கொவிட்-19 காலத்தில் தம் தந்தையுடன் சிங்கப்பூரில் இருக்கும் அனைத்து நூலகங்களுக்கும் செல்ல வேண்டுமென்று வித்தியா நாதன் முடிவெடுத்தார். நூலகங்களில் தமிழ்மொழியில் உள்ள சிறுவர்க் கதைப் புத்தகங்கள் பெரும்பாலானவற்றில் சிங்கப்பூர் சிறுவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இடம்பெறவில்லை என்பதை உணர்ந்தார்.
இதை மனத்தில் நிறுத்தி, சிங்கப்பூரின் மூத்த ஊடகவியலாளரும் சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவருமான காலஞ்சென்ற திரு எம்.கே. நாராயணனின் பேத்தியான 29 வயது வித்தியா, சிங்கப்பூர் சிறுவர்களின் இளம் பருவத்தை மையப்படுத்தி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
‘லலிதா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள மூன்று நூல்களைப் படிக்கும் சிறுவர்கள், அவர்களுடைய வாழ்க்கையை நூல்களில் இடம்பெறும் கதைகளோடு தொடர்புபடுத்திக்கொள்ளலாம் என்றார் வித்தியா.
“தமிழ் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மொழி. இந்தக் கதைகளை தமிழ்மொழியில் மட்டும்தான் நான் எழுதினேன். ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்தால் சிறுவர்கள் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் படிக்கத் தூண்டப்படுவார்கள்,” என்று வித்தியா சொன்னார்.
தாத்தா பாட்டியுடன் மிக நெருக்கமான லலிதா எனும் சிறுமிக் கதாபாத்திரம், அவர்களுடன் பறவைகள் மகிழ்வனத்திற்குச் செல்லும் அனுபவங்கள், முதல் நூலில் இடம்பெற்றுள்ளன.
தமது சிறுவயதில் தாத்தா, பாட்டியுடன் அடிக்கடி பறவைப் பூங்காவுக்குச் சென்ற அனுபவங்களை நினைவுகூர்ந்த வித்தியா, “லலிதா கதாபாத்திரம் என்னைச் சித்திரிக்கும். எனது குழந்தைப் பருவ நினைவுகள் நூல்களில் இடம்பெற்றுள்ளன,” என்றார்.
இரண்டாவது நூலில் லலிதா கதாபாத்திரத்தின் ரயில் பயணங்களைப் பற்றி சிறுவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
“நான் அடிக்கடி ரயிலில் பயணம் மேற்கொள்வேன். நம்மில் பலர் ரயிலில் கைப்பேசிகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். வேறொரு பயணியின் முகம்கூட எப்படி இருக்கிறது என்று நாம் பார்ப்பதில்லை. நான் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் தங்குவதால் இரண்டாவது நூலில் இடம்பெறும் கதையில் பாசிர் ரிஸ் ரயில் நிலையத்தில் அடங்கியுள்ள என் நினைவுகள் இருக்கும்,” என்று வித்தியா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தம்முடைய பாட்டியுடன் மிக நெருக்கமான வித்தியா, அந்தப் பாட்டி விரும்பி அணியும் சேலைகளை மையமாக வைத்து மூன்றாவது நூலை எழுதியுள்ளார்.
“சேலைகள் நம் கலாசாரத்தில் பெரிய அங்கம் வகிப்பவை. என் பாட்டி லீலா எந்நேரமும் சேலையைதான் அணிந்திருப்பார். அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு, அதன் சிறப்பு நன்கு தெரியும். அதை நான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்கூற விரும்பினேன்,” என்று வித்தியா கூறினார்.
தமது தாத்தா கதைகள் எழுதுவதைச் சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த வித்தியாவுக்கு எழுதுவதும் வாசிப்பதும் ரத்தத்தில் ஊறியவை. வித்தியாவின் தாயார் மலையாளச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்மொழியின் முக்கியத்துவம் அவருக்குள் குழந்தைப் பருவத்திலிருந்தே புகுத்தப்பட்டது.
வித்தியாவின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நவம்பர் 16ஆம் தேதி ‘தி மேசன்ஸ் டேபிள்’ இடத்தில் இடம்பெற்றது. குடும்பத்தாருடன் வித்தியாவின் முன்னாள் தமிழ் ஆசிரியரும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
“ஓர் ஆசிரியராக எனக்கு வித்தியாவை நினைக்கும்போது மிகப் பெருமையாக உள்ளது. இளையர்கள் தமிழில் பேசச் சிரமப்படும் இக்காலத்தில், தமிழ்மொழியில் வித்தியா நூல்களை வெளியிட்டுள்ளார்,” என்று வித்தியாவின் முன்னாள் தமிழ் ஆசிரியர் சூடிக்கொடுத்தாள் கணேசன் சொன்னார்.
இருமொழிக் கல்விக்குரிய லீ குவான் யூ நிதி ஆதரவுடன் நூல்களை வித்தியா வெளியிட்டுள்ளார். இருமொழிக் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய வித்தியா, நூல்களில் இடம்பெற்றுள்ள விளக்கப்படங்கள் அனைத்தையும் தம் சீனத் தோழி வரைந்ததாகக் கூறினார்.
இந்த மூன்று நூல்களும் சிங்கப்பூரில் இருக்கும் அனைத்து தேசிய நூலகங்களிலும் இருக்கும். அதோடு, பாலர் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு வளங்களாகவும் இந்நூல்கள் பயன்படுத்தப்படும்.
“என் அப்பா எம்.கே. நாராயணனுக்குப் பிறகு அவரது மரபை எடுத்துச்செல்ல என்னுடைய இளைய மகள் வந்துவிட்டார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அடுத்த தலைமுறைக்கு வித்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று நம்புகிறேன்,” என்று வித்தியாவின் தந்தையான திரு ரகுநாதன், 60, கூறினார்.