தம் குடும்பத்தில் ஒருவருக்குச் சிறப்புத் தேவைகள் இருப்பதால், சிறப்புத் தேவை கொண்டவர்கள் போக்குவரத்தில் சமாளிக்கும் சவால்களை நேரில் கண்டு உணர்ந்துள்ளார் கிஸ்டினா.
“தொலைவிலுள்ள இடங்களுக்குத் தாமாகச் செல்ல சிறப்புத் தேவை கொண்டவர்களுக்கு மாதக்கணக்கில் பயிற்சி தேவைப்படலாம்,” என்றார் கிஸ்டினா.
சாலைப் பாதுகாப்பு விதிகளையும் திசையைக் கண்டறியும் உத்திகளையும் அவர்களுக்கு இன்னும் எப்படி எளிதாகவும் சுவாரசியமாகவும் கற்பிப்பது எனக் கிஸ்டினாவும் குழுவினரும் கலந்தாலோசித்ததன்வழி பிறந்ததே ‘ஜர்னியபல்’ (JourniAble) எனும் முயற்சி.
அவர்களின் ‘ஏபில்பிளே’ (AblePlay) எனும் மென்பொருள் விளையாட்டில் சாலைகள் மாதிரிப்படுத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் வெவ்வேறு சூழல்களில் சாலையைக் கடப்பதுபற்றிக் கற்றுக்கொள்ளலாம். தற்போது இக்குழு சிறப்புத் தேவைப் பள்ளிகளில் சோதனைகளை நடத்திவருகிறது.
‘ஏபில்மேப்ஸ்’ (AbleMaps) எனும் மற்றொரு மென்பொருளையும் உருவாக்கிவரும் குழுவினர், அது எளிமையாக்கப்பட்ட ‘கூகல் மேப்ஸ்’ போல இயங்கும் எனக் கூறினர்.
சமூகநோக்கு முயற்சிகளுக்காகச் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) வழங்கும் ‘கிரியேட்4குட் புத்தாக்க நிதி’யைக் கோரி ‘ஜர்னியபல்’ உள்ளிட்ட பத்து அணிகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) அவற்றின் திட்டங்களைப் படைத்தன. வெற்றிகரமான குழுக்களுக்குத் தலா $50,000 வரையிலான நிதி கிடைக்கும். பதிலுக்கு அவை பங்குகள் தரவேண்டியதில்லை.
மறைந்த சிங்கப்பூர் வர்த்தகர் குவெக் லெங் ஜூ 2015ல் வழங்கிய நன்கொடையால் இந்நிதி உருவானது. இவ்வாண்டு மூன்று மாதங்களில் 28 அணிகள் பல்வேறு பயிலரங்குகளில் பங்கேற்றன; தொழில்துறைத் தலைவர்களிடமிருந்து வழிகாட்டுதல் பெற்றனர். இந்நிதி எஸ்யுடிடி ‘டைவ்’ (DIVE) திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
கணினி நிரலாக்கம் யாருக்கும் எட்டாக்கனியல்ல
சிறப்புத் தேவைகள் கொண்டவர்கள் ரோபாடிக்ஸ், கணினி நிரலாக்கம் கற்றுக்கொள்வதற்கு உதவுகிறது ‘ஃபிசிகோட்’ நிறுவனம்.
“ஏடிஎச்டி, ஆட்டிசம், டிஸ்லெக்சியா போன்றவை ஒருவர் வாசிக்கும் விதத்தை மாற்றுகின்றன. அவர்களுக்குக் கைகளில் நடுக்கமும் இருக்கக்கூடும். இதனால், கணினியில் நிரலாக்கம் செய்வதும் திருகாணிகளைக் கொண்டு இயந்திரமனிதரை அமைப்பதும் சிரமமாகிறது,” என்றார் குழு உறுப்பினர் கெவின்.
இத்தடைகளை அகற்ற ‘ஃபிசிகோட்’ நிறுவனம், நிரலாக்கத்தைக் கணினியிலிருந்து நிஜ உலகிற்குக் கொண்டுவருகிறது. ‘முன்னே 4 அடிகள் எடுத்துவை’, ‘இடதுபக்கம் 3 அடிகள்’, போன்ற வாக்கியங்களை மாணவர்கள் மேசையில் வைத்து வரிசைப்படுத்தலாம்; பின்பு அவற்றைப் புகைப்படம் எடுத்து ‘ஃபிசிகோட்’ செயலியில் உட்புகுத்தினால் அதை நிரலாக்கமொழியாக மாற்றி இயந்திரமனிதரை நகரவைக்கும். மேலும், இயந்திரமனிதரில் பெரிய பாகங்களே இருப்பதால் அதை அமைப்பதும் சுலபம்.
தற்போது சிறப்புத் தேவைகள் கொண்ட மாணவர்களுடன் ‘ஃபிசிகோட்’ சோதிக்கப்பட்டுவருகிறது.
‘மேபில்டிரீ வளரும் தொழில்முனைவர்’ போட்டியிலும் இக்குழு வென்று விவோசிட்டியில் அண்மையில் சாவடி அமைத்தது. சிறப்புத் தேவைகள் அல்லாத சிறுவர்களின் பெற்றோரும் ‘ஃபிசிகோட்’டை வாங்கியது குழுவை ஊக்கப்படுத்தியது. மேல்விவரங்களுக்கு https://physicode.sg/ எனும் இணையத்தளத்தை நாடலாம்.
மலரும் நினைவுகளுக்கு விளையாட்டுமூலம் மறுமலர்ச்சி
மறதிநோய் இருப்பவர்களுக்கும் வயதானோருக்கும் பழைய நினைவுகளை நினைவுகூர உதவுகிறது ‘ரெம்னிக்ஸ்’ (REMNIX) எனும் புதிர். ஒரு புகைப்படத்தை ‘ரெம்னிக்ஸ்’ தளத்தில் பதிவேற்றினால், கையால் நகர்த்தக்கூடிய புதிர்த் துண்டுகளாக அது ‘ரெம்னிக்ஸ்’ கருவியில் மறு உருப்பெறும். இதன்வழி, புகைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளைப் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களை நிகழ்த்தலாம்.
“பராமரிப்பு நிலையங்களில், ஒவ்வொருவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட நினைவாற்றல் சிகிச்சையை வழங்குவது கடினமாக உள்ளது. ‘ரெம்னிக்ஸ்’ஐப் பொறுத்தவரை, ஒரே கருவியில் வெவ்வேறு நினைவுகளைப் புதிராக மாற்றமுடியும்,” என்றனர் குழுவினர் ரேஹான், கோனர். நாளடைவில், ஒலி, கேள்வித் தூண்டுதல்கள் போன்றவற்றையும் உட்புகுத்த விரும்புகிறது இக்குழு.
வீட்டில் முதியோருடன் உரையாடி அவர்களின் பழைய நினைவுகளைக் கிளரும் கருவியான ‘ஓரா’வை மற்றோர் அணி உருவாக்கியது. முதியவர் எதற்காகவோ ஏங்குவதை அக்கருவி உணர்ந்தால் அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தும்.
சுற்றுப்பயணிகளுக்கும் சமூகநோக்கு நிறுவனங்களுக்கும் இடையே பாலம்
“சிங்கப்பூருக்கு ஆண்டுதோறும் 16.9 மில்லியன் சுற்றுப்பயணிகள் வந்து $5 பில்லியன் மதிப்பிலான பொருள்களை வாங்குகின்றனர். சுற்றுப்பயணிகள் சிறப்புத் தேவைக் கலைஞர்களின் பொருள்களை வாங்க விரும்பினாலும் அதற்கான நேரம் போதவில்லை,” என்றார் ‘ஷுக்ஷுக்’ இணை நிறுவனர் டேவிட் போங்.
‘ஷுக்ஷுக்’ நிறுவனம் விடுதிகளுடன் மேற்கொண்டுள்ள இம்முயற்சியில், சுற்றுப்பயணிகள் விடுதிக்குள் நுழையும்போதே ‘கியூஆர்’ குறியீட்டை வருடி சமூகநோக்கு நிறுவனங்கள், பாரம்பரிய வர்த்தகங்களின் கதைகளை அறிந்து பொருள்களை வாங்கலாம். அவை விரைவாக விடுதியை வந்தடையும். மேல்விவரங்களுக்கு https://shukshuk.com/ எனும் இணையத்தளத்தை நாடலாம்.
பார்வைக் குறைபாடுள்ளோருக்குக் கைகொடுக்கும் ‘சண்டே’
பார்வைக் குறைபாடுள்ளோர் கைத்தொலைபேசிச் செயலிகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தம் உறவினர்மூலம் நேரில் கண்டுள்ளார் ரே.பிரவீன்.
கைத்தொலைபேசியில் ‘டாக்பேக்’ (TalkBack) இருந்தாலும், பயன்பாட்டில் சிரமங்கள் இருப்பதாகப் பலரும் கூறியுள்ளனர். இதனால், பிரவீனும் அவரது குழுவினரும் ‘சண்டே’ எனும் மென்பொருளை உருவாக்கினர்.
‘ஷோப்பீ’, ‘கிரேப்’, ‘லசாடா’ என எத்தகைய செயலியாக இருந்தாலும் (வங்கியியல் தவிர) ‘சண்டே’ மூலம் பார்வையற்றவர் அதனைக் குரல்வழியே இயக்கலாம். உதாரணத்துக்கு, “இங்கிருந்து ஜூரோங் பாய்ண்ட்டுக்கு ‘கிரேப்’பில் செல்லவேண்டும்,” என்று சொன்னால் ‘சண்டே’, தாமாக ‘கிரேப்’ செயலியைத் திறந்து, அதனை இயக்கி, என்னென்ன டாக்சிகள் எந்தெந்த விலைக்குப் போகின்றன என்பதைச் சொல்லும்; அதன்பின் பார்வையற்றவர் முடிவெடுத்து கட்டணம் செலுத்த ஒப்புதல் கொடுக்கலாம்.
தற்போது சிங்கப்பூர்ப் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கத்திலிருந்து பயனர்களுடன் சோதனைகள் நடைபெற்றுவருகின்றன.
பக்கவாதத்திலிருந்து மீண்டுவர உதவும் ‘நுபாய்ண்ட்’
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நிலையில், அவர்களின் மறுவாழ்வுச் சிகிச்சையை மேம்படுத்த, அணியக்கூடிய சாதனம் ஒன்றை ‘நுபாய்ண்ட்’ (NuPoint) உருவாக்கி வருகிறது.
தோள்பட்டை முதல் விரல்நுனி வரையிலான தரவுகளை மருத்துவ நிலையத்திலும் வீட்டிலும் பதிவுசெய்யும் இச்சாதனம், நோயாளிகளின் முன்னேற்றம் குறித்த தரவுகளைச் சிகிச்சையாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வழங்குகிறது.
எஸ்யுடிடியில் நடைபெற்ற ‘ஹல்ட்’ பரிசுப் போட்டியின் இறுதிச் சுற்றில் இரண்டாம் நிலையில் வந்த பெருமையையும் ‘நுபாய்ண்ட்’ அணி பெற்றுள்ளது. மேல்விவரங்களுக்கு https://nupoint.sg/ தளத்தை நாடலாம்.
திறன்மிகுந்த தொண்டூழியர்களைக் கண்டறிய அறநிறுவனங்களுக்கு உதவும் ‘இ-கம்பொங்’, செயற்கை நுண்ணறிவுசார்ந்த கற்றல் தளங்களான ‘கோரோசன்’, ‘டைனிஇகுவேஷன்ஸ்’ ஆகியவை படைக்கப்பட்ட மற்ற தீர்வுகள்.

