அர்ப்பணிப்பு ஈட்டித் தந்த தங்க விருது

அர்ப்பணிப்பு ஈட்டித் தந்த தங்க விருது

படம்: சாவ்பாவ்

02 Nov 2026 - 12:17 pm

3 mins read

ஆடை அணிகலன்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள் போன்ற பல்வேறு அம்சங்களில் தமது சக வயதினருக்கு ஆர்வமிருந்தபோது சமூகச் சேவையின்மீது மிகுந்த ஈடுபாடு காட்டினார் பிரார்த்தனா தமிழ்ச்செல்வன்.

அந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இவருக்கு தேசிய இளையர் சாதனைத் தங்க விருதை பெற்றுத்தந்துள்ளது.

அவ்விருது இவ்வாண்டு மொத்தம் 386 இளையர்களுக்கு வழங்கப்பட்டாலும் சிறந்த சமூக சேவைத் திட்டங்களை வழிநடத்திய 31 இளையர்களுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் விருது வழங்கிச் சிறப்பித்தார். அந்தப் பெருமைக்குரியோரில் பிரார்த்தனாவும் ஒருவர்.

சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள பிரார்த்தனா (நடுவில்) தமது முயற்சிகள் குறித்து அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் பகிர்ந்துகொண்டார்.
சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள பிரார்த்தனா (நடுவில்) தமது முயற்சிகள் குறித்து அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் பகிர்ந்துகொண்டார். - படம்: சாவ்பாவ்

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிர்மருத்துவ அறிவியல் பயின்றுவரும் 19 வயது பிரார்த்தனா, சிறப்புத் தேவையுடையோர், முன்னாள் குற்றவாளிகள், மூத்தோர் என உதவி தேவைப்படும் பல்வேறு சமூகத்தினர்க்குத் தொண்டாற்றி வருகிறார்.

“நான் சமூக சேவைக்குள் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் வந்தேன். ஆயினும், எனக்கு அதன்மீது பேரார்வம் ஏற்பட்டுவிட்டது. நான் உதவிய மக்கள் அடைந்த மகிழ்ச்சியைப் பார்க்கையில் எனக்கும் இனம்புரியா இன்பம் ஏற்பட்டது.

“ஆகையால், பள்ளி வேலைகளையும் சமூக சேவைத் திட்டங்களையும் திறம்படச் சமாளிக்கக் கற்றுக்கொண்டேன்,” என்றார் இந்த இளையர்.

சமூகச் சேவை திட்டங்களில் உதவி வந்த தொண்டூழியரிலிருந்து அனைவரையும் உள்ளடக்கிய சமூகத் திட்டங்களுக்குப் பொறுப்பேற்கும் தலைவராக இவர் வளர்ந்துள்ளார்.

தலைமைத்துவப் பயணம்

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ‘மாவேன்’ மாணவர் ஆர்வக் குழுவின் துணைத் தலைவராக சேவையாற்றிய பிரார்த்தனா, தமது சமூகத் தலைமைத்துவ முன்னெடுப்பிற்காக ‘மாவேன் x மைண்ட்ஸ் சேவைவழிக் கற்றல்’ திட்டத்தின் தலைவராகச் செயல்பட்டார்.

‘மைண்ட்ஸ்’ அமைப்பிலிருக்கும் அறிவுசார் குறைபாடு உள்ளோர்க்காக பிரார்த்தனா பல்வேறு திட்டங்களை ஏற்பாடு செய்தார்.
‘மைண்ட்ஸ்’ அமைப்பிலிருக்கும் அறிவுசார் குறைபாடு உள்ளோர்க்காக பிரார்த்தனா பல்வேறு திட்டங்களை ஏற்பாடு செய்தார். - படம்: பிரார்த்தனா தமிழ்ச்செல்வன்

ஒருங்கிணைப்பாளர்களையும் தொண்டூழியர்களையும் கொண்ட குழுவிற்குத் தலைமை தாங்கிய இவர், ‘மைண்ட்ஸ் உட்லண்ட்ஸ் வேலைவாய்ப்பு மேம்பாட்டு மையத்தில்’ உள்ள அறிவுசார் குறைபாடுள்ளோர்க்காகக் கலை, கைவினைப் பொருள்கள், விளையாட்டு, பாட்டு, நடனம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வழிநடத்தினார்.

அந்நடவடிக்கைகள் தொண்டூழியர்களுடன் பங்கேற்பாளர்கள் உரையாடவும் தன்னம்பிக்கை பெறவும் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கவும் வாய்ப்புகளை உருவாக்கின.

அனைத்து நிர்வாக ஏற்பாடுகளும் பங்கேற்பாளர்களுக்குப் பொருத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதை பிரார்த்தனா உறுதிசெய்தார்.

தொண்டூழியர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதை மேற்பார்வையிட்டவாறே களத்திலும் இறங்கி உதவினார்.

சக தொண்டூழியர்களுடன் இணைந்து சேவையாற்ற தாம் காட்டிய முனைப்பு தமது தலைமைப் பண்பை மேலும் வலுப்படுத்தியதாக பிரார்த்தனா நம்புகிறார்.

முதியோர் நலத்திட்டங்கள்

பிரார்த்தனாவின் சேவைவழிக் கற்றல் செயல்பாடுகள் முதியவர்களின் வாழ்விலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. ‘ஹோம் தாதிமை அறநிறுவன’ அமைப்பில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராகச் சேவையாற்றிய இவர், அங்கிருக்கும் முதியோர்க்காக பல சுவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார்.

‘ஹோம் தாதிமை அறநிறுவன’ அமைப்பில் தமது குழுவினருடன் சேர்ந்து தொண்டூழியத்தில் ஈடுபட்டார் பிரார்த்தனா.
‘ஹோம் தாதிமை அறநிறுவன’ அமைப்பில் தமது குழுவினருடன் சேர்ந்து தொண்டூழியத்தில் ஈடுபட்டார் பிரார்த்தனா. - படம்: பிரார்த்தனா தமிழ்ச்செல்வன்

முதியவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் தனிப்பட்ட கதைகளையும் பகிர்ந்துகொள்ளும் உரையாடல்களுக்கும் இவர் உதவினார்.

‘துடிப்பான முதுமைக்கான சுகாதாரப் பரிசோதனை’ (Active Ageing Health Screening) நிகழ்வில், முதியவர்கள் பதிவுசெய்துகொள்வதற்கும் பரிசோதனை நிலையங்களுக்குச் செல்வதற்கும் இவர் வழிகாட்டினார்.

பங்கேற்பாளர்கள் எந்தச் சிரமமுமின்றி பரிசோதனை நிலையங்களுக்குச் செல்ல இவரது பங்களிப்பு உதவியதோடு சுகாதாரத் துறை சார்ந்த சேவைகளின்மீதான அவரது ஆர்வத்தையும் இது வெளிப்படுத்தியது.

விருதைக் கடந்த அர்ப்பணிப்பு

தேசிய இளையர் சாதனை விருது திட்டத்தின் தேவைகளையும் கடந்து பிரார்த்தனாவின் அர்ப்பணிப்பு தொடர்ந்தது.

2026 ஜூன் மாதத்தில் முன்னாள் குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஆசிய மருத்துவ மாணவர்கள் சங்கம் முன்னெடுத்த தன்னார்வத் திட்டத்தில் இவர் இணைந்தார்.

அவர்களுடனான உரையாடல்கள்வழி சமூக, பணியிடப் பாகுபாடு, அவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கு உள்ள தடைகள் போன்றவை குறித்துத் தாம் ஆழமாகப் புரிந்துகொண்டதாக இவர் கூறினார்.

முன்னாள் குற்றவாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக்கு ஏதுவான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பொதுக் கல்வி விழிப்புணர்வு நிகழ்வுகள், கலந்துரையாடல் வாய்ப்புகள் குறித்த யோசனைகளை இவரது குழு முன்வைத்தது.

இந்த அனுபவங்கள் வாயிலாக சமூகத் தேவைகளைக் கண்டறிவதிலும் அவற்றை நிறைவுசெய்ய மக்களை ஒன்றிணைப்பதிலும் பிரார்த்தனா மேலும் முனைப்புடன் செயற்படத் தொடங்கியுள்ளார்.

இனிவரும் ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தில் உயிர்மருத்துவத் துறையில் பட்டக்கல்வி பயிலத் திட்டமிடும் பிரார்த்தனா, தொடர்ந்து பல்வேறு சமூகங்களுக்குச் சேவையாற்றவும் எண்ணம் கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்