கனவு மெய்ப்பட முயற்சியே திறவுகோல்

கனவு மெய்ப்பட முயற்சியே திறவுகோல்

4 mins read
படிக்கும்போதே வர்த்தகம் செய்வது என்பது மாணவரின் வாழ்க்கையில் கல்வியையும் பொறுப்பையும் இணைக்கும் ஒரு சிறந்த பயணமாகும். அது மாணவர்களுக்குப் பொருளியல் சுதந்திரத்தை அளிப்பதோடு, அனைத்துலக வேலைச் சூழலை முன்கூட்டியே புரிந்துகொள்ளவும் உதவுகிறது.புத்தக அறிவைத் தாண்டி, நேர மேலாண்மை, ஒழுக்கம் ஆகியவற்றை அந்த அனுபவம் கற்றுத்தருகிறது. அவ்வாறு கல்லூரியில் பயின்றபோதே தமது பாட ஒப்படைப்பு மாதிரியை வர்த்தகமாக மாற்றிய இளையரைக் குறித்து இதில் அறியலாம்.
065b6373-80d2-4ab2-be01-ce4b0aca0da5
‘மைக்ரோ மஞ்ச்’ இணை நிறுவனர் சக்தி குமரன் செல்வகுமரன், 21. - படம்: சக்தி குமரன்

மற்றவகை காய்கறிகளைவிட பன்மடங்கு அதிகச் சத்துகள் கொண்ட நுண்கீரைகள் வளர்க்கும் உத்தியை வெற்றிகரமான வணிகமாக மாற்றியுள்ளார் ‘மைக்ரோ மஞ்ச்’ (Micro Munch) நிறுவனத்தின் இணை நிறுவனர் சக்தி குமரன் செல்வகுமரன், 21.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முன்னாள் மாணவர் இவர்.

பள்ளித் தொழில்முனைவோர்க்கான பாட ஒப்படைப்புத் திட்டமாகத் தொடங்கிய இவரது திட்டம், இன்று பலருக்கு ஏழு நாள்களில் வளரும் நுண்கீரைகளை வளர்க்கவும் அதைப் பயன்படுத்தி எளிதில் சத்துமிகு உணவைச் சமைக்கவும் கற்பித்து வருகிறது.

வீட்டிலேயே எளிதாகத் தாவரங்களை வளர்க்கக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமன்றி, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை நோக்கி சிங்கப்பூரர்களின் வாழ்வியலை நகர்த்துவதே ‘மைக்ரோ மஞ்ச்’ நிறுவனத்தின் நோக்கம் என்கிறார் திரு சக்தி குமரன்.

நுண்கீரைகள் என்பவை முளைகட்டிய தானியங்களுக்கும் தளிர் இலைகளைக் கொண்ட காய்கறிகளுக்கும் இடைப்பட்ட வளர்ச்சி நிலையில் உள்ள தாவரங்களாகும். அவை அளவில் சிறியதாக இருந்தாலும், முழுமையாக வளர்ந்த காய்கறிகளைவிட மிகுந்த சுவையும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துகளும் கொண்டவை.

ஆணிவேராகப் பதிந்த சிந்தனை

நுண்கீரைகள் பற்றியும் அவற்றின் வளரும் தன்மை குறித்தும் தாவரங்கள்மீது அதிக ஆர்வம் கொண்ட நண்பர் ஒருவரின் மூலம் சக்தி குமரன் தெரிந்துகொண்டார்.

அவற்றைப் பற்றி கேட்டவுடன் தாம் வியப்பில் ஆழ்ந்ததாகவும் பின்னர், அதன் தொடர்பில் பல தகவல்களை இணையம் வழி தாம் சேகரித்ததாகவும் அவர் சொன்னார்.

2024ஆம் ஆண்டு ஏப்ரலில் தம்முடைய பள்ளி ஒப்படைப்புத் திட்டமாக அதைச் செய்ய எண்ணிய அவர், தம்முடைய சிந்தனைக்கு வடிவம் கொடுக்கத் தொடங்கினார்.

தமது குழுவினருடன் நுண்கீரைகள் அடங்கிய தயாரிப்பை உருவாக்கிய சக்தி குமரன் (வலமிருந்து இரண்டாவது).
தமது குழுவினருடன் நுண்கீரைகள் அடங்கிய தயாரிப்பை உருவாக்கிய சக்தி குமரன் (வலமிருந்து இரண்டாவது). - படம்: சக்தி குமரன்

முயற்சியும் முன்னேற்றமும்

தொழில்முனைவர்க்கான பாட ஒப்படைப்புத் திட்டத்திற்கு $1,000 நிதி வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி நுண்கீரைகளுக்கான விதைகள் அடங்கிய தயாரிப்பு ஒன்றை அவர் உருவாக்க முனைந்தார்.

சரியான மண் கலவையை உருவாக்க ஆறு முறை சோதனை செய்த அவர், நண்பர் ஒருவரின் உதவியுடன் செடிகளை வளர்க்கத் தொடங்கினார். அந்தப் பொட்டலத்திற்கு ‘மைக்ரோ மஞ்ச்’ எனப் பெயரிட்ட அவர், அதனை முதல்முறையாக அவ்வாண்டுச் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் அறிமுகப்படுத்தினார்.

தொடக்கத்தில் பொட்டலம் ஒன்றின் விலை $10 ஆக சக்தி குமரன் உறுதி செய்திருந்தார். பின்னர், ஆசிரியர்களின் ஆலோசனைக்கேற்ப தயாரிப்பின் வடிவமைப்பையும் அதன் விலையையும் மாற்றியமைத்தார் அவர்.

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், நுண்கீரைகளை எளிதில் வளர்க்கக்கூடிய அறிவுறுத்தல்களுடன் கூடிய பெட்டிகளை அவர் தயாரித்தார். பொருள்களின் விலையை $6.90 ஆகவும் அவர் மாற்றியமைத்தார். அதன் பிறகு விற்பனை அதிகரித்தது. இணையம் வழியாக அவர், கீரைகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்தார்.

புரோக்கலி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி ஆகிய மூன்று வகைகளில் அந்த நுண்கீரை வளர்ப்புத் தொகுப்புகளை தமது குழுவினரின் உதவியுடன் தயாரித்து, விற்பனை செய்தார் சக்தி குமரன்.

பள்ளி வழங்கிய $1,000 ஆரம்ப முதலீட்டை மூன்றே மாதங்களில் ஈட்டிய அவர், தமக்குக் கிடைத்த லாபம் அனைத்தையும் ஐக்கிய நாட்டு குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப்பிற்கு நன்கொடையாக வழங்கினார்.

மேலும், தமது தாயாருடன் இணைந்து ‘மைக்ரோ மஞ்ச்’ தயாரிப்பைப் பயன்படுத்தி ‘காய்கறிக் கூட்டு’ உணவை அவர் தயாரித்தார். நுண்கீரைகளைப் பயன்படுத்தி சமைக்கக்கூடிய உணவு வகைகள் குறித்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தினார் அவர்.

‘மைக்ரோ மஞ்ச்’ தயாரிப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘சாலட்’.
‘மைக்ரோ மஞ்ச்’ தயாரிப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘சாலட்’. - படம்: சக்தி குமரன்
புரோக்கலி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி ஆகிய மூன்று வகைகள் அடங்கிய ‘மைக்ரோ மஞ்ச்’ தயாரிப்புகள்.
புரோக்கலி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி ஆகிய மூன்று வகைகள் அடங்கிய ‘மைக்ரோ மஞ்ச்’ தயாரிப்புகள். - படம்: சக்தி குமரன்

வணிகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி வழங்கிய இடத்தில் தமது வர்த்தகப் பிரிவை நடத்திவந்த அவர், ஓராண்டுக்குப் பிறகு அதை வேறு இடத்திற்கு மாற்றினார்.

பள்ளிப் படிப்பு முடிந்ததால், ‘மைக்ரோ மஞ்ச்’ குழுவில் இருந்த சில மாணவர்கள் தமது வாழ்க்கைத் தொழிலுக்கான பயணத்தைத் தொடங்கினர்.

பத்துப் பேர் இருந்த அந்தக் குழுவில் தற்போது நால்வர் மட்டுமே இருந்தாலும், தமது வணிகத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் சக்தி குமரன்.

பள்ளியில் இருக்கும்போதே தொழில்முனைவராக வேண்டும் என்ற தமது கனவுக்கு விதைபோட்ட அவர், கூடுதலாக 15 வகைகளைச் சேர்க்கவும் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இளவயதிலேயே கிடைத்த தொழில் அனுபவம் தமக்கு நேர மேலாண்மையைச் சொல்லி கொடுத்ததாகவும் குடும்பம், நட்பு வட்டம், தொழில் ஆகியவற்றிற்கு எந்நேரத்தில் எவ்வாறு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதைத் தாம் அறிந்துகொண்டதாகவும் நிறுவனம் ஒன்றில் வேலைப் பயற்சி திட்டத்தில் பணியாற்றிவரும் சக்தி குமரன் கூறினார்.

மேலும், தமது நிறுவனத்தை இவ்வாண்டு ஜூன் மாதத்தில் புதுப் பொலிவுடன் மீண்டும் நிறுவ இருப்பதாகக் கூறிய அவர், “சிங்கப்பூர்க் குடும்பங்களை நலமிக்க வாழ்வியலை நோக்கி நாங்கள் மாற்றுவோம்,” என உறுதிபூண்டார்.

இளையர்களைத் தொழில்முனைவர்க்கான பாதையில் பயணம் செய்ய ஊக்குவித்த அவர், நண்பர்களுடன் இணைந்து ஆக்ககரமான கலந்துரையாடலின் மூலம் அவர்களின் கனவுகளை நினைவாக்கும் முயற்சியில் ஈடுபட கூறினார்.

வெற்றியோ தோல்வியோ முயற்சியே சிந்தனைகள் மெய்ப்படுவதற்கான திறவுகோல் என்பதை இச்சமுகத்திற்குத் தமது செயல்கள் மூலம் நிரூபித்திருக்கிறார் சக்தி குமரன்.

இச்சமூகத்திற்குத் தமது செயல்கள் மூலம் உரக்கச் சொன்ன சக்தி குமரனின் முயற்சிகள் வெற்றிப் பெற வாழ்த்துகிறது தமிழ் முரசு.

‘மைக்ரோ மஞ்ச்’ தயாரிப்புகள்.
‘மைக்ரோ மஞ்ச்’ தயாரிப்புகள். - படம்: சக்தி குமரன்
குறிப்புச் சொற்கள்