நெட்டோட்டத்தைத் திட்டமிடுவதில் உள்ள நுணுக்கங்களை முன்னாள் 400 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர் ஷாலிந்திரன் சத்தியநேசன் தெரிவித்தார்.
பிஒய்டி (BYD) சிங்கப்பூர் அனைத்துலக நெட்டோட்டத்தின் நிகழ்ச்சி இயக்குநராக 37 வயது ஷாலிந்திரன் செயல்படுகிறார்.
தென்கிழக்காசிய விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் எனத் தேசியத் திடல்தட வீரராகப் பல்வேறு களங்களைக் கண்டவர் இவர்.
தாம் பொறுப்பேற்று நடத்தும் இந்தப் பெருநிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 52,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் ஷாலிந்திரன்.
இவ்வளவு பேர் பங்கேற்கும் போட்டிக்குக் கச்சிதமான திட்டமிடுதல் தேவைப்படுகிறது.
“இந்தப் பொறுப்பை நாங்கள் மெத்தனமாக எடுத்துக்கொள்ளவில்லை. பல்வேறு பந்தய வீரர்கள் ஆண்டு முழுவதும் இதற்காகவே திட்டமிடுகின்றனர். அதனால், எங்கள் தரப்பிலிருந்து நன்கு மேலாண்மை செய்யப்பட்ட, பாதுகாப்பான, அனைவரது உணர்வுகளையும் மதிக்கக்கூடிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்,” என்று ஷாலிந்திரன் கூறினார்.
உணர்வுபூர்வமான பயணம்
தமக்கு நான்கு வயதாக இருந்தபோது, தம்மைத் தம் அக்காவுடன் விளையாட்டரங்கிற்குப் பெற்றோர் அழைத்துச் சென்றதாக ஷாலிந்திரன் நினைவுகூர்ந்தார்.
“பின்னர், தொடக்கநிலை மூன்றில் நான் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று 60 மீட்டர், 100 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் வெற்றிபெற்றேன்,” என்று இவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அன்றுமுதல் பள்ளிப் பருவம், சிங்கப்பூர்க் காவல்துறையில் தேசியச் சேவைவரை திடல்தட விளையாட்டுப் போட்டிகளில் இவர் பங்கேற்றுவந்தார்.
விளையாட்டு நமக்குக் கட்டுப்பாடு, விடாமுயற்சி, பணிவு ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கும் என்றார் ஷாலிந்திரன்.
“ஓட்டப்பந்தயத்தில் ஒருவித நேர்மை இருக்கிறது. வெற்றியை நம் உழைப்பால்தான் பெற முடியும்; வேறெந்தக் குறுக்குவழியும் கிடையாது,” என்கிறார் இவர்
போட்டி முடிந்த பிறகும் இந்தப் பாடம் மனத்தில் நிற்கும் என்றும், இதே எண்ணத்துடன்தான் தாங்கள் மாரத்தான் போட்டியையும் அணுகுவதாகவும் இவர் தெரிவித்தார்.
ஓட்டப்பந்தய வீரராக இருந்த அனுபவம் இங்கு இவருக்குக் கைகொடுக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பாக உள்ளதா, களைப்போ பிரச்சினைகளோ ஏற்படும்போது ஓடுபவர்களுக்கு உரிய ஆதரவு உள்ளதா, மக்களுடனான தொடர்பு தெளிவாக உள்ளதா என்பதைத் தாம் கவனிப்பதாகத் திரு ஷாலிந்திரன் கூறினார்.
முன்னதாகத் தேசிய விளையாட்டாளர்களை நிர்வகித்து வந்த திரு ஷாலி, தற்போதைய பணியில் பல்லாயிரக்கணக்கான பந்தயக்காரர்களைக் கையாள வேண்டியுள்ளதையும் சுட்டினார்.
“ஒவ்வொருவரையும் எங்களால் தனிப்பட்ட முறையில் கவனிக்க இயலாத பட்சத்தில், சரியான கட்டமைப்பை உருவாக்குவதும் திட்டமிடுதலும் முக்கியமாகிறது,” என்று இவர் குறிப்பிட்டார்.
பந்தயத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், ஓட வேண்டிய தூரத்தைக் கருத்தில்கொண்டு தாங்கள் மேற்கொண்டுள்ள பயிற்சியின் மீது நம்பிக்கை வைக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.
“நெடுந்தொலைவு ஓட்டத்திற்கு உடல் தகுதி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பொறுமையும் முக்கியம். ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்குங்கள், கவனத்தோடு ஓடுங்கள், ஏன், எதற்காக ஓட்டத்தில் கலந்துகொண்டோம் எனஎ நினைவில் வையுங்கள். இறுதிக் கோட்டை நீங்கள் எளிதாகத் தொட்டுவிடுவீர்கள்,” என்று அவர் கூறினார்.

