கலை, கல்வி எனப் பன்முகத் திறமைகளுக்கு அப்பால் சமூகப்பணி தரும் தொடர்புத் திறன், விமர்சனச் சிந்தனைப் போக்கு, தலைமைத்துவம் ஆகிய பண்புகள் ஒருவரை சிறந்த குடிமகனாக்கும் என நம்புகிறார் இளையர் ஷ்ரேயான்ஷ் பால்ஷேத்கர்.
சிங்கப்பூர்க் கலைப் பள்ளியில் (SOTA), கல்வியுடன் புத்தாக்கம், இணைப்பாட நடவடிக்கைகள், கலை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய, பல்கலைக்கழகப் படிப்புக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் ‘இன்டர்நேஷனல் பக்கலோரே’ பட்டயக் கல்வியை (IB) முடித்துள்ளார் இவர்.
ஆறாண்டுகாலக் கல்வியில் நான்கு ஆண்டுகள் நாடகக் கலை பயின்ற ஷ்ரேயான்ஷ், அது தனது சிந்தனைத் திறனை அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
“சமூகத்தின் பல நிகழ்ச்சிகளை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகக் கற்றுத்தந்தது இந்தக் கல்விப் பயணம்,” என்று சொன்ன இவர், கணிதத்தில் தனக்குத் தனி விருப்பம் உள்ளதாகவும் சொன்னார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த ‘இன்டர்நேஷனல் மேத்தமெட்டிக்கல் மாடலிங்’ எனப்படும் சமூகத்தில் நிலவும் அன்றாடச் சிரமங்களுக்கு, கணிதம்வழி தீர்வுகள் வழங்கும் போட்டியில் உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ளார் இவர்.
நாடகத்தின்வழி சமூக மாற்றங்களைக் கொண்டுவரப் பாடுபடும் தனது நாடக ஆசிரியர் ஒருவரால் ஈர்க்கப்பட்ட இவர், சமூகப் பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கினார்.
சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகி, ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும் மூத்தோருடன் கலந்துரையாடி, அவர்களுக்குக் கைவினைப் பொருள்கள் செய்யக் கற்றுத்தரும் நடவடிக்கை தனக்கு விருப்பமானது என்று சொன்னார் ஷ்ரேயான்ஷ்.
“நாங்கள் மூத்தோருடன் பேசும்போது அவர்களுள் ஒருவர் தனது பேரனுடன் சேர்ந்து ‘பி.எஸ்’ காணொளி விளையாட்டு விளையாடுவதாகவும் அண்மைய ஆங்கிலத் தொடர்கள் பார்ப்பதாகவும் கூறினார். அது மூத்தோர் குறித்த எனது கண்ணோட்டத்தை உடைத்தெறிந்த தருணம்,” என்று வியப்பு மாறாமல் சொல்கிறார் இவர். “நம்முடன் நேரம் செலவிட அவர்கள் தயாராக இருப்பதை அது உணர்த்தியது,” என்றும் கூறினார். “மனிதர்கள் குறித்த புரிதலை எனக்குச் சமூகப்பணி ஏற்படுத்தியது,” என்றார் ஷ்ரேயான்ஷ்.
நாடகத்தில் சிறப்பாகச் செயலாற்றியதற்காகத் தொடர்ந்து மூன்றாண்டுகள் ‘டேவிட் மார்ஷல்’ உபகாரச் சம்பளம் பெற்ற இவர், தலைமைத்துவத்தை வளர்த்துக்கொள்வதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தியதாகக் கூறினார்.
சிங்கப்பூர்க் கலைப்பள்ளியில், ‘சக மாணவர்கள் ஆதரவுக் குழு’ (Founding member of SOTA’s Peer Supporters group) ஒன்றை நிறுவப் பணியாற்றிய இவர், சக மாணவர்கள் ஒருவருக்கொருவர் துணைநிற்க ஊக்குவித்தார். “கல்வி, இணைப்பாட நடவடிக்கைகள், கட்டுரை வரைதல் என சராசரிக் கல்வியைவிட அதிக உழைப்பும் நேரமும் செலவிட வேண்டிய கல்வி முறை இது. ஒரு ‘மாரத்தான்’ ஓட்டம்போல நீண்ட நெடியது. இதில் சக மாணவர்களின் ஆதரவின்றிச் சிறப்பாகச் செயலாற்ற முடியாது. அந்த எண்ணமே இந்தக் குழுவைத் தொடங்க ஊக்குவித்தது,” என்றார் இவர்.
‘சௌக்பால்’ (Tchoukball) விளையாட்டு வீரருமான இவர், தேசிய சேவை முடித்தபின் எதிர்காலத்தில், பொறியியல் துறை வல்லுநராக விரும்புகிறார்.
“எனது கல்வி முறை என்னைச் சிறந்த குழு வீரராகவும் மாறுபட்ட சிந்தனையாளராகவும் மாற்றியுள்ளது. இந்தத் தொழில்நுட்ப உலகில், எல்லாப் பணியையும் இயந்திரங்களால் செய்ய முடிந்தாலும், புத்தாக்கச் சிந்தனைகள் அவசியம். அப்படி, புதிய கண்டுபிடிப்புகளில் பணியாற்ற விருப்பம் உள்ளது. எதிர்காலத்தில் இயந்திரவியல் அல்லது விண்வெளித் துறையில் சாதிப்பேன்,” என நம்பிக்கையுடன் சொல்கிறார் ஷ்ரேயான்ஷ்.

