தொடக்கக் கல்லூரி ஒன்றாம் நிலை மாணவர்களுக்கு ‘ஏ’ நிலைப் பாடமாக வழங்கப்படும் ‘திட்டப் பணி’ (Project Work), சென்ற ஆண்டு முதல் மதிப்பெண்களுக்குப் பதிலாகத் தேர்ச்சிநிலை (Pass/Fail) அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
2023ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் இந்தப் புதிய மதிப்பீட்டுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
இத்திட்டத்தில் முதன்முதலாகப் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்துள்ளனர் என்ற நற்செய்தியைக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதோடு, சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட ‘மார்கெட்பிளேஸ் ஆஃப் ஐடியாஸ்’ திட்டம்வழி மாணவர்கள் நிலப் போக்குவரத்து ஆணையம், தேசியத் தொண்டூழியர், அறக்கொடை நிலையம், சிங்கப்பூர் உணவு அமைப்பு, சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சு ஆகியவற்றுக்குக் கல்வி அமைச்சின் உதவியுடன் சென்ற மார்ச் மாதம் தம் திட்டங்களைப் படைத்தனர்.
போக்குவரத்துப் பாதைகளுடன் வேளாண்மை
2030க்குள் சிங்கப்பூரின் 30 விழுக்காட்டு உணவைச் சிங்கப்பூரிலேயே தயாரிப்பது இலக்காக உள்ளது.
இதனை அடைய, விரிவடைந்துவரும் எம்ஆர்டி கட்டமைப்பில் வேளாண்மை செய்யலாம் என்கின்றனர் ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரியில் பயிலும் சஸ்வின், 18, மற்றும் குழுவினர்.
அவரது குழுவின் திட்டம் ‘மார்கெட்பிளேஸ் ஆஃப் ஐடியாஸ்’ போட்டியில் மூன்றாம் நிலையைப் பிடித்தது.
‘MRTshroom’ எனப்படும் அவர்களுடைய திட்டம், ரயில் தடங்களைத் தாங்கும் தூண்களுக்கு இடையே காளான்களை நட்டுப் பயிரிடுவதாகும். “வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் எம்ஆர்டி தூண்களுக்குக் கீழே பெரும்பாலும் புல்தான் உள்ளது. அங்கே அடுக்கடுக்காகக் காளான்களைப் பயிரிடலாம்,” என்றார் சஸ்வின்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த அடுக்குகளில் வெப்பம், ஈரப்பதம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவோம். காளான்கள் வளர்வதற்கு ஈரப்பதம் இருந்தால் போதும். செடிகளைப்போல் அதிக தண்ணீரும் சூரிய ஒளியும் அதற்குத் தேவையில்லை.
“குறைந்த ஒளியில் காளான்கள் நன்கு வளர்வதால், சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து பாதுகாக்க, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களாலான திரையும் இருக்கும்,” என்றார் அவர்.
இத்திட்டத்துக்காக நகர விவசாயிகளின் (Urban farmers) கருத்துகளை அறிந்துவந்ததாகவும் காளான் வளர்ப்பதற்கான வழிகாட்டிகளைப் படித்ததாகவும் கூறினார் சஸ்வின்.
எனினும், இதை நடைமுறைப்படுத்த பல ஒப்புதல்களைப் பெறவேண்டும். யார் பராமரிப்பார் என்பதும் கேள்வி. நிலப் போக்குவரத்து ஆணையத்தை இதற்குப் பொறுப்பு வகிக்கக் கேட்கலாமென நினைக்கிறார் சஸ்வின்.
சஸ்வினுக்கு வேளாண்மை மீது தொடக்கப்பள்ளி காலகட்டத்திலிருந்தே நாட்டம். “ஒவ்வொரு வாரமும் பள்ளித் தோட்டத்தில் செடிகொடிகள் பயிரிடுவோம். என் தாயாரும் செடிகளைப் பயிரிடுவார். ரம்புத்தான், பரங்கிக்காய் போன்ற செடிகளைக்கூட எங்கள் வீட்டின் சுற்றத்தில் வளர்க்கிறோம்,” என்றார் சஸ்வின்.
மீன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி
சிங்கப்பூரின் தெற்குக் கரையோரத்தில் ஒன்பது மாடி மீன் பண்ணையை உருவாக்கலாம் என்கிறார் ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த சந்திரன் மதுமிதா, 18.
அவரது குழுவின் திட்டம் இந்த ஆண்டு நடந்த ‘மார்கெட்பிளேஸ் ஆஃப் ஐடியாஸ்’ போட்டியில் இரண்டாம் நிலையைப் பிடித்தது.
பாராமண்டி (barramundi) எனப்படும் மீனைத் தொழில்நுட்ப உத்திகள்மூலம் உணவுக்காக வளர்க்கலாம் என்பதே அவர்களின் திட்டம். இதன்மூலம் சிங்கப்பூர், மீன் இறக்குமதிகளைச் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் குறையும்.
“நாங்கள் முதலில் பாரம்பரிய மீன் பண்ணைகள் சந்திக்கும் இடப் பற்றாக்குறை, அதிக நீர்வளத் தேவை போன்ற சவால்கள் பற்றி ஆய்வு செய்தோம்,” என்றார் மதுமிதா.
“Recirculating Aquaculture System எனும் தொழில்நுட்பம் நீரின் தரத்தைப் பாதுகாப்பதற்கும் மீன் கழிவுகளை நீக்குவதற்கும் உதவும். Internet of Things மூலம் மீனின் ஆரோக்கியத்தையும் நீர்நிலைகளையும் நேரடியாகக் கண்காணிக்க முடியும்,” என்றார் மதுமிதா.
இதனால் விவசாயிகளுக்கான செலவுகளும் குறையும் என்றார் அவர்.
தற்போது பாராமண்டி குழுமம் எனும் நிறுவனம் கடலிலும் ஏரிகளிலும் மீன் வளர்ப்பதாகக் கூறிய மதுமிதா, தம் திட்டம் அடுக்குப் பண்ணை தொடர்பானது என்பதால் குறைவான இடம் தேவைப்படும் என்றார்.
பார்வைக் குறைபாடுள்ளோருக்கு உதவி
தன் நண்பரின் தாத்தா அண்மையில் பார்வை இழந்ததை அடுத்து, பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பொதுப் போக்குவரத்தில் பல சவால்களைச் சந்திக்கின்றனர் என்பதை அறிந்துகொண்டார் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவி தாருண்யா ரமேஷ், 18.
“கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் ‘பிரெய்ல்’ (Braille) நடைபாதைகளிலும் இடையூறு ஏற்படக்கூடும். பேருந்து நிறுத்தத்தில் என்ன பேருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ளவும் பார்வைக் குறைபாடுள்ளோர் சிரமப்படுகின்றனர்.
“பலரிடம் உதவி கேட்கவும் அவர்கள் தயங்குகின்றனர். பிறர் உதவியின்றிப் பயணம் செய்ய இயல்வதையே அவர்களில் பலரும் விரும்புகின்றனர்,” என்றார் தாருண்யா.
நண்பரின் தாத்தா பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்து, அதிகச் செலவாகும் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால் வயதான காலத்தில் அவரது சேமிப்புகள் குறைவதை அவர் சுட்டினார்.
பொதுப் போக்குவரத்தில் மற்ற பயணிகளும் புரிந்துணர்வோடு, சரியான முறையில் உதவினால் பார்வைக் குறைபாடுள்ளோரின் பயணம் எளிதாகும் என உணர்ந்த தாருண்யாவின் குழு, அதைப் புதிர் விளையாட்டுகள்வழி ஊக்குவிக்கத் திட்டமிடுகின்றனர்.
‘மெட்ரோ லெஜண்ட்ஸ்’ எனும் டெலிகிராம் சேனலை உருவாக்கி அதில் புதிர் சவால்கள், வாராந்தர கேள்வி-பதில் அங்கங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை வழங்குவதே அவர்களின் எண்ணம்.
பார்வைக் குறைபாடுள்ளோருடன் எப்படிப் பேசுவது, எப்படி ஓரிடத்துக்கு வழி கண்டுபிடிக்க உதவுவது, எப்படி அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது போன்றவற்றை இதன்வழி மக்கள் அறியலாம்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் சிங்கப்பூர் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கத்திடம் அந்தச் சேனல்வழி கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
அத்துடன், பார்வைக் குறைபாடுள்ளோரின் போக்குவரத்துப் பயணக் கதைகளைப் பகிரும் சமூக ஊடக இயக்கத்தையும் மாணவர்கள் தொடங்க விரும்புகின்றனர்.
“நாங்கள் கிட்டத்தட்ட 40 மாணவர்களிடையே நடத்திய கருத்தாய்வில் 83 விழுக்காட்டினர் பார்வைக் குறைபாடுள்ளோருக்கு உதவத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் 71 விழுக்காட்டினர் மட்டுமே எப்படி உதவுவது எனத் தமக்குத் தெரியும் என்றனர். எங்கள் திட்டம் அவர்களுக்கு உதவும்,” என்றார் தாருண்யா.
தாருண்யா குழுவினரின் திட்டம் ‘மார்கெட்பிளேஸ் ஆஃப் ஐடியாஸ்’ போட்டியில் நான்காம் நிலையைப் பிடித்தது.

