கல்வி, பணி உயர்வு, தனிப்பட்ட வாழ்க்கை எனப் பல அம்சங்களில் சிறகடிக்கத் துடிக்கும் இளையர்கள், புத்தாண்டில் தாங்கள் எட்ட விரும்பும் உயரத்தையும் வடிவமைக்க விரும்பும் வாழ்க்கையையும் நன்கு சிந்தித்து வருகின்றனர்.
தெளிவான இலக்கை நோக்கித் திட்டமிட்டுச் செயல்பட விரும்புகின்றனர் இந்த இளையர்கள்.
புத்தாண்டு என்பது அச்சத்திற்கு மத்தியிலும் துணிச்சலுடன் செயல்படுதே 20 வயது இலக்கிய மாணவி ரஞ்சனா வெங்கடேசனின் 2026ஆம் ஆண்டிற்கான நோக்கமாக உள்ளது. வெறும் எண்ணங்களோடு நில்லாமல் செயல்களின் மூலம் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஆண்டாகக் கருதுகிறார் அவர். கல்விச் சூழலில், பேராசிரியர்கள், சக மாணவர்களுடன் உரையாடும்போது தமது கருத்துகளை இன்னும் ஆணித்தரமாக முன்வைக்க அவர் விரும்புகிறார்.
படிப்புடன் சேர்த்து நடனம், எழுத்துத் துறைகளிலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், தமது படைப்பாற்றல், தனிப்பட்ட வளர்ச்சிக்கான முடிவுகளைச் சொந்தமாக எடுக்க அவர் உறுதிகொண்டுள்ளார்.
தனித்துச் செயல்படும் சுதந்திரமும் புதிய பொறுப்புகளும் மென்பொருள் பொறியாளர் கீர்த்தி விஹாஷினிக்கு, 24, 2025ஆம் ஆண்டை ஆக்கிரமித்தன. பணி சார்ந்த கற்றலில் அதிக கவனம் செலுத்தியதால், பணிக்கு வெளியே தமது இருப்பைத் தக்கவைப்பது அவருக்குச் சவாலாக இருந்தது.
புத்தாண்டில், தமது நேரத்தையும் ஆற்றலையும் சரியாக நிர்வகிக்க அவர் விரும்புகிறார். தயக்கமின்றிப் புதிய முடிவுகளை எடுப்பதும், அன்றாட வாழ்க்கையில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பதும் அவரது இலக்குகளாகும். வெற்றியை வெறும் புள்ளிவிவரமாகப் பார்க்காமல், சுய விழிப்புணர்வுடன் கூடிய வளர்ச்சியாக அவர் கருதுகிறார்.
வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழல் ஜனகன் செல்வராஜுவை, 25, தமது எதிர்காலம் குறித்துச் சிந்திக்கத் தூண்டியது.
புத்தாண்டில் பணியில் நிலையான வளர்ச்சியை எட்டுவதோடு, ஒரு புதிய பட்டப் படிப்பையும் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். உடனடி முன்னேற்றத்தைவிட, திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் தமது தொழில் வாழ்க்கையில் நிலையான அடித்தளத்தை உருவாக்க அவர் விரும்புகிறார்.
தொடர்புடைய செய்திகள்
தயக்கங்களை உடைக்கும் படைப்பாற்றலும் சுய விழிப்புணர்வுடன் கூடிய வளர்ச்சியும் எதிர்காலப் பாதுகாப்பிற்கான திறன் மேம்பாடும் இந்த இளையரின் வேட்கையாக உள்ளது.
புத்தாண்டை நோக்கியப் பயணத்தில் கால சூழ்நிலைகளை அரவணைத்து சவால்களை எதிர்கொண்டு சாதனைகளைத் தன்வசப்படுத்த விரும்பும் ஒவ்வொருவரின் இலக்குக்கும் முயற்சியே முதற்படி என்று ஒருமித்தமாக இந்த இளையர் நம்புகின்றனர்.

