துணிவால் அடைந்த உயர்வு: இளம் தொழில் முனைவரின் பாதை

2 mins read
7e5a4fc6-bb6d-4e03-9e94-029e313fae08
இளம் வயதில் சுயத்தொழில் செய்து வெற்றி கண்டார் கட்டட, உட்புற வடிவமைப்பாளர் பவித்ரான், 26. - படம்: பவித்ரான்
multi-img1 of 2

கட்டட, உட்புற வடிவமைப்பாளரான 26 வயது பவித்ரான், தக்க நேரத்தில் எடுத்த துணிச்சலான முடிவு அவரை வெற்றிப்படியில் ஏற்றிவிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நன்யாங் நுண்கலைக் கழகத்தில் வடிவமைப்புத் துறையில் படித்துக்கொண்டிருந்த பவித்ரானுக்கு ஏட்டுக் கல்வி கற்றது போதும் என்று தோன்றியது.

“படிக்கும் காலத்தில் தெரிந்தவர்களுக்காக அவ்வப்போது சின்ன சின்ன வடிவமைப்புகளைச் செய்து வந்தேன். என் முதல் வாடிக்கையாளர், என் தாயின் நண்பர். அவரது கடையை வடிவமைக்க வாய்ப்புக் கொடுத்தார். அதன்பின் பல வாய்ப்புகள் குவியத் தொடங்கின. காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டேன்,” என்றார் பவித்ரான்.

வடிவமைப்புச் செய்யக் கிடைத்த வாய்ப்புகளை, அனுபவக் கற்றலாக பவித்ரான் கண்டார். வேலையின் மீதான ஆர்வம் மேலோங்க, படிப்பை விட்டுவிட்டு முழு நேரமாகத் தொழிலில் இறங்க முடிவெடுத்தார்.

நிதியுதவிக்காகப் பலரை நாடிய பவித்ரான், தமது முயற்சி வெற்றிபெற வேண்டும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார்.

ஒவ்வொருநாளும் 14 மணி நேரம் வரை பவித்ரான் வேலை செய்யவேண்டியிருந்தது.

தொழில் தொடங்கிய சிறிது காலத்தில் முன்னேற்றத்துக்குத் தடையாக வந்தது கொவிட்-19 கிருமிப் பரவல்.

எனினும் மனம் தளராது, கிருமிப் பரவலுக்கு முன் வடிவமைப்புக்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் கவனம் செலுத்தினார் பவித்ரான். அவருடைய வேலைத்திறனை அறிந்தவர்கள் மூலம் அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் குவிந்தன.

ஆடை வடிவமைப்பிலும் ஆர்வம் கொண்டுள்ள பவித்ரான், அதன்வழியாகவும் தம் திறனை வெளிப்படுத்துகிறார்.

பங்காளிகளைத் திரட்டி வணிகத்தை மேலும் பெரிதாக்குவது பவித்ரானின் அடுத்த இலக்கு.

“கட்டட வடிவமைப்பு ஒரு கலை. ஒவ்வொரு வீட்டுக்கும் இடத்துக்கும் ஏற்ப அவற்றை வடிவமைக்கவேண்டும்,” என்ற பவித்ரான், அவரவருக்கு ஏற்ற வடிவமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்.

வாய்ப்புகள் ஒருவரின் கதவைத் தட்டுவது அரிது. வாய்ப்பு வரும்போது அதை நன்கு பயன்படுத்தி வளர்வது முக்கியம் என்ற வாழ்க்கைப் பாடத்தை அறிந்துகொண்டதாகச்சொல்கிறார் பவித்ரான். தரப்படும் ஒவ்வொரு வேலையையும் திறம்படச் செய்வதால் கிடைக்கும் நல்ல பெயர், வருங்கால வெற்றிக்கான மிக அவசியமான மூலதனம் என்பது பவித்ரானின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

குறிப்புச் சொற்கள்