கடந்த காலத்தைக் கண்முன் நிழலாட வைக்கும் அழகியல் தன்மை கொண்ட ‘வின்டேஜ் டிஜிட்டல் கேமராக்கள்’ அல்லது, ‘டிஜிகாம்கள்’ என்று சுருக்கமாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழங்கால மின்னிலக்கப் படக்கருவிகள் சிங்கப்பூர் இளையர்களை அண்மைக் காலமாக அதிகம் ஈர்த்துவருகின்றன.
ஃபிலிம் கேமராக்கள் மறுமலர்ச்சி கண்டதைத் தொடர்ந்து இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களின் குழந்தைப் பருவத்தைப் படம்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட, 2000களில் பிரபலமாக இருந்த சிறிய மின்னிலக்க கேமராக்களின் வசம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
நேர்த்தியான உலோக அமைப்பு, உள்ளமைக்கப்பட்ட உருவளவுக் கண்ணாடி வில்லை போன்ற அம்சங்களுக்காக அறியப்படும் இந்த கேமராக்கள், டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. டிக்டாக்கில் #டிஜிட்டல்கேமரா (#digitalcamera) என்ற ஹேஷ்டேக் இணைப்புடன் 310,000க்கும் மேற்பட்ட காணொளிகள் இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தம் குடும்பத்தாருக்குச் சொந்தமான பழைய மின்னிலக்க கேமராவை வீட்டில் கண்டெடுத்த இளையர் ரக்ஷா ஐயப்பன், 22, அப்படியே அதில் தனது ஆர்வம் தூண்டப்பட்டதாகச் சொன்னார்.
“நான் என் பெற்றோரின் பழைய ‘கேனன் பவர்ஷாட் எஸ்டி800’ டிஜிகாமைக் கண்டுபிடித்து அதில் படங்களை எடுத்துப்பார்த்தபோது, அவை மிகவும் அழகாக இருந்தன. குறிப்பாக, இரவு நேரங்களில் அதைப் பயன்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்று அவர் கூறினார்.
தனது கைப்பேசியில் புகைப்படங்கள் எடுப்பதைவிட மின்னிலக்க கேமராவின் தனித்துவமான ஒளியமைப்புடனும் குடும்ப நினைவுகளுடனான அதன் உணர்வுபூர்வமான தொடர்புடனும் படம்பிடிப்பது மேல் என்று ரக்ஷாவிற்குத் தோன்றியது. மேலும், கைப்பேசியில் காண முடியாத பல தனித்துவமான சிறப்பு அம்சங்களை மின்னிலக்க கேமராக்கள் கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அவரைப் பொறுத்தவரையில், மின்னிலக்க கேமராவைப் பயன்படுத்துவது மாறிவரும் போக்காக மட்டுமல்லாமல் புகைப்படக் கலையின்மீது இன்றைய இளையர்களின் ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதாகவும் நம்புகிறார்.
சமூக ஊடகப் பிரபலங்களும் தன் நண்பர்களும் மின்னிலக்க கேமராக்களை அதிகம் பயன்படுத்துவதைக் கண்டு அதன்பால் ஈர்க்கப்பட்ட செந்தில் குமார் ஹர்ஷா, 21, காத்தோங்கிலிருந்த ஒரு சாவடியிலிருந்து சிவப்பு நிற ‘சாம்சங் இஎஸ்90’ மின்னிலக்க கேமராவை வாங்கியதாகச் சொன்னார். பிறந்தநாள், பயணங்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் இனிமையான தருணங்களைப் படம்பிடிக்க தனது மின்னிலக்க கேமராவைப் பயன்படுத்தி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“தொழில்முறை கேமராக்களைக் காட்டிலும் இவை குறைந்த விலையில் கிடைப்பதால் ஒருவர் புகைப்படக் கலையில் வளர்ச்சி அடைய இவை துணைபுரியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு ஏற்ப, மின்னிலக்க கேமராக்களின் மீது இளையர்கள் கொண்டுள்ள மோகமும் காலப்போக்கில் மாறலாம் என்று அவர் நம்புகிறார்.
கைப்பேசிகளைவிட மின்னிலக்க கேமராக்கள் புகைப்படக்கலையின் அழகை முழுமையாக வெளிப்படுத்துவதாக நம்புகிறார் 20 வயது அண்ணா பாலகிருஷ்ணன் ஸ்ரீவத்ஷன்.
“நான் என் தந்தையின் பழைய கேமராவைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்கத் தொடங்கியபோது புகைப்படக்கலையின்மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
முக்கியமான தருணங்களைப் படம்பிடிக்க அவர் தற்போது ‘நிக்கான் கூல்பிக்ஸ் ஏடபிள்யூ120’ கேமராவை இவர் பயன்படுத்துகிறார். கைப்பேசியில் அமைந்துள்ள சில செயலிகள் மின்னிலக்க கேமராவால் எடுக்கப்படும் புகைப்படங்களைப் போன்ற தோற்றத்தைத் தந்தாலும், அவை உண்மையான மின்னிலக்க கேமராவால் எடுக்கப்படும் புகைப்படங்களுக்கு ஈடாகாது என்கிறார் இவர்.
“கைப்பேசி கற்றுக்கொடுக்காத புகைப்படக்கலையின் தொழில்நுட்ப அம்சங்களை மின்னிலக்க கேமராக்கள் கற்றுத் தருகின்றன,” என்று அவர் கூறினார்.
அதன் அழகாலும் செயற்பாட்டாலும் கவரப்படும் இளையர்கள் நீண்ட காலத்திற்கு அதைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

