இந்திய இளையர்களின் சாதனைகளைத் தொகுத்த ‘எழுச்சிமிகு தமிழ் இளையர்’ நூல்

2 mins read
f4c3afdb-80df-4acf-b2aa-da35ffcfc0b8
சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் தொகுத்து வழங்கிய “எழுச்சிமிகு தமிழ் இளையர்” நூலில் இடம்பெற்ற இளையர்கள் - படம்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்

சிங்கப்பூரின் 60ஆவது பிறந்தநாளையொட்டி 64 சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களின் பெருமைக்கூறிய சாதனைகளின் தொகுப்பான ‘எழுச்சிமிகு தமிழ் இளையர்’ எனும் நூல் வெளியீடு கண்டது.

ருக்மிணி தேவி சயந்தன் தொகுத்த இந்நூல் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் சார்பில் நவம்பர் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் வெளியிடப்பட்டது.

நூல் வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வெஸ்ட் கோஸ்ட் -ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக், சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் புரவலர் திரு ராஜ்குமார் சந்திரா ஆகியோர் வருகையளித்தனர்.

வீரம் என்ற தலைப்பில் சுயம்பு நாடகக்குழுவின் சிறப்பு நடனம், தொகுப்பாசிரியரின் வரவேற்புரை, மன்றத்தின் மூத்த மதியுரைஞர் பேராசிரியர் அ வீரமணியின் உரை ஆகியவை இடம்பெற்றன. அவர் சிங்கப்பூர் உலக அரங்கில் நிலைபெற்வதற்கு, தமிழ் மொழி எவ்வாறு பங்களித்துள்ளது என்பதை பங்கேற்ற இளையர்களுக்கு சுவாரசியமான முறையில் விளக்கினார்.

மேலும், ‘இன்றைய இளையர்கள்’ எனும் தலைப்பில் எழுத்தாளர்கள் சிவானந்தம் நீலகண்டன், பிரேமா மகாலிங்கம், ஷாநவாஸ், மாலதி பாலா ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகத் திகழ்ந்தது. இதனைச் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் தலைவர் லாவண்யா பிரேம் ஆனந்த் வழிநடத்தினார். இதில் இளையர்களின் பங்களிப்பு, அவர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம், மேலும் பல இளையர்கள் பல்வேறு மொழி, சமூகப் பணிகளில் ஈடுபடுவதன் அவசியம் ஆகியவை குறித்து பேசப்பட்டது.

“சாதனைபுரிந்த இந்திய இளையர்களை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது மேலும் பல இளையர்களைச் சாதிக்க ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்,” என்றார் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் செயலாளர் காமேஸ்வரன், 22.

நூலில் இடம்பெற்ற சாதனையாளர்கள் சிலரும் அவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் குறித்து தமிழ்முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.

“இசை, நாடகம் போன்ற துறைகளுக்குப் பொதுவாக அங்கீகாரம் கிடைப்பது எளிதல்ல. இது போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் அங்கீகாரம் கிடைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்றார் கலைத்துறைப் பங்களிப்புகாக நூலில் இடம்பெற்ற அவா கண்ணன், 23 மற்றும் புவனேஸ்வரன், 28.

நாடு கடந்து தமிழ் விவாத போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து தேர்ச்சிபெற்ற ரகுநந்தன், 21 மற்றும் விஷாலினி, 20 ஆகியோர், “சிங்கப்பூரில் தமிழ்மொழிக்குப் பங்களிப்பதில் பெருமை,” என்றனர்.

சிறுவயதுமுதல் விளையாட்டுத்துறையில் இயங்கிவரும் பிரம்மரூபன் பிரேமகுமார், 14, “விளையாட்டுத்துறையின் வழி தமிழ்க் கலாசாரத்தை முன்னிலைப்படுத்தியதில் மகிழ்ச்சி,” என்றார்.

குறிப்புச் சொற்கள்