ஆரோக்கியமான உடல்நலனை வைத்துக்கொள்வதில் பலர் ஆர்வம் காட்டி வரும் நிலைக்கேற்ப உடற்பயிற்சிப் போக்குகளும் மாறிக்கொண்டு வருகின்றன.
ஓடுவது, உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வது, நீச்சலடிப்பது என்று மட்டும் இருந்த காலம் மலையேறி இப்போது புதுமையான போக்குகள் மக்களின் பார்வைக்கு வந்துள்ளன.
அந்த வகையில் ‘ஹைரோக்ஸ்’ எனப்படும் உடற்பயிற்சிப் போக்கு சிங்கப்பூருக்கு அப்பால் வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்து வருகிறது. குறிப்பாக ‘ஜென் சி’ இளையர்கள் பலர் இதில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது.
‘ஹைரோக்ஸ்’ என்பது எட்டு கிலோமீட்டர் ஓட்டம், எட்டு உடற்பயிற்சி நிலையங்களை இணைக்கும் உலகளாவிய உடற்பயிற்சிப் பந்தயம் ஆகும்.
அனைத்துத் திறன் நிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்ற வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்ளரங்கில் நடைபெறும் இந்தத் தரப்படுத்தப்பட்ட பந்தயத்தில் பங்கேற்பாளர்கள் ஒரு கிலோமீட்டர் ஓட்டம், அதைத் தொடர்ந்து ஓர் உடற்பயிற்சி நிலையம் என இந்தச் சுழற்சியை எட்டு முறை நிறைவு செய்ய வேண்டும்.
இது சகிப்புத்தன்மை, வலிமைப் பயிற்சியின் ஒரு கலவையாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் முதன்முதலில் ஹைரோக்ஸ் பந்தயம் 2023ல் நடைபெற்றது. அதிக பிரபலம் அடைந்ததன் காரணமாக அப்பந்தயம் 2024லும் 2025லும் மீண்டும் நடைபெற்றது. இந்த ஆண்டும் மக்கள் அப்போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டில் ஹைரோக்ஸ் அனுபவம்
தனது காதலி ஜாஸ்மின் புவாவுடன் ஹைரோக்ஸ் பந்தயத்தில் கலந்துகொள்ள ரா கெளதம், 31, ஜப்பானுக்குச் சென்றார்.
ஜப்பானைச் சுற்றிப் பார்ப்பதற்கும், அதே நேரத்தில் உடல்நலனில் அக்கறை கொள்ளும் விதமாகவும் பயணம் அமையும் என்ற எண்ணத்தில் சிங்கப்பூரில் கலந்துகொள்வதற்குப் பதிலாக இருவரும் அந்த முடிவை எடுத்தனர்.
இருவரும் ஈராண்டுகளாக ‘F45’ உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஹைரோக்ஸ் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறும்போது இருவருக்கும் அதன் மேல் ஆர்வம் வரத் தொடங்கியது.
“எனக்கு நெடுந்தூர ஓட்டம் பிடிக்காது. அதனால் நெடுந்தூர ஓட்டப்போட்டிகளில் கலந்துகொள்வதைவிட ஹைரோக்ஸ் சிறந்த தேர்வாக இருந்தது,” என்றார் கெளதம்.
இருவரும் அடிக்கடி ஈடுபடும் பயிற்சிக்கு அப்பாற்பட்டு ஹைரோக்ஸ் பயிற்சியும் அதனுடன் சேரத் தொடங்கியது. வேலைக்குச் செல்லும் முன் அதிகாலை 5.30 மணிக்கு ஹைரோக்ஸ் பயிற்சி மேற்கொண்டனர்.
“இருவரும் போட்டித்தன்மை மிக்கவர்கள் என்பதால் ஹைரோக்சில் எங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நாங்கள் அயராமல் பயிற்சி மேற்கொண்டோம்,” என்று சொன்னார் ஜாஸ்மின், 29.
பயிற்சியையும் தாண்டி இருவரும் உணவுப் பழக்கமுறையிலும் கவனமாக இருந்தனர். உணவில் சர்க்கரை சேர்க்காமல் இருந்தது அவற்றில் ஒன்று. முதல்முறையாக அத்தகைய பந்தயத்தில் ஈடுபட்ட இருவருக்கும் ஜப்பானின் யோகோஹாமா ஒரு புதிய சூழலையும் அளித்தது. இருவரும் அனைத்து உடற்பயிற்சி நிலையங்களையும் கடக்க மொத்தம் ஒரு மணி நேரம், 22 நிமிடங்கள் எடுத்துக்கொண்டனர்.
“ஹைரோக்ஸ் எங்கள் இருவரையும் இன்னும் நெருக்கமாக்கியது. என்ன நடந்தாலும் விடாமுயற்சியுடன் அனைத்து நிலையங்களையும் கடக்க வேண்டும் என்று திண்ணமாக இருந்தோம்,” என்று கூறினார் ஜாஸ்மின்.
அடுத்து, ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் ஹைரோக்ஸ் பந்தயத்தில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்தார் கெளதம்.
தனிப்பட்ட சாதனை
இரு பிள்ளைகளுக்குத் தாயான பிறகு ஜெஸ்சி கவுருக்கு உடற்பயிற்சியில் ஈடுபட முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டது. ஆனால் அவர் மனம் தளரவில்லை. மிகவும் துடிப்பான வாழ்க்கைமுறையை மேற்கொண்டு வந்த அவர், ஈராண்டுகளுக்கு முன்னர் மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்பினார்.
உடற்பயிற்சிக் கூடத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் காலையில் ஜெஸ்சி, 34, உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அங்கிருக்கும் ஓர் உடற்பயிற்சிப் பயிற்றுநர் மூலம் ஹைரோக்ஸ் பற்றி அவர் கேள்விப்பட வந்தார்.
“ஹைரோக்ஸ் பற்றி பயிற்றுநர் என்னிடம் அடிக்கடி பகிர்ந்துகொள்ளும் போது எனக்கு அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்தது,” என்றார் ஜெஸ்சி.
பந்தயத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஹைரோக்சில் கலந்துகொள்ள முடிவெடுத்தார் ஜெஸ்சி. இதில் பங்கேற்றதை ஒரு தனிப்பட்ட சாதனையாகக் கருதிய அவர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹைரோக்ஸ் பயிற்சி மேற்கொண்டார்.
“என் கணவர் நான் வீட்டில் இல்லாத போது பிள்ளைகளைக் கவனிக்க உதவினார். பிள்ளைகள் எழுவதற்கு முன் நான் பயிற்சி மேற்கொள்ள செல்வேன்,” என்று சொன்னார் ஜெஸ்சி. தனது தோழியுடன் பங்கேற்ற ஜெஸ்சி சுய சந்தேகம் படாமல் பந்தயத்தை சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.
“பந்தயத்தில் சிலர் பார்ப்பதற்கு மிக ஆரோக்கியமாக இருப்பது போல இருந்தும் அனைத்து நிலையங்களையும் கடக்க முடியாமல் இருந்தனர். அதைப் பார்த்து எனக்குப் பதற்றம் ஏற்பட்டாலும் தோழியின் ஆதரவு எனக்கு உதவியது,” என்றார் ஜெஸ்சி.

