தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புதிய அரசாங்கத்திடம் சிங்கப்பூர் இளையர்கள் முன்வைக்கும் கோரிக்கை

பிடித்த வேலை, விரும்பிய வீடு, உளைச்சல் அற்ற வாழ்க்கை, சீரான சமூகம்

7 mins read
3251f8f7-cd9a-453f-b0cf-a65268b0d3b2
தங்களது வாக்குகளும் பிற சிங்கப்பூரர்களின் வாக்குகளும் தங்களது எதிர்காலத்தை எவ்வாறு மாற்றியமைக்கவிருக்கின்றன என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் இளையர்கள். - தமிழ் முரசு

மக்கள் செயல்கட்சி (மசெக) பெரும்பான்மை வாக்குகளைப் பெறும், பெற வேண்டும் என்ற தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதில் நிம்மதி அடைந்துள்ளதாகத் தமிழ் முரசிடம் பேசிய இளையர்கள் தெரிவித்தனர். புதிய அரசாங்கம், இன்றைய தலைமுறைக்கு ஏற்ப கொள்கைகளை உருவாக்கும், மாற்றும் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் 2020 தேர்தலைவிட 4.33% அதிகமாக மக்கள் செயல் கட்சி 65.57% வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளது. பிரதமர் லாரன்ஸ் வோங் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது என்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ரிஷி சங்கர், பிரதமர்மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்றார்.

இக்கட்டான உலகப் பொருளியல் சூழலில் சிங்கப்பூரை லாரன்ஸ் வோங் சரியாக வழிநடத்துவார் என்ற அவரது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பல இளையர்களும் பிரதிபலித்தார்கள்.

வேலை, திறன் பயிற்சியில் உதவி

சிங்கப்பூரின் இன்றைய சூழல் புது பட்டதாரிகளுக்குச் சாதகமாக இல்லாதது போல் உணர்கிறார் ஷிரேயா ராமசாமி.
சிங்கப்பூரின் இன்றைய சூழல் புது பட்டதாரிகளுக்குச் சாதகமாக இல்லாதது போல் உணர்கிறார் ஷிரேயா ராமசாமி. - படம்: ஷிரேயா ராமசாமி

பட்டக்கல்வி பயில்பவர்களும் வேலை தேடும் புதிய பட்டதாரிகளும் அரசாங்கத்திடம் உடனடியாக எதிர்பார்ப்பது வேலை பெறுவதிலும் திறன் பயிற்சியிலும் அரசாங்கத்தின் கூடுதல் உதவியைத்தான்.

மசெகவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட எஸ்ஜி ஒற்றுமை இயக்கத்தின் வேலை, திறன் தொகுப்புத் திட்டம் ஆகிய முயற்சிகளை ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட 22 வயது ஷிரேயா ராமசாமி, அடுத்த ஐந்தாண்டுகளில் சீரான முறையில் செயலாக்கம் காண வேண்டுமென்றும் விரும்புகிறார்.

தரவு அறிவியலில் இந்த ஆண்டு பட்டக்கல்வியை முடிக்க இருக்கும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவியான ஷிரேயாவிற்கு, பிடித்த வேலை கிடைக்குமா என்பதே பெருங் கவலை.

“சிங்கப்பூரில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேபோல் போட்டித்தன்மையும் அதிகமாக உள்ளது. கல்வியும் திறமையும் இருந்தாலும் அதிர்ஷ்டமும் தொடர்புகளும் இல்லாவிடில் புதிய பட்டதாரியாக வேலை தேடுவது கடினமாகவே இருக்கிறது,” என்றார் அவர்.

அதனால் கிடைக்கும் வேலையில் முதலில் சேரத் திட்டமிட்டுள்ளார். இளங்கலை பட்டப்படிப்பிற்கு வாங்கிய கடன்களை அடைக்க உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஷிரேயாவுக்கு உள்ளது. “ஓரளவிற்காவது நிதி சுதந்திரம் பெற்ற பின்னரே மேற்படிப்பைப் பற்றியும் பிடித்த வேலை பற்றியும் சிந்திக்க முடியும்,” என்றார் ஷிரேயா.

அதே வேளையில், ஏற்ற வேலையைப் பெற முடியுமென்ற நம்பிக்கை சில இளையர்களின் மத்தியில் இருக்கிறது.

எதிர்பார்ப்புகளை அளவுடன் வைத்திருப்பது, தங்கள் துறையைக் குறித்து நன்கு ஆராய்ந்த பின்னர் வேலை தேடுவதன் மூலம் நல்ல வேலையைப் பெற முடியுமென நம்புகிறார் அருணா கந்தசாமி.
எதிர்பார்ப்புகளை அளவுடன் வைத்திருப்பது, தங்கள் துறையைக் குறித்து நன்கு ஆராய்ந்த பின்னர் வேலை தேடுவதன் மூலம் நல்ல வேலையைப் பெற முடியுமென நம்புகிறார் அருணா கந்தசாமி. - படம்: அருணா கந்தசாமி.

புதிய பட்டதாரியான 23 வயது அருணா கந்தசாமி இளையர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம் என எண்ணுகிறார்.

படிப்பை முடித்ததும், முதல் வேலையிலேயே $6,000 முதல் $8,000 சம்பளம் வேண்டும் என நினைப்பது மன உளைச்சலையே தரும் என அவர் கருதுகிறார்.

“என் துறையைப் பற்றி ஆராய்ந்து, அதற்கேற்றவாறு எதிர்பார்ப்புகளை அமைத்து, எனக்கான வேலையைத் தேடிக்கொண்டேன்,” என்றார் சிறப்புத் தேவைகள் நிர்வாகியாகப் பணிபுரியவிருக்கும் அருணா.

சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யவும் அவர்கள் எதிர்நோக்கும் போட்டித்தன்மையைக் குறைக்கவும் வரும் ஆண்டுகளில் வெளிநாட்டுத் திறனாளிகளின் அதீத வருகையைக் குறைக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்மென அவர் கூறினார்.

கூடிவரும் விலைவாசி

சிங்கப்பூர் இளையர்களின் முக்கியக் கவலையாக கூடி வரும் வாழ்க்கைச் செலவுகள் இருப்பதை பிளாக்பாக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய “சென்சிங்எஸ்ஜி” ஆய்வில் தெரியவந்தது.

இந்தத் தேர்தல் இச்சவால் குறித்த இளையர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.

மேற்கு செம்பவாங்கில் வசிக்கும் 21 வயது ஷீனா கிரேஸ், தனது தொகுதியைப் போல மற்ற சில தொகுதிகளிலும் ஆளுங்கட்சிக்குக் கிடைத்த குறுகிய வாக்கு வித்தியாச வெற்றி ஓர் எச்சரிக்கை மணியாக விளங்கும் என்றார்.

“உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினம் என்பது என் வயதினருக்கும் எங்களது பெற்றோர்களுக்கும் இருக்கும் மிக பெரிய கவலையாகும். உணவு விலையில் தொடங்கி போக்குவரத்து கட்டணம் வரை அனைத்தினாலும் அழுத்தம் ஏற்படுகிறது,” என்று அவர் கூறினார்.

தேர்தல் முடிவுகள் மசெகவிற்கு மகிழ்ச்சி உணர்வைவிட எச்சரிக்கை உணர்வை அதிகம் ஏற்படுத்தும் என்பது ஷீனா கிரேஸின் பார்வை.
தேர்தல் முடிவுகள் மசெகவிற்கு மகிழ்ச்சி உணர்வைவிட எச்சரிக்கை உணர்வை அதிகம் ஏற்படுத்தும் என்பது ஷீனா கிரேஸின் பார்வை. - படம்: ஷீனா கிரேஸ்

எனினும், வரும் ஆண்டுகளில் இச்சவாலை மசெக அரசு சரிவரக் கையாளும் என்று சிங்கப்பூர் நிர்வாகக் கல்வி நிலையத்தில் அனைத்துலக உறவுகள் துறையில் பயிலும் கிரிஷ்மிதா ஷிவ் ராம் நம்புகிறார்.

“ஒட்டுமொத்த இளைய சமூகத்தை அச்சுறுத்தும் இப்பிரச்சினையை அரசாங்கம் மெத்தனமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை. மேலும், ஆக்ககரமான திட்டங்களை அமல்படுத்தி வரும் ஆளுங்கட்சியின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்,” என்று அவர் கூறினார்.

21 வயதான கிரிஷ்மிதா, மசெகவின் குறைகளை எடுத்துக்கூறி, தீர்வுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், இயற்கை வளங்களில்லா நம் நாட்டை வழிநடத்தவும் வளம் பெறச் செய்யவும் நிதி வளம் மிகவும் முக்கியமானது என்பதை அனைவரும் புரிந்துகொண்டால் சிறப்பாக இருக்குமென எண்ணுகிறார்.

“அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் அரசின் பொருள், சேவை வரி உயர்வால் மட்டும் ஏற்படுவது அல்ல. இவ்வரி உயர்வு உலகப் பொருளியல் அழுத்தங்களால் ஏற்படும் செலவின உயர்வைச் சமாளிக்கத் தேவையான ஒரு முயற்சி,” என்பது அவரது கருத்து.

கிரிஷ்மிதா ஷிவ் ராம் மசெக அரசு அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவின சவாலைத் திறன்பட சமாளிக்குமென நம்பிக்கை கொண்டுள்ளார்.
கிரிஷ்மிதா ஷிவ் ராம் மசெக அரசு அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவின சவாலைத் திறன்பட சமாளிக்குமென நம்பிக்கை கொண்டுள்ளார். - படம்: கிரிஷ்மிதா ஷிவ் ராம்

உலகப் பொருளியல் போக்கு மோசமடைந்து வருவது அடிப்படை பிரச்சினையாக இருக்கும் நிலையில் மசெக செலவின உயர்வை எப்படிக் குறைக்கும் என்ற கேள்வியை முன்வைத்தார் விலை நிர்ணய நிபுணரான 25 வயது சோலை லட்சுமி பிரியா.

“வேலைக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தில், ஒரு வழிப் பயணத்திற்கு $4.50 ஆகிறது. விரைவு உணவு அல்லாமல் பேரங்காடி நிலைய உணவகங்களில் உண்டால் எளிதில் $10லிருந்து $15 ஆகிறது,” என்றார் அவர்.

“அரசாங்கத்தால் உலகப் பொருளியல் போக்கைச் சீர்செய்ய முடியாது என்றாலும், பாட்டாளிக் கட்சியின் தேர்தல் அறிக்கை பரிந்துரைப்பதுபோல அத்தியாவசியப் பொருள்களுக்கான பொருள், சேவை வரியைக் குறைப்பதைக் கருத்தில்கொள்ளலாம். இது சிங்கப்பூரர்களின் சிரமத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. அரசாங்கம் வழங்கும் பற்றுச்சீட்டுகளும் சலுகைகளும் செலவைச் சமாளிக்கப் போதுமானவையல்ல,” என்று அவர் குறிப்பிட்டார்.

விலைவாசி உயர்வுக்கு உலகப் பொருளியல் போக்கே முதன்மைக் காரணம் என்பது சோலை லட்சுமி பிரியாவின் கருத்து.
விலைவாசி உயர்வுக்கு உலகப் பொருளியல் போக்கே முதன்மைக் காரணம் என்பது சோலை லட்சுமி பிரியாவின் கருத்து. - படம்: சோலை லட்சுமி பிரியா

வீட்டு விலைகளும் கனவுகளும்

அதிகரித்துவரும் வீட்டு விலைகள் தனி வீடும் வாங்கும் இளையர்களின் கனவுக்குப் பெரும் தடையாக உள்ளதாகக் கூறினார் 24 வயது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வணிக நிர்வாக மாணவர் சஞ்சய் முத்துக்குமரன்.

தனக்கு நன்கு பழக்கமான ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் வீடு வாங்க விரும்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வணிக நிர்வாக மாணவரான சஞ்சய் முத்துக்குமரனுக்கு, முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் கட்டப்படும் பிடிஓ வீடுகளின் விலை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால், அங்கு வீடு தம்மால் வாங்க முடியுமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய வீட்டுத் திட்டங்கள் புதிதாக வீடு வாங்குவோருக்கு உதவ முயன்றாலும், பிடிஓ வீடுகளுக்கான நீண்ட கால காத்திருப்பு, தனிமனிதர் வீடு வாங்க 35 வயது வரை காத்திருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் இளையர்களுக்கு ஏதுவாக இல்லை என்று 24 வயது இளையரான சஞ்சய் கருதுகிறார்.

“35 வயதிற்குக் குறைந்த தனிமனிதர்கள் இணைந்து வீடு வாங்குவது, எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்ததுபோல குறைந்தபட்சக் குடியிருப்புக் காலத்தைக் குறைப்பது, முதல் முறை வீடு வாங்குவோருக்கு முன்னுரிமையும் அதிக நிதி உதவியும் வழங்குவது போன்ற யோசனைகளை செயல்படுத்த முயன்றால் சிறப்பாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

உயர்ந்து வரும் வீட்டு விலைகளால் தனக்குப் பிடித்த பேட்டையில் எதிர்காலத்தில் வீடு வாங்க முடியாதோ என்று அஞ்சுகிறார் சஞ்சய் முத்துக்குமரன்.
உயர்ந்து வரும் வீட்டு விலைகளால் தனக்குப் பிடித்த பேட்டையில் எதிர்காலத்தில் வீடு வாங்க முடியாதோ என்று அஞ்சுகிறார் சஞ்சய் முத்துக்குமரன். - படம்: சஞ்சய் முத்துக்குமரன்

எனினும், தற்போதைய நிலையிலும் வீட்டு விலைகளைக் கட்டுப்படியாக வைத்திருக்க மசெக போதுமான திட்டங்களை அமல்படுத்தியுள்ளதாக சிலர் நம்புகின்றனர்.

எதிர்காலத்தில் செங்காங், பொங்கோல், அல்லது சிராங்கூனில் வீடு வாங்க விரும்பும் 26 வயது காயத்திரி காந்தி, அரசு மானியங்கள், மத்திய சேம நிதி ஆதரவு போன்றவற்றால் அதிகரித்து வரும் வீட்டு விலைகளைச் சமாளிக்க முடியும் என்று எண்ணுகிறார்.

“வீவக வீட்டு விலைகள் அதிகரித்து வந்தாலும் சரியான திட்டமிடலும் நிதி நிர்வாகமும் இருந்தால் விரும்பிய இடத்தில் வீடு வாங்குவது சாத்தியம் தான்,” என்றார் அவர்.

முதல் முறை வீடு வாங்குவோருக்கு வீட்டின் புதுப்பிப்புப் பணிகளுக்கும் உதவி வழங்கினால் அவர்களது நிதிச் சுமை குறைய அதிக வாய்ப்புள்ளது என்று அவர் கருதுகிறார்.

சரியான திட்டமிடல், அரசாங்க உதவிகளுடன் பிடித்த இடத்தில் வீடு வாங்க முடியும் என காயத்திரி காந்தி நம்புகிறார்.
சரியான திட்டமிடல், அரசாங்க உதவிகளுடன் பிடித்த இடத்தில் வீடு வாங்க முடியும் என காயத்திரி காந்தி நம்புகிறார். - படம்: காயத்திரி காந்தி

மன, சமூக நலன்கள்

உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினம், வீட்டு விலைகள், வேலை வாய்ப்பு தட்டுப்பாடு ஆகிய சவால்கள் சிங்கப்பூரில் வாழ்வதை உளைச்சல் மிக்க அனுபவமாக மாற்றியுள்ளதாகச் சில இளையர்கள் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூரில் தனது எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறினார் கட்டடக்கலைத் துறை பட்டதாரியான மா பிரியதர்ஷினி.

“புது பட்டதாரியாக, என் படிப்புக்கு மாறுபட்ட துறைகளில் பணிபுரிய முனையும்போது, போதிய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. மேற்படிப்புக்கு உதவித்தொகை வழங்கும் திட்டங்களும் குறைவாகவே உள்ளன. இதனால், பலரும் விருப்பமற்ற துறைகளில் வேலை செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்,” என்று அவர் கூறினார்.

இத்தகைய சவால்களால் ஏற்படும் மனநலப் பாதிப்புகளைக் கையாள போதுமான உதவி சிங்கப்பூரில் வழங்கப்படாதது போல் அவர் உணர்கிறார்.

“மனநல ஆலோசனை சேவைகளின் கட்டணம் அதிகமாக உள்ளது. பல உதவிகள் இணையம் வழி வழங்கப்படுகின்றன. ஆனால், இத்தகைய இணையப் பயன்பாடு, தனிமை உணர்வை மோசமாக்குமே தவிர குறைக்காது என்று பல ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன,” என்று அவர் சொன்னார்.

ஆகையால், வரும் காலங்களில் சிங்கப்பூரர்களின் மனநலனைப் பேணிக் காக்க அதிக ஆதரவும் திட்டங்களும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

வாழ்க்கைச் சவால்களால் ஏற்படும் மனநலப் பாதிப்புகளைச் சமாளிக்க வரும் ஆண்டுகளில் அதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பது மா பிரியதர்ஷினியின் விருப்பம்.
வாழ்க்கைச் சவால்களால் ஏற்படும் மனநலப் பாதிப்புகளைச் சமாளிக்க வரும் ஆண்டுகளில் அதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பது மா பிரியதர்ஷினியின் விருப்பம். - படம்: மா பிரியதர்ஷினி

இளையர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மனநலனைப் பாதித்தாலும் அதைச் சீரான நிலையில் வைத்திருப்பது முக்கியமாக நம் கையில்தான் உள்ளது என நம்புகிறார் 24 வயது ரிஷி சங்கர்.

“சிங்கப்பூரில் அழுத்தம் அதிகமாக இருந்தாலும், நம் வெற்றிக்கு அது பெரிதும் உதவுகிறது. அவ்வழுத்தத்தை எவ்வாறு சமாளித்து முன்னுக்கு வருவது என்று சிந்தித்துச் செயல்படுவதே புத்திசாலித்தனமாகும்,” என்றார் அவர்.

இனப் பாகுபாடு

இனப் பாகுபாடு போன்ற சமூக நலன் தொடர்பான பிரச்சினைகளையும் கையாள நம் அரசாங்கம் முற்பட வேண்டுமென 21 வயது கண்ணன் வைஷ்ணவி லட்சுமி எண்ணுகிறார்.

“பெரும்பாலான இளையரிடம் இன வேற்றுமை உணர்வு குறைவு என்றாலும், அது முற்றிலும் மறையவில்லை. அடுத்த பத்தாண்டுகளில் இந்நிலையை மேம்படுத்த ஏதேனும் முயற்சிகளை அரசு முன்வைத்தால் சிறப்பாக இருக்கும்,” என அவர் கூறினார்.

செங்காங் குழுத்தொகுதியின் மசெக வேட்பாளர் பெர்னாடெட் கியாம் தனது பிரசாரத்தில் சரளமாகத் தமிழில் பேசியது தன்னைக் கவர்ந்ததாகவும் இத்தகைய முயற்சிகள் சிங்கப்பூரர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணமாக அமைவதாகவும் அவர் கருதுகிறார்.

குறிப்புச் சொற்கள்