கோலத்தை உலக அரங்கிற்குக் கொண்டுசென்ற வடிவமைப்பாளர் அதிதி

கோலத்தை உலக அரங்கிற்குக் கொண்டுசென்ற வடிவமைப்பாளர் அதிதி

2 mins read
0b20d43e-92c1-43db-80cd-955324248826
‘அஃப் கர்வ்ஸ் அண்ட் ஹேண்ட்ஸ்’ (Of Curves and Hands) எனும் தமது இயந்திரத்துடன் வடிவமைப்பாளர் அதிதி. - படம்: மார்க் கொக்செட்ஜன் கண்காட்சிப் படங்கள்

புள்ளிகளுக்கிடையே வளைந்து நெளிந்து செல்லும் எண்ணற்றக் கோடுகளின் ஒற்றுமையால் முழுமைபெறும் கோலம் எனும் நுணுக்கமான கலைவடிவத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளார் வடிவமைப்பாளரான அதிதி நேட்டி, 24.

சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழகத்தில் வடிவமைப்பு ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் அதிதி, இருவழித் தொடர்புடன் அமைந்த நவீனக் கோலம் வரையும் நிறுவலை வடிவமைத்து, அதனை ‘மிலான் வடிவமைப்பு வாரத்தில்’ படைத்துள்ளார்.

‘டிசைன் சிங்கப்பூர்’ அமைப்பின் ஆதரவுடன் அவர் படைத்த ‘அஃப் கர்வ்ஸ் அண்ட் ஹேண்ட்ஸ்’ (Of Curves and Hands) இயந்திரம், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரிடம் கோலம் குறித்த புரிதலைக் கொண்டுசேர்த்துள்ளதை மகிழ்ச்சியுடன் சுட்டினார் அதிதி.

வடிவமைப்பாளரும் புத்தாக்கத் தொழில்நுட்பவியலாளருமான அதிதி, அடிப்படையில் கலாசாரத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வடிவமைப்புகளில் ஆர்வம் கொண்டவர்.

இயந்திரத்தின் உதவியுடன் கையசைவுகளைக் கோலமாக மாற்றும் பார்வையாளர்கள்.
இயந்திரத்தின் உதவியுடன் கையசைவுகளைக் கோலமாக மாற்றும் பார்வையாளர்கள். - படம்: ‘டிசைன் சிங்கப்பூர்’

லாசால் கலைக் கல்லூரியில் பயின்ற அவர், ஒரு தீபாவளிப் பண்டிகையின்போது, சிங்கப்பூரில் தனியாக இருந்ததை நினைவுகூர்ந்தார். தம்மைச் சுற்றி நடைபெறும் கொண்டாட்டங்கள், தமது குடும்பத்தினருடன் இணைந்து வாசல் தெளித்துக் கோலமிட்ட நினைவுகளைக் கொண்டுவந்தன.

தமது நிரலாக்கத் திறன் மூலம் இதனை மின்னிலக்க முறையில் ஒரு வடிவமைப்பாக மாற்றும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக அமைந்ததே இந்தத் திட்டம் என்று அதிதி விவரித்தார்.

அந்த வடிவமைப்பு, கையசைவுகளை ஒளிப்படக் கருவியின்மூலம் படம்பிடித்து அதனைக் கோலமாக உருவாக்கும்.

ஒளிப்படக் கருவிமூலம் படம்பிடித்த அசைவுகளை நிரலாக்கம் மூலம் கோலமாக வரையும் கருவி.
ஒளிப்படக் கருவிமூலம் படம்பிடித்த அசைவுகளை நிரலாக்கம் மூலம் கோலமாக வரையும் கருவி. - படம்: அதிதி நேட்டி

“கோலம் ஒரு வடிவம் மட்டுமல்ல. அரிசி மாவைத் தயாரிப்பது, வாசலில் கோலமிடும் இடத்தைச் சுத்தம் செய்வது, புள்ளிகளை இணைப்பது என அது ஒருவகை தியானம் போன்றது,” என்று விவரித்தார் அதிதி.

அதில் ஓர் ஆன்மா அடங்கியுள்ளதாகக் கூறிய அவர், “கடும் சிரமம் மேற்கொண்டு கோலம் உருவாக்கப்பட்டபோதிலும், நேரம் செல்ல செல்ல அவை அழிந்துவிடும். அந்த நிலையற்ற தன்மையைக் குறிக்கும் வண்ணம், இந்த இயந்திரமும் கோலத்தைச் சற்று நேரத்தில் அழித்துவிடும்,” என்றார்.

இயல்பான கையசைவுகளை நேர்த்தியான கோலமாக மாற்றும் கருவி.
இயல்பான கையசைவுகளை நேர்த்தியான கோலமாக மாற்றும் கருவி. - படம்: மார்க் கொக்செட்ஜன் கண்காட்சிப் படங்கள்

“தென்னிந்தியப் பாரம்பரியத்தில் பின்னிப் பிணைந்த ஓர் அழகிய கலை வடிவத்தை, உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கும் அது குறித்த உரையாடலை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையானது,” என்றார் அதிதி.

“உலகெங்கிலும் இருந்துவந்த மக்கள், இயந்திரங்கள் மெதுவாக, நேர்த்தியாக நகர்ந்து கோலமிடுவதை உற்று நோக்கி ரசித்தனர். அதன் பின்னணி குறித்தும் முக்கியத்துவம் பற்றியும் கேட்டறிந்தனர்,” என்றும் அவர் கூறினார்.

கோலமிடப் பயன்படுத்தப்படும் பொருள்களின் தன்மையை உணரும் வகையில், அந்த வடிவமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தவும் அவர் விரும்புகிறார்.

முதுகலைப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் அதிதி, “நடைமுறையில் கலாசாரமும் தொழில்நுட்பமும் இணையும் திட்டங்களையும் நம்மைச் சுற்றியுள்ள வாழ்வின் மதிப்புகளை உணரவைக்கும் திட்டங்களையும் ஆராய விரும்புகிறேன்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்