தனித்துவத்தை வலிமையாக மாற்றிய இளையர்

தனித்துவத்தை வலிமையாக மாற்றிய இளையர்

படம்: தினெஷ் ராஜேந்திரன்

16 Nov 2026 - 5:30 am

3 mins read

இவ்வாண்டு சிங்கப்பூர் ஃபார்முலா 1 பந்தயத்தின்போது நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகி சாரா லார்சனுடன் இணைந்து மேடையில் நடனமாடி, இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் 23 வயது தினெஷ் ராஜேந்திரன். 

தினெஷின் நடனத்திறன் திடீரென உருவாகவில்லை. ‘ஸ்திரீட் டான்ஸ்’ எனப்படும் மேற்கத்திய தெருவோர நடனம், இவரது உணர்வோடு முழுமையாய் இயைந்த கலை.

நடனக் குடும்பத்தில் வளர்ந்த இவரது தாய் தந்தையர் ‘ஸ்திரீட் டான்ஸ்’ ஆடும் இடத்தில்தான் சந்தித்தனர்.

தம் அக்காவும் சிறுவயது முதலே பயிற்சி செய்துவரும் நல்ல நடனக் கலைஞர் என்று தினெஷ் கூறினார். குடும்பத்தினர்களின் திறமையைக் கண்டு இவருக்கும் நடனத்தின்மீதான ஆர்வம் வளர்ந்தது. 

தொடக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே நடன வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கிய தினெஷ், 13 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடனம் ஆடி வருகிறார். 

சிங்கப்பூரின் லாசால் கலைக் கல்லூரியில் பாலே நடனமாடிய தினெஷ்.
சிங்கப்பூரின் லாசால் கலைக் கல்லூரியில் பாலே நடனமாடிய தினெஷ். - படம்: தினெஷ் ராஜேந்திரன்

பலவகை நடனங்கள்மீது ஆர்வம்

முதலில் ‘ஹிப் ஹாப்’ (Hip-Hop), லத்தீன் (Latin) வகை நடனங்களைக் கற்றுக்கொண்ட தினெ‌ஷ், வெவ்வேறு நடன வகைகளை ஆராய்ந்து அவற்றை நுட்பத்தோடு ரசிக்கத் தொடங்கினார்.

சிங்கப்பூர்க் கலைப் பள்ளியிலும் (ஸோட்டா) லாசால் கலைக் கல்லூரியிலும் பாலே, சமகால நடனம் (Contemporary) போன்ற பல்வேறு நடன வடிவங்களை இவர் கற்றுத் தேர்ந்தார். 

மற்ற நடன வகைகளை எளிதாகக் கற்க அந்த நடனப் பயிற்சிகள் அடித்தளமாக அமைந்ததாக தினெ‌‌ஷ் குறிப்பிட்டார். 

வாரத்தில் நான்கு நாள்கள் நடன வகுப்புகளுக்குச் சென்று தீவிரமாகப் பயிற்சி பெறுவதோடு, பள்ளிப் படிப்பிலும் கவனம் செலுத்துவது தொடக்கத்தில் மிகவும் சவாலாக இருந்ததாக இவர் சொன்னார். 

பள்ளி முடிந்து உடல் சோர்ந்துபோகும் நாள்களிலும், நடன வகுப்புகளுக்குச் செல்ல வேண்டுமா என்ற எண்ணம் சில வேளைகளில் தலைதூக்குவதாக தினெஷ் கூறினார்.

“ஆனால், நடனம் என்பது கடமைக்காகச் செய்யும் வேலை அன்று. அது நான் மனமார நேசிக்கும் உயிர்நாடி. கலை மீதான அளவுகடந்த காதலே என் சோம்பலைத் தகர்த்து எறிந்தது,” என்றார் இந்த இளையர். 

மனத்திற்குப் பிடித்தமான ஒரு செயலைச் செய்யும்போது எவ்வளவு களைப்பு இருந்தாலும் அதற்கென நேரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற மனவுறுதி தம்மை வெற்றிபெறச் செய்ததாக இவர் சொன்னார்.  

“ஒரு செயலை முழுமனத்துடன் விரும்பினால், எவ்வளவு களைப்பாக இருந்தாலும் அதற்கென நேரம் ஒதுக்க முடியும்,” என்கிறார் தினெஷ்.

நடனம்வழி உருவான தனி அடையாளம்

பல்வேறு நடன வகைகளை சளைக்காமல் கற்ற தினெஷ், நாளடைவில் அந்தக் கலையைத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தினார். 

மேடையில் ஆடும் ஒவ்வொரு நொடியும் இவருக்கு இன்பம் தந்தது. நியூசிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞர் பாரிஸ் கோபெல், தினெஷுக்குப் பேரூக்கமாக இருக்கிறார்.

சிறுவயதிலேயே நடனமாடத் தொடங்கி, ரியானா, லேடி காகா போன்ற முன்னணிப் பாடகிகளின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளுக்கு நடனம் அமைத்து, அவர் வெற்றி பெற்றதை எண்ணி தினெஷ் வியந்தார். 

தினெஷுக்குச் சிறந்த முன்மாதிரியாக மாறினார் பாரிஸ் கோபெல். தினெஷும் நடனத்தை மற்றவர்களைவிட வித்தியாசமாகப் பார்க்க நினைப்பதால், பாரிஸ் கோபெலின் நடனங்கள் தினெஷின் ஆர்வத்திற்குப் புதுவழியைக் காட்டின.

ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னால் புகழ்பெற்ற பாடகியுடன் சேர்ந்து ஆடி, நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார் தினெஷ்.
ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னால் புகழ்பெற்ற பாடகியுடன் சேர்ந்து ஆடி, நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார் தினெஷ். - படம்: தினெஷ் ராஜேந்திரன்

எஃப்1 மேடையில் நனவான கனவு

சிங்கப்பூர் கிராண்ட் பிரீயின்போது நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சாரா லார்சன் பாடலுக்கு ஆட வேண்டும் என்ற வேட்கை தினெஷ் மனத்தில் மிகுந்திருந்தது.

ஓராண்டுக்கு முன்பே அந்தப் பாடலின் நடன அசைவுகளை அவர் ஆடி, காணொளியாகப் பதிவுசெய்து டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்தார்.

நிகழ்ச்சி நடந்த நாளன்று, தினெஷ் தன் நண்பருடன் மேடைக்கு மிக அருகில் முதல் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, மேடையில் பாடகி சாரா லார்சனுடன்  சேர்ந்து ஆட கூட்டத்தில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்தது. 

அந்தப் பாட்டின் நடன அசைவுகள் தனக்கு நன்றாகத் தெரியும் என்பதைக் காட்டுவதற்காக, கூட்டத்தின் நடுவிலேயே உற்சாகமாக ஆடினார்.

அவரது துடிப்பையும் தன்னம்பிக்கையையும் பார்த்த நடனக் கலைஞர்கள் அவரையே கைகாட்டினர். உடனே அங்கிருந்த பாதுகாப்புக் காவலர்கள் அவரை மேடைக்கு அழைத்தனர். 

ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்குமுன் புகழ்பெற்ற பாடகியுடன் சேர்ந்து ஆடி, தினெஷ் தமது நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார்.

தன்னம்பிக்கையும் குறிக்கோளும்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு இரண்டு மாதகாலப் பயணம் மேற்கொண்டு சிறந்த நடன அமைப்பாளர்களிடம் பாராட்டு பெற்றவர் தினெஷ்.

உலகப் புகழ்பெற்ற பாடகர்களோடு சேர்ந்து பெரிய மேடைகளில் ஆடவேண்டும் என்பதுதான் இவரது குறிக்கோள்.

ஒருவரது கனவு மெய்ப்பட அவர் அரும்பாடு படவேண்டும் என்பதே இளையர்களுக்கு இவர் கூறும் அறிவுரை.

“உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டும் அடையாளங்களை உங்களின் வலிமையாகக் கருதுங்கள். தயங்காமல் உங்கள் கனவுகளை நோக்கி முதல் அடியை எடுத்து வையுங்கள். உங்களாலும் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்,” என்கிறார் தினெஷ்.

குறிப்புச் சொற்கள்