இளையர்களின் நோன்புப் பெருநாள் குதூகலம்

இளையர்களின் நோன்புப் பெருநாள் குதூகலம்

3 mins read
நோற்ற நோன்பினால் நற்பண்புகள், நன்றியுணர்வு
500d0949-0ed6-4a70-8d15-23ee1196a9d4
நோன்புப் பெருநாளைச் சிங்கப்பூரில் உள்ள இந்திய முஸ்லிம் இளையர்கள் இவ்வாண்டு உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். - படம்: ஓடுவா இமேஜஸ்

ஒரு மாத கால ரமலான் நோன்பின் நிறைவாக வந்த நோன்புப் பெருநாளைச் சிங்கப்பூரில் உள்ள இந்திய முஸ்லிம் இளையர்கள் இவ்வாண்டு மிகவும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

வேலை, படிப்பு என அன்றாடப் பரபரப்புகளுக்கு இடையே குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிடவும் மனத்தை அமைதிப்படுத்தவும் இந்தப் பெருநாள் அவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

பாரம்பரிய உணவுகள், பள்ளிவாசல் தொழுகை, உறவினர்கள் சந்திப்பு என இந்த ஆண்டுப் பெருநாளை நம் இளையர்கள் பல்வேறு விதங்களில் கொண்டாடினர்.

“வேலைப் பளுவால் ரமலான் மாதம் முழுவதும் மிகவும் பரபரப்பாக இருந்தது. அதனால், சற்று ஓய்வெடுத்து என் வாழ்க்கைப் பயணத்தில் உறுதுணையாக இருக்கும் குடும்பத்தினருக்கு நன்றிகூற பெருநாள் கொண்டாட்டத்தை வாய்ப்பாகப் பார்க்கிறேன்,” என்று 29 வயது இயன்முறை மருத்துவரான முஹம்மது இம்ரான் கூறினார்.

இயன்முறை மருத்துவர் முஹம்மது இம்ரான்.
இயன்முறை மருத்துவர் முஹம்மது இம்ரான். - படம்: முஹம்மது இம்ரான்

உறவினர்கள் சிலருக்குத் திருமணமாகி, குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதால் இந்த ஆண்டுக் கொண்டாட்டம் கூடுதல் களைகட்டியதாகவும் இம்ரான் குறிப்பிட்டார்.

“உலகின் மற்ற பகுதிகளில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் நாம் வாழும் பாதுகாப்பான வாழ்க்கைக்காக இறைவனுக்கு நன்றி கூற பெருநாள் தொழுகை சிறந்த நினைவூட்டலாக அமைந்தது,” என்றார் அவர்.

நண்பகல் உணவுக்குத் தாத்தா வீட்டிற்கும், இரவில் அத்தை வீட்டிற்கும் சென்றதாகவும், பிரியாணி, பாரம்பரிய ‘குவே’ பலகாரங்கள் இல்லாமல் பெருநாள் தமக்கு முழுமையடையாது என்றும் இம்ரான் கூறினார்.

சிங்கப்பூரில் நெருக்கமான உறவினர்கள் அதிகம் இல்லாததால், பள்ளித் தோழிகளை வீட்டிற்கு அழைப்பதாகச் சமூக அறிவியல் மாணவி ஃபஹ்மிதா சனா, 22, தெரிவித்தார்.

“அவர்களுடன் விளையாடி, மிகவும் நிதானமான முறையில் இந்தப் பெருநாளைக் கொண்டாடினேன்,” என்றார் சனா.

சமூக அறிவியல் மாணவி ஃபஹ்மிதா சனா, 22.
சமூக அறிவியல் மாணவி ஃபஹ்மிதா சனா, 22. - படம்: ஃபஹ்மிதா சனா

பெருநாள் காலை உணவாகத் தம் தாயார் செய்யும் பாரம்பரிய பலகாரமான வட்டலாப்பமும், ரொட்டி ஜாலாவும் சாப்பிடுவது தங்களது வழக்கம் என்று அவர் கூறினார்.

அம்மாவின் கைவண்ணத்தில் உருவாகும் ஷான் மசாலா பிரியாணியையும் மறக்க முடியாது என்றார் சனா.

சுவையான உணவைச் சுவைத்து, அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிட முடிந்ததற்கு தாம் நன்றியுடன் இருப்பதாக சனா கூறினார்.

சுகாதாரத்துறையில் பணிபுரியத் தொடங்கியபின் வந்த முதல் பெருநாள் இது என்பதால், நோன்பிருப்பது சற்று சவாலாக இருந்ததாகக் கூறினார் 26 வயது இளநிலை மருத்துவரான முகம்மது ஷமிர் ஜர்ஃபர் ஹுசைன்.

முகம்மது ஷமிர் ஜர்ஃபர் ஹுசைனுடன் (இடக்கோடி) அவரது குடும்பத்தினர்.
முகம்மது ஷமிர் ஜர்ஃபர் ஹுசைனுடன் (இடக்கோடி) அவரது குடும்பத்தினர். - படம்: முகம்மது ஷமிர் ஜர்ஃபர் ஹுசைன்

“சில நேரங்களில் வேலை நேரம் முடிவடைய தாமதமானபோது வீட்டிற்குச் சென்று நோன்பு துறக்க முடியவில்லை. ஆனாலும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தகவல்களை அளித்து நோயாளிகளுக்கும் சக ஊழியர்களுக்கும் கூடுதல் உதவிசெய்து அதிக நன்மைகளைத் தேடிக்கொள்ள இந்த ரமலான் உதவியது,” என்றார் அவர்.

பெருநாள் தொழுகையின்போது வாசிக்கப்பட்ட பிரசங்கம், சவாலான நேரங்களில் பொறுமையாகவும், கிடைத்துள்ள பாக்கியங்களுக்கு நன்றியுணர்வுடனும் இருப்பதன் அவசியத்தை உணர்த்தியதாக அவர் கூறினார்.

வார இறுதியில் உறவினர்களைச் சந்தித்து, உணவுண்டு ஓய்வெடுத்த ஷமிர், இந்தியாவில் உள்ள உறவினர்களுடன் ‘ஸூம்’ காணொளி வழியாகப் பேசி பெருநாள் உடைகளைக் காண்பித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதாகவும் கூறினார்.

இந்தியாவிலிருந்து தாத்தா பாட்டி வந்துள்ளதால் இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் தமக்குக் கூடுதல் சிறப்புடன் இருந்ததாகப் பொதுத்துறையில் துணை மேலாளராகப் பணிபுரியும் 25 வயது மு. ஃபர்ஹானா கூறினார்.

பள்ளி நண்பர்களை லிடியா (நடுவில்), 
ஜெனிஃபர் (வலது) வீட்டுக்கு அழைத்த ஃபஹ்மிதா சனா.
பள்ளி நண்பர்களை லிடியா (நடுவில்), ஜெனிஃபர் (வலது) வீட்டுக்கு அழைத்த ஃபஹ்மிதா சனா. - படம்: சனா
பொதுத்துறையில் துணை மேலாளராகப் பணிபுரியும் மு. ஃபர்ஹானா, 25.
பொதுத்துறையில் துணை மேலாளராகப் பணிபுரியும் மு. ஃபர்ஹானா, 25. - படம்: மு. ஃபர்ஹானா

சிங்கப்பூரில் அதிக அளவில் உறவினர்கள் இல்லாததால், அக்கம்பக்கத்தினருடனும் நண்பர்களுடனும் உணவுகளைப் பகிர்ந்துகொள்வது இவர்களின் குடும்ப வழக்கம்.

இடியாப்பம், கோழிக்கறி, வட்டலாப்பம் ஆகியவை இவரது குடும்பத்தின் பெருநாள் காலை உணவாகும்.

“பரப்புக்கு இடையில் அமைதி அளிக்கும் இந்த மாதத்தில், இஸ்லாமியர் அல்லாத நண்பர்களுடன் நோன்பு திறப்பது, அவர்களுக்கு நமது மார்க்கம் குறித்து விளக்குவது சிறப்பான அனுபவம்.

நற்பண்புகளையும் நன்றியுணர்வையும் தொடர்ந்து கடைப்பிடிக்க நோன்புப் பெருநாள் சிறந்த நினைவூட்டல் என்றார் ஃபர்ஹானா.

சிறு வயதிலிருந்தே தொழுகைக்கு பென்கூலன் பள்ளிவாசலுக்குச் சென்று வருகிறார் 30 வயது அப்துல் ரஹீம். “பள்ளிவாசல் என்பது வழிபாடுகளைத் தாண்டி சமூக ஒன்றுகூடலுக்கான தளம். ஈகைத் திருநாளன்று அனுபவம் மிக்க பலரைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கைப் பாடங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம்,” என்றார் அவர்.

ஒரு மாதம் முழுதும் நோன்பிருப்பது பசியைக் கடந்து பொறுமையைக் கற்றுக்கொடுக்கிறது என்ற அவர் இந்தப் பண்டிகை சமூக ஒன்றிணைவையும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்