உலகம் மின்னிலக்கமயமாக உருமாறிவிட்டது. இன்றையசூழலில் பொருள் வாங்குவது, பயணச் சீட்டு வாங்குவது, மருந்தகக் கட்டணங்கள் என எதற்கெடுத்தாலும் இணையமே நுழைவாயிலாகப் பயன்படுகிறது. அதற்கு மூத்தோர், இளையோர் என்ற பாரபட்சம் இல்லை.
அதன்தொடர்பில் மூத்தோர் பலர் தங்கள் அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்னிலக்க முறையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் இணையம் சார்ந்த தகவல்கள், அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறை மூத்த தலைமுறையினருக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் பலர் இணைய மோசடிக்கு இரையாகின்றனர்.
அவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் மூத்தோருக்கு உதவிக்கரம் நீட்டி, அவர்களை மின்னிலக்க எழுத்தறிவில் வலுவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார் 21 வயது இளையர் சுருதி மல்புரி.
தேசிய தொண்டூழியம் மற்றும் அறக்கொடை நிலையத்தின் தலைவர்களுக்கான முன்னோடித் திட்டத்தின் வழி ஆக்ககரமான ‘மாற்றத்தை உண்டாக்கும் இளையர்’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் குமாரி ஸ்ருதி.
மின்னிலக்கத் தளம் வழியாகக் கட்டணங்களைப் பாதுகாப்பாகச் செலுத்துவது, இணைய மோசடிகளை அடையாளம் கண்டுகொள்வது போன்ற நடவடிக்கைகளை முதியோருக்கு எளிமையாக விளையாட்டுகள் வழியாகக் கற்றுத்தரும் ‘டிஜி-அப்’ செயல்திட்டத்தின் இணை நிறுவனர் குமாரி சுருதி.
“மூத்தோரின் மின்னிலக்க ஆற்றலை மேம்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டபோது, பலர் தங்கள் அனுபவங்களைக் கூறினர். குறிப்பாக இணைய மோசடிக்கு ஆளான மூத்தோரில் கணிசமானவர்கள் அதைப் பெரும் அவமானமாகக் கருதினர். அதனால் அதுகுறித்து வெளிப்படையாகப் பேசுவதையும் அவர்கள் தவிர்த்து விடுவதும் அறிய முடிந்தது,” என்று இந்தச் செயல்திட்டத்தைத் தொடங்கியதற்கான காரணத்தைப் பகிர்ந்தார் சுருதி.
மின்தூண்டிலிடல் (Phishing) எனப்படும் பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கடன் அட்டை விவரங்கள் போன்ற முக்கியத் தகவல்களைத் தந்திரமாகப் பெறும் மோசடி; முதலீடு, இணையவழி விளையாட்டு, கட்டணம் செலுத்தும்போது மோசடிக்காரர்களின் இலக்குகளில் சிக்கிக்கொள்வது எனப் பல மோசடிகள் மூத்தோரை பாதிப்பதாகச் சொன்ன சுருதி. அவை மூத்தோரின் பொருளியல் நலன் மட்டுமல்லாது அவர்களின் மனநலனையும் பாதிப்பதாகச் சொன்னார்.
“எல்லா மூத்தோருக்கும் வகுப்பறை சார்ந்த கற்றல் பயனளித்திடும் என்று சொல்ல இயலாது. மொழி சார்ந்த சவால், வகுப்பறையில் பிறர் முன்பு கேள்வி கேட்கையில் பதில் தெரியாமல் போனால் சங்கடமாக உணரக்கூடும் என்பன போன்ற பல்வேறு அச்சங்கள் அவர்களுக்கு உண்டு,” என்று விவரித்தார் சுருதி.
தொடர்புடைய செய்திகள்
மேலும் இக்கால மின்னிலக்க பயன்பாட்டு முறைகளைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், அதனைக் குடும்பத்தினர், நண்பர்களுடன் எளிய முறையில் விளையாட்டு வாயிலாகக் கற்றுக்கொள்வதில்தான் அவர்கள் பெரிதும் நாட்டம் கொள்வதாகச் சொன்னார் அவர்.
‘‘அதனைக் கருத்தில் கொண்டே பரமபதம் போன்ற பலகை விளையாட்டு வழி, அவர்களுக்கு மின்னிலக்க அறிவாற்றலை புகுத்துகிறோம்,’’ என்றார் அவர்.
முதியோர் தங்களின் கைப்பேசி உள்ளிட்ட மின்னலக்க சாதனங்களை அவ்வளவாக உபயோகிக்கமாட்டார்கள். எனவே கைப்பேசியைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துவதற்கு ஏதுவான விளையாட்டுகளும் உண்டு என்ற ஸ்ருதி, அவர்கள் அவ்விளையாட்டின் ஒவ்வொரு படிநிலையையும் முடிக்கையில் அவர்கள் பெற்றுள்ள புள்ளிகள் தெரியவரும் என்றும் சொன்னார்.
இணையம் வழியாக வங்கிச் சேவைகளை மேற்கொள்வது குறித்தும் சொல்லித்தரப்படுகிறது.
“தற்போதைய உலகில் மின்னிலக்கம் சார்ந்த திறன் எல்லாத் தரப்பினருக்கும் இன்றியமையாதது என்பதால், மூத்தோருக்கு அதை எவ்வளவுக்கெவ்வளவு எளிதாகக் கற்றுக்கொடுக்க முடியுமோ அவ்வளவு எளிதாகக் கற்றுத்தரும் முயற்சியில் எங்கள் செயல்திட்டம் விரிவடைந்து வருகிறது.
‘‘பயிலரங்குகள், கலந்துரையாடல்கள் வாயிலாகவும் சமூக மன்றங்களில் ‘விளையாட்டு இரவு’ எனும் அமர்வுகள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்று சுருதி குறிப்பிட்டார்.
முடிந்த அளவு பல மூத்தோரை இணைய மோசடியிலிருந்து காக்கும் இலக்குடன் அவர்களுக்கு அடிப்படையான மின்னிலக்க எழுத்தறிவை புகட்டுவதே தம் வேண்டுகோள் என்று விளக்கிய சுருதி, இதற்குத் தளமாகத் திகழும் செயல்திட்டம் வழியாக, அவர்களிடையே மின்னிலக்கப் புரட்சி ஏற்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
‘‘எங்கோ இருந்துகொண்டு வாழ்நாள் சேமிப்புகளை நொடிப்பொழுதில் சுருட்டிவிடும் மோசடிக்காரர்களுக்கு எதிரான தனிமனித முயற்சி நன்மை அளிக்கும் என்பது மறுப்பதற்கில்லை.
‘‘எனினும், இவற்றிற்கு எதிரான யுத்தத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக நம் மூத்தோருடன் இணைந்து இளையர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் நற்பலனை விதைக்கும் மின்னிலக்க புரட்சியே,” என்றார் ஸ்ருதி.
குறிப்பு:
சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு மோசடிகளில் சிக்கியோர் ஒட்டுமொத்தமாக 1.1 பில்லியன் வெள்ளிக்கும் மேலான தொகையை இழந்தனர்.
இதற்கு முன்பு ஒரே ஆண்டில் இவ்வளவு தொகை மோசடிமூலம் பறிக்கப்படவில்லை.
2023ஆம் ஆண்டில் மோசடிகள்மூலம் $651.8 மில்லியன் பறிபோன நிலையில், அதற்கு மறுஆண்டு அதைவிட 70% கூடுதல் தொகை பறிபோனது நினைவுகூரத்தக்கது.
மோசடி தொடர்பில் ஆக அதிகமாக 2024ஆம் ஆண்டு 51,501 புகார்களைக் காவல்துறை பெற்றது. 2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 46,563ஆகப் பதிவானது.
உதவிக்கான அழைப்பு எண்களும் இணைய வளங்களும்:
ஸ்கேம்ஷீல்டு உதவி எண்: 1799
மனநலக் கழகத்தின் மனநல உதவி எண்: 6389-2222
scamalert.sg
scamshield.org.sg

