சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இளையர் பட்டிமன்றம்

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இளையர் பட்டிமன்றம்

படம்: சிவாயா

18 Sep 2026 - 4:38 pm

2 mins read

சிங்கப்பூர்த் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘இன்றைய இளையர்களை அதிகம் கவர்வது சிங்கப்பூர் வாழ்க்கைமுறையா? வெளிநாட்டு வாழ்க்கைமுறையா?’ என்ற தலைப்பில் சுவாரசியமான பட்டிமன்றம் நடைபெற்றது.

சிவில் சர்விஸ் கிளப் அரங்கில் செப்டம்பர் 13ஆம் தேதி நடந்தேறிய ‘டீ பொறி பறக்கட்டும்’ பட்டிமன்றத்தில் எட்டு இளையர்கள் தீப்பொறியைப் பறக்கவிடாமல் நிகழ்ச்சியின் பெயருக்கேற்ப டீ பொறியைப் பறக்கவிட்டனர்.

காரசாரமான விவாதமாக இல்லாமல் எளிய மொழிநடையில் இளையர்களுக்கு எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் நகைச்சுவை பாணியிலும் பட்டிமன்றம் அமைந்தது.

திரு வடிவழகன் பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்தினார். சிங்கப்பூர் வாழ்க்கைமுறையே இளையர்களை அதிகம் கவர்வதாக கெஜ ஷ்ரேயா ராஜ்குமார், யுகேஷ் கண்ணன், முகம்மது ஜாஃபிர், பாலு விஜயலட்சுமி ஆகியோர் வாதிட்டனர்.

சிங்கப்பூர் வாழ்க்கைமுறையே இளையர்களைக் கவர்வதாக வாதிட்ட அணியின் (இடமிருந்து) கெஜ ஷ்ரேயா ராஜ்குமார், யுகேஷ் கண்ணன், முகம்மது ஜாஃபிர், பாலு விஜயலட்சுமி
சிங்கப்பூர் வாழ்க்கைமுறையே இளையர்களைக் கவர்வதாக வாதிட்ட அணியின் (இடமிருந்து) கெஜ ஷ்ரேயா ராஜ்குமார், யுகேஷ் கண்ணன், முகம்மது ஜாஃபிர், பாலு விஜயலட்சுமி - படம்: சிவாயா

வெளிநாட்டு வாழ்க்கைமுறையே இளையர்களை அதிகம் ஈர்ப்பதாக க்ரிஷ்மிதா ஷிவ் ராம், செல்வராஜ் விஷாலினி, ரகுநந்தன், மோகன் ஹரிவர்தினி ஆகிய நால்வரும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இளையர்களை ஈர்ப்பது வெளிநாட்டு வாழ்க்கைமுறைதான் என வாதிட்ட (இடமிருந்து) மோகன் ஹரிவர்தினி,  ரகுநந்தன், செல்வராஜ் விஷாலினி, க்ரிஷ்மிதா ஷிவ் ராம்.
இளையர்களை ஈர்ப்பது வெளிநாட்டு வாழ்க்கைமுறைதான் என வாதிட்ட (இடமிருந்து) மோகன் ஹரிவர்தினி, ரகுநந்தன், செல்வராஜ் விஷாலினி, க்ரிஷ்மிதா ஷிவ் ராம்.
பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்திய திரு வடிவழகன்.
பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்திய திரு வடிவழகன். - படம்: சிவாயா

பாதுகாப்பு, வசதி, உணவு, திறமைக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு கூறுகள் சிங்கப்பூர் வாழ்க்கைமுறையை இளையர்களுக்குப் பிடித்தமானதாக வைத்துள்ளன ஒருதரப்பினர் கூறினர்.

மாறாக, மனவுளைச்சலின்மை, இயற்கையின் அழகு, மெதுவான வாழ்க்கை ஆகியவை வெளிநாட்டு வாழ்க்கைமுறையை அவர்களுக்குப் பிடித்தமானதாக வைத்துள்ளன என்று எதிர்த்தரப்பு குறிப்பிட்டது.

“சிங்கப்பூரின் சாதகங்களை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால், வெளிநாட்டு வாழ்க்கைமுறையில் இருக்கும் நல்ல அம்சங்களையும் சிங்கப்பூருக்குக் கொண்டுவருவது அவசியம்,” என்று பட்டிமன்றத்தின்போது ரகுநந்தன் கூறினார்.

“சிங்கப்பூரில் தேநீர், குளம்பி விடுதிகளில் மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை மேசைகளில் விட்டுச்சென்றாலும் பல மணிநேரம் கழித்தும் அவை அங்குப் பாதுகாப்பாக உள்ளன. இதுபோன்ற பாதுகாப்பான சூழல் இன்று பல நாடுகளில் நிலவுவது இல்லை,” என்றார் கெஜ ஷ்ரேயா.

இளையர்களுக்குத் தேவையான கருத்துகளை அவர்களுக்குப் பிடித்த பாணியில் கடத்தும் நோக்குடன் பட்டிமன்றம் வடிவமைக்கப்பட்டதாகச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் சஞ்சய் முத்துக்குமரன் குறிப்பிட்டார்.

“பொதுவாக, பட்டிமன்றங்களிலும் விவாதங்களிலும் வாதங்கள் சூடுபிடித்து பேச்சாளர்களின் வாய்வீச்சு தழைத்தோங்கும். ஆனால், இந்தப் பட்டிமன்றத்தில் முக்கியக் கருத்துகளை இளைய பேச்சாளர்கள் நகைச்சுவைவழி முன்வைப்பது முக்கிய நோக்கமாக இருந்தது,” என்றார் அவர்.

கருத்துகளை முன்வைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்ததால் பட்டிமன்றத்தில் எந்த அணியும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படவில்லை.

நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக பார்வையாளர்கள் கருத்துக்கணிப்பு ஒன்று நடந்தேறியது.

இளையர்களை அதிகமாக எந்த வாழ்க்கைமுறை கவர்கிறது என்ற கேள்விக்குச் சிங்கப்பூர் வாழ்க்கைமுறை என்று 63 பேரும் வெளிநாட்டு வாழ்க்கைமுறை என்று 72 பேரும் வாக்களித்தனர்.

வெளிநாட்டு வாழ்க்கைமுறையே இளையர்களை அதிகம் கவர்கிறது எனப் பார்வையாளர்களில் பலரும் நினைத்தது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்தது.
வெளிநாட்டு வாழ்க்கைமுறையே இளையர்களை அதிகம் கவர்கிறது எனப் பார்வையாளர்களில் பலரும் நினைத்தது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்தது. - படம்: சிவாயா
குறிப்புச் சொற்கள்