கப்பல் கேப்டனாக வேண்டும் என்ற மறைந்த தன் தந்தையின் சிறுவயதுக் கனவையும் தன் சொந்த விருப்பத்தையும் நிறைவேற்றும் பயணத்தை மேற்கொண்டுள்ளார் 16 வயது அர்ச்சனா சந்திரசேகரன்.
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சிங்கப்பூர் கடல்துறைப் பயிற்சிக் கழகத்தின் முதல் ஆண்டு மாணவரான அர்ச்சனா, கப்பல்துறை சார்ந்த பட்டயப் படிப்பு பயின்று வருகிறார்.
உபகாரச் சம்பளம் பற்றி...
‘பிஏசிசி ஷிப் மேனஜர்ஸ்’ (PACC Ship Managers) நிறுவனத்தின் ஆதரவில் வழங்கப்படும் முத்தரப்புக் கடல்துறைசார் உபகாரச் சம்பள விருதை (Tripartite Maritime Scholarship) அண்மையில் பெற்ற அர்ச்சனா, எதிர்காலத்தில் பெண் மாலுமிகள் பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற உபகாரச் சம்பள விருதளிப்பு நிகழ்ச்சியில் இந்த உபகாரச் சம்பள விருதைப் பெற்ற 10 பேரில் இவரும் ஒருவர்.
2002ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முத்தரப்புக் கடல்துறைசார் உபகாரச் சம்பள விருது, சிங்கப்பூர் கடல்துறைப் பயிற்சிக் கழகத்தில் கடல்சார் பொறியியல் பட்டயப் படிப்பு (Diploma in Marine Engineering) அல்லது கப்பல்துறை சார்ந்த பொறியியல் பட்டயப் படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கப்பல் கேப்டனாக அல்லது கப்பல் பொறியாளராக மாணவர்கள் எதிர்காலத்தில் பணிபுரிய, இந்த உபகாரச் சம்பள விருது வாய்ப்பளிப்பதோடு கடல்சார் துறையில் தலைமைப் பொறுப்புகளை ஏற்கவும் அவர்களைத் தயார்ப்படுத்துகிறது.
துறைமீது ஈடுபாடு
சென்ற ஆண்டு சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரிக்குச் சென்றிருந்த அர்ச்சனா, சிங்கப்பூர் கடல்துறைப் பயிற்சிக் கழக மாணவர்கள் அங்கு அமைத்திருந்த சாவடி தன்னைப் பெரிதும் ஈர்த்ததாக நினைவுகூர்ந்தார்.
“அவர்கள் நடந்துகொண்ட முறையைப் பார்த்தபோது எனக்கு அவர்கள்மீது மிகுந்த மதிப்பு உண்டானது. கப்பல்துறை சார்ந்த பட்டயப் படிப்பு பற்றி அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் மிகவும் பிடித்திருந்தது. மேலும், கடற்பயணச் சாதனங்களை இயக்கிப் பார்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
“கடல்துறையில் பெண் மாலுமிகளின் பற்றாக்குறையைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது எதிர்காலத்தில் இத்துறையில்தான் பணிபுரிய வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்,” என்றார் அவர்.
தந்தையின் தாக்கம்
தான் வாழ்க்கையில் எடுக்கும் எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அதில் காலஞ்சென்ற தன் தந்தையின் தாக்கம் இருப்பதாகக் கூறுகிறார் அர்ச்சனா.
“நான் இந்தப் படிப்பில் சேர்ந்த பிறகுதான், ஒரு கப்பல் கேப்டனாக வேண்டும் என்பது அவரது சிறு வயதுக் கனவு என்பதை என் உறவினர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன். அவருடைய கனவை நனவாக்கும் பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது,” என்றார் இந்த இளம்பெண்.
முத்தரப்புக் கடல்துறைசார் உபகாரச் சம்பளத்தைப் பெற்றது தனது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள தருணம் என்று இவர் குறிப்பிட்டார்.
“இந்த விருது என்னைத் தொடர்ந்து மேலும் சிறப்பாகச் செயல்படத் தூண்டுகிறது. பள்ளிக் கட்டணத்தை மட்டுமல்லாமல் மாதச் செலவிற்கும் இந்த உபகாரச் சம்பளம் பணம் வழங்குகிறது. என் தேவைகளுக்காக குடும்பத்தாரிடம் நிதி ஆதரவை நாடும் அவசியமும் இருக்காது,” என்றார் அர்ச்சனா.
அனுபவம் புதுமை
“அண்மையில் கடலில் பயணம் செய்யவும் கப்பலை வழிநடத்தவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அந்த அனுபவம் சிந்தித்துப் பார்க்க வைத்தது. பல மாதங்களாக ஒரே பயணத்தை மேற்கொள்வதாக இருந்தாலும் அந்த அமைதியையும் உலகைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பையும் அனுபவிக்க நான் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்,” என்றார் அவர்.
இருப்பினும், ஆண் ஆதிக்கம் உள்ள ஒரு துறையில் ஓர் இளம்பெண்ணாக, தான் சவால்களைச் சந்திக்கக்கூடும் என்ற அர்ச்சனா ஆயினும் தன்னால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
இத்துறையில் பணிபுரிய தன்னைப் போன்ற இளம்பெண்கள் முன்வர வேண்டும் என ஊக்குவிக்கும் அர்ச்சனா, நம்பிக்கையே வாழ்க்கையின் திறவுகோல் என்கிறார்.