வார இறுதிகளில் குடும்பத்துடன் திரையரங்கில் தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பது அன்னபூரணி பிள்ளையின் வழக்கமான சிறுவயது பொழுதுபோக்காக இருந்தது.
“தமிழ் மொழியின் அழகையும் அதன் உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடுகளையும் அப்படங்கள் எனக்கு உணர்த்தின,” என்றார் 20 வயது அன்னபூரணி.
தமிழ்ப் பற்றும் தமிழ்த் துறையில் ஈடுபாடும் மிக்க குடும்பத்தில் வளர்ந்தவர் அன்னபூரணி. இவரது தாத்தாவான மாதவி இலக்கிய மன்றத் தலைவர் என்.ஆர். கோவிந்தன், சிங்கப்பூரில் பல தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருபவர்.
“என் தமிழ் மொழி வளத்துக்கும் பற்றுக்கும் உறுதியான அடித்தளத்தை அவர்தான் அமைத்தார்,” எனக் குறிப்பிட்டார் அன்னபூரணி.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழ்க் கல்வியுடன் கூடி ஆரம்பக்கல்வி பட்டயம் (Diploma in Tamil Studies with Early Education) பெற்றுள்ள இவர், ஆரம்பகால குழந்தை பருவ கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இரண்டாவது சிறந்த மாணவியாகத் தேர்ச்சிபெற்ற இவர், மக்கள் செயல் கட்சி சமூக அறக்கட்டளை வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். மேலும், கல்வி அமைச்சின் பாலர் பள்ளி வேலைப்பயிற்சியின்போது சிறந்த செயல்திறனுக்காக ‘ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி பரிசு’ (E-Bridge Pre-School Prize) விருதைப் பெற்றார்.
சிங்கப்பூரில் இளம் தலைமுறையினர் தமிழை வளர்க்க வேண்டும் என்பதுதான் தம் நீண்டநாள் ஆசை என்ற திரு என்.ஆர்.கோவிந்தன், அதை நிறைவேற்றும் விதமாக, தமிழ் ஆசிரியராக சிறுவர்களிடம் மொழிப்பற்றை விதைக்கும் பணியில் என் பேத்தி ஈடுபடுவது எனக்கு அளவில்லா பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது,” என்றார்.
கல்வியாளராக வேண்டும் என்ற தம் கனவை வடிவமைத்தவர்களில் ஆசிரியராக பணியாற்றும் தமது சித்தியும் பெரிய பங்கு வகித்ததாக அன்னபூரணி சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“மாணவர்களிடமிருந்து அவர் பெறும் கைவண்ண ஆசிரியர் தின அட்டைகளைக் காணும் போதெல்லாம், நானும் அந்த மாதிரியான நேர்மறையான தாக்கத்தை உருவாக்கவேண்டும் என்று நினைத்தேன்,” என்றார் அவர்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போது சிறார் கற்றலுக்காகத் தமிழ் வளங்களை உருவாக்குவதில் ஆர்வம் உள்ளதை அன்னபூரணி உணரத் தொடங்கினார். திட்டங்கள், கருத்தரங்குகள், நடைமுறைக் கற்றலின் வாயிலாக, கதைசொல்லலையும் விளையாட்டையும் இணைக்கும் இருவழி தொடர்பு கற்றல் வளங்களை உருவாக்கத் தொடங்கினார்.
அன்னபூரணியின் கல்விப் பயணத்திற்கு உந்துதலாக இருந்தது, சிறுவயதில் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட அனுபவம்.
பாலர் பள்ளி பருவத்தில், அவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் வகுப்புகள் இல்லாததால், சீன மொழி வகுப்புகளில் சேர்க்கப்பட்டார்.
“வகுப்பில் எனக்கு எதுவும் புரியவில்லை,” என்ற அவர், அதனால் பின்னர் தொடக்கப்பள்ளியில் தமிழ் வகுப்பில் சேர்ந்தபோது தன்னம்பிக்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டதாகச் சொன்னார்.
தாம் எதிர்கொண்ட சவால்களையும் புறக்கணிக்கப்பட்ட உணர்வையும் வேறு எந்தக் குழந்தையும் எதிர்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில், அவர்களை எளிமையாக அணுகக்கூடிய, சுவாரசியமான தமிழ் கற்றல் வளங்களை உருவாக்குவதை அவர் லட்சியமாகக் கொண்டுள்ளார்.
கடந்த 2024ல் நடைபெற்ற ‘எட்டெக் கருத்தரங்கில்’ (EdTech Conference) அவரது குழுவின் படைப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
வரைபடத் தமிழ் கதைப்புத்தகமான அதில் பல புலனுணர்வு அம்சங்களும் ஒலி இயக்கியும் இணைக்கப்பட்டிருந்தன. அதன் வழியாக தமிழ் குழந்தைப் பாடல்களை இசையாகக் கேட்க முடிந்தது.
அந்த நூலின் புதுமையும் பண்பாட்டு வெளிப்பாடும் கருத்தரங்கில் பங்கேற்ற பலரின் பாராட்டுகளைப் பெற்றதாக அன்னபூரணி கூறினார்.
“பொதுவாக, கற்றல் வளங்கள் ஆங்கிலம் அல்லது சீன மொழியில்தான் அதிகம் கிடைக்கின்றன. தமிழில், குறிப்பாக விளையாட்டு அடிப்படையிலான வளங்கள் அரிதாகவே உள்ளன,” என்றார் அவர்.
இன்றைய பல குழந்தைகளுக்குத் தமிழ் மொழி, பள்ளிப் பாடமாக மட்டுமே உள்ளது என்ற கூறிய அன்னபூரணி, விளையாட்டுகள், கதைகள், பாடல்கள் போன்ற குழந்தைகளுக்கு விருப்பமான வழிகளில் மொழியைப் புழங்கும்போது அது அவர்களின் வாழ்க்கையின் ஓர் இயல்பான, இன்றியமையாத பகுதியாக மாறிவிடும் என்றார்.
அன்னபூரணி சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆரம்பக் காலக் குழந்தைப் பருவக் கல்வியில் பட்டப்படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளார். எதிர்காலத்தில், தமிழ் விளையாட்டு அடிப்படையிலான கற்றலுக்கான கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கும் கனவையும் கொண்டுள்ளார்.
“மொழி என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பல்ல. தமிழ் மொழி நமது அடையாளம். ஒவ்வொரு தமிழ் குழந்தையும் தங்களின் தாய்மொழிமீது பற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று அன்னபூரணி கூறினார்.