ஆஸ்திரேலியாவின் ஷோல்வாட்டர் பே பயிற்சித் திடலில் நடைபெறும் ‘வாலபி 2026’ பயிற்சியில்,போர் இயந்திரங்களின் இரைச்சலுக்கு இடையே சேவையாளர்கள் பலரின் கைகளும் மனங்களும் இணைந்தன.
தாயகத்தில் விட்டுச்சென்ற உறவுகளை நெஞ்சில் சுமந்தபடி சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் கடமை உணர்வோடு செயல்பட்டு வருகின்றனர்.
குடும்பம் நிம்மதியாக இருக்க தேசப் பாதுகாப்பு முக்கியம்
408வது சிங்கப்பூர் கவசப் படைப்பிரிவின் (408 எஸ்ஏஆர்) துணைத் தளபதியாகச் செயல்படட்டு வருகிறார் 39 வயது மேஜர் (என்எஸ்) சதீஷ் குமார்.
தமது 19வது வயதில் தேசிய சேவையைத் தொடங்கிய அவர், கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து போர்க்காலச் சீருடை அணிந்து நாட்டிற்காகக் கடமையாற்றி வருகிறார்.
ஜூரோங் தீவில் பெட்ரோகெமிக்கல் துறையில் பணிபுரிந்துவரும் அவருக்குத் திருமணமாகி விட்டதை அடுத்து, வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே கூடுமான அளவு சமநிலை பேண முயல்கிறார்.
படைப்பிரிவின் முழுப் பயிற்சித் தேவைகளையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் கடினமான வேலைப்பளுவுக்கு இடையே, சிங்கப்பூரில் தனியாக இருக்கும் தம் மனைவியுடன் அன்றாடம் குறுஞ்செய்தி மூலமாவது பேச இவர் தவறுவதில்லை.
“சிங்கப்பூரில் இட நெருக்கடி காரணமாக முழுமையான கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது கடினம். ஷோல்வாட்டர் பேயின் பரந்த வெளியில் ஆகாயப்படையுடனும் ராணுவப் பொறியியல் குழுவுடனும் இணைந்து பெரிய அளவில் திட்டமிடுவது போருக்கான எங்களின் தயார்நிலையை வலுப்படுத்துகிறது. நமது நாட்டை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.
“நாம் தேசிய சேவை செய்வதால்தான் சிங்கப்பூரில் நம் குடும்பங்கள் நிம்மதியாக வாழ்கின்றன. அந்த நிம்மதிக்காகத்தான் நான் சீருடை அணிகிறேன்,” என்று பெருமிதத்தோடு கூறினார் மேஜர் சதீஷ்குமார்.
தேசிய சேவையைத் தொடங்கத் தயங்கும் இளையர்களைப் பயமின்றி முன்வர அவர் ஊக்குவிக்கிறார். “சிங்கப்பூர் நம் தாய்நாடு; அதை நாம்தான் பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
வானில் சிறகடிக்கும் கனவும் சகோதரத்துவமும்
சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் (ஆர்எஸ்ஏஎஃப்) ‘ஓக்கி’ படைப்பிரிவைச் சேர்ந்த வான்படை நிபுணர் ‘ஃபர்ஸ்ட் சார்ஜன்ட்’ ஜொனத்தன் இயன் ஆரோக்கியநாதன், 25, சினூக் ஹெலிகாப்டர்வழி இலகுரகத் தாக்குதல் வாகனங்களை நகர்த்தும் பணிகளை மேற்கொள்கிறார்.
சிறுவயதிலிருந்தே வானில் பறக்க வேண்டுமென அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.
தமது 23வது வயதில் படைவீரராக சேர்ந்த பிறகு முதன்முறையாக ஹெலிகாப்டரில் பறந்ததே வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமாக அமைந்ததாகத் திரு ஜொனத்தன் குறிப்பிட்டார்.
குடும்பத்தைப் பிரிந்து பயிற்சி மேற்கொள்வது குறித்துப் பேசிய அவர், “பணியைத் தாண்டி அணிக்குள் நிலவும் சகோதரத்துவமும் இருதரப்பு நம்பிக்கையும்தான் எங்கள் வலிமை. வானில் எத்தகைய நெருக்கடியிலும் ஒருவரையொருவர் கண்மூடித்தனமாக நம்பிச் செயல்பட இந்தப் பிணைப்பே உதவுகிறது,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் தந்த வாழ்விற்கு நன்றிக்கடன்
இவர்களுக்கு இணையாக, சிங்கப்பூர் ஆயுதப்படைத் தொண்டூழியர் அணியைச் (SAFVC) சேர்ந்த 40 வயது குமார் ரோஹித் ஸரிவால் டில்பால் முகாமில் பாதுகாப்புப் பணிகளை நிர்வகிக்கிறார்.
2010ல் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த இணையப் பாதுகாப்புப் பொறியாளரான அவர், குடியுரிமை தந்த நாட்டிற்குத் தொண்டூழியம்வழி கைம்மாறு செய்கிறார்.
“சிங்கப்பூர் அளித்த அமைதியான வாழ்விற்கு நன்றி செலுத்தவும் இளைய வீரர்களின் பணிச்சுமையைக் குறைத்து அவர்கள் ஓய்வெடுக்க உதவவுமே இங்கு வந்தேன். இரு மகள்களைத் தனியாகக் கவனித்துக்கொண்டு எனக்கு உறுதுணையாக நிற்கும் என் மனைவிக்கே முதல் நன்றி,” என்று அவர் உருக்கத்துடன் கூறினார்.
சிங்கப்பூரில் வங்கிப் பணியையும் இல்லறத்தையும் கவனித்துக்கொண்டு, வார இறுதி நாள்களில் தமது பிள்ளைகளுடன் திரைப்படம் பார்க்கச் செல்வதிலும் நேரம் செலவிடுவதிலும் மகிழ்ச்சி காணும் அவர், இந்த வெளிநாட்டுப் பயிற்சித் திடலில் இருக்கும்போதும் குடும்பத்துடனான தொடர்பை ஒருபோதும் கைவிடுவதில்லை.
அன்றாடம் வேலை முடிந்ததும் குறைந்தது அரைமணி நேரமாவது தன் மனைவியுடனும் மகள்களுடனும் தொலைபேசியில் உரையாடிவிடுகிறார் ‘எஸ்வி2’ ரோஹித்.
சிங்கப்பூரில் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மூத்த மகள், பாலர் பள்ளியில் பயிலும் இளைய மகள் எனத் தங்களது குழந்தைகள் இருவரையும் தனியொருவராகக் கவனித்துக்கொள்வது எவ்வளவு சிரமமானது என்பதை நன்கு உணர்வதாகத் திரு ரோஹித் கூறினார்.
“இந்தக் காணொளியைப் பார்க்கும் என் மனைவிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்; என் பிள்ளைகளுக்கும் நன்றி. மிக விரைவில் நான் திரும்பி வருவேன்,” என்று அவர் கண்களில் பாசத்தோடும் முகமலர்ச்சியோடும் சொன்னார்.
இவர்கள் அனைவரது பணிக்களம் வேறுபட்டிருந்தாலும், தாய்நாட்டின் மீதான கடமையும் குடும்பத்தின் மீதான நேசமும் இவர்களை ஒரு புள்ளியில் இணைக்கின்றன.
