரை விசாரிக்கும் நிபுணத்துவ விசாரணை அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அந்தப் பொறுப்பை வகித்த குறுகியகாலத்தில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கொள்கை விவகாரங்களில் ஈடுபடும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.

“உள்துறை அமைச்சின் அனைத்துலக ஒத்துழைப்பு பங்காளித்துவப் பிரிவில் சேர்ந்தேன். வெளிநாடுகளைச் சேர்ந்த என் போன்ற அதிகாரிகளைச் சந்தித்து சிங்கப்பூரின் போதைப்பொருள் நிலைப்பாட்டைப் பற்றி விளக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது,” என்று அவர் கூறினார்.

வேட்டையில் வேட்கை 

சோதனை நடவடிக்கைகளில் இதுவரை தான் கண்டதிலேயே மறக்க முடியாத காட்சியை திரு பார்த்திபன் வருணித்தார்.

மிக அசுத்தமான சூழலில் போதைப் புழங்கியான ஒரு மாது தரையில் கிடக்க, அவரைச் சுற்றி எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் அவரின் பிள்ளைகள் இருந்ததாக அவர் பகிர்ந்தார்.

“நெஞ்சைத் துளைக்கும் இதுபோன்ற காட்சிகளைக் காணும்போது குடும்பங்களைச் சிதைக்கும் போதைப்பொருள் புழக்கத்தின் ஒழிப்பு முயற்சியில் பங்குபெறும் எனது பணி முக்கியமானது என உணர்ந்து செயல்படுகிறேன்,” என்று திரு பார்த்திபன் கூறினார்.

கடத்தல்காரர்களைப் பிடித்துச் சிறையில் அடைக்கும் திரு பார்த்திபன், அந்த வேலை ஆபத்தானதாக இருந்தாலும் சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பவர்களை முடக்கிச் சமூகத்திலிருந்து அகற்றுவதில் போர்வீரருக்குரிய மனநிறைவை அடைகிறார்.

பொதுமக்கள் காணாத சிங்கப்பூர் சமுதாயத்தின் சில பக்கங்கள் தங்கள் கண்களுக்குப் புலப்படும்போது அதனால் ஏற்படும் மனச்சோர்வு சில நேரங்களில் சுமையாக இருப்பதாக திரு பார்த்திபன் வெளிப்படையாகச் சொன்னார்.

“பிடிப்பட்டால் கடும் தண்டனைதான் என அறிந்திடும் குற்றவாளிகளால் அதிகாரிகளுக்குச் சில சமயம் ஆபத்து நேரலாம். இத்தகைய சூழலில் நாம் பெற்ற பயிற்சியும் வேலையிட நண்பர்களின் ஆதரவும் கைகொடுக்கின்றன,” என்றார் திரு பார்த்திபன்.

கொள்கை வகுத்தலில் பங்களிப்பு

கடந்த 2020ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சின் அனைத்துலக ஒத்துழைப்பு, பங்காளித்துவ பிரிவில் எட்டு மாதங்கள் பணியாற்றியபோது, போதைப்பொருளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்துடன் இணைந்து கஞ்சாவுக்கான அனைத்துலகக் கட்டுப்பாட்டின் தளர்வுக்கு எதிராகக் குரல்கொடுத்தார்.

அவரது முயற்சிகள் உலக சுகாதார நிறுவனத்தின் சில பரிந்துரைகளின் நிராகரிப்புக்கு வகை செய்தது.

திரு பார்த்திபன், கடந்தாண்டு உள்துறை அமைச்சின் தேசிய தின விருதைப் பெற்றார். கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், ஒவ்வொருநாளும் வேலையை விரும்பிச் செய்வதாகவும் பிரதிபலனை எதிர்பார்த்துப் பணியாற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

எந்தச் சீருடைக் குழுவாகவோ சட்டச் செயலாக்க அமைப்பாகவோ இருந்தாலும் சமுதாயத்திற்கு நல்லது செய்ய நினைப்போருக்கே தமது வேலை பொருந்தும் என்று திரு பார்த்திபன் கருதுகிறார். 

“சம்பளத்தை மட்டும் நாடுவோருக்கான வேலை இதுவன்று. வேலையின் கடுமையும் சவால்களும் அதிகம் என்பதால் சேவை மனப்பான்மை உள்ளவர்களாலேயே இதனைச் சமாளிக்க முடியும். உடல் உழைப்பும், கற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் தேவைப்படுகின்றன,” என்று கூறினார் பார்த்திபன். 

குடும்பங்களைச் சிதைக்கும் போதைப்பொருள் புழக்கத்தின் ஒழிப்பு முயற்சியில் பங்குபெறும் எனது பணி முக்கியமானது என உணர்ந்து செயல்படுகிறேன்.
பார்த்திபன் மதிவாணன், 35
குறிப்புச் சொற்கள்