இளையர்களின் சமூக நலத்திட்டங்களை ஆதரிக்கும் ‘ஹேலோஜென்’ அமைப்பு

இளையர்களின் சமூக நலத்திட்டங்களை ஆதரிக்கும் ‘ஹேலோஜென்’ அமைப்பு

2 mins read
4117bc06-4a17-4dcf-b2b4-e7e5587edd6c
‘அக்சலரேட்டர்’ உச்சநிலை மாநாட்டில் இளையர்கள் கிட்டத்தட்ட 185 பேர் பங்கேற்றனர். - படம்: ‘ஹேலோஜென்’
multi-img1 of 2

சிங்கப்பூரின் இளம் தலைவர்களுக்காக ‘ஹேலோஜென்’ அமைப்பு முதல் முறையாக ‘அக்சலரேட்டர்’ உச்சநிலை மாநாட்டை நடத்தியுள்ளது.

ஜூன் 20ஆம் தேதி தெமாசெக் கடைவீட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய இளம் தலைவர்கள் ஆய்வு வல்லுநர் திட்டத்தின் இளையர்கள் அங்கம் வகித்துள்ளனர்.

ஆய்வு வல்லுநர் திட்டத்தின் புதிய ‘அக்சலரேட்டர்’ (Accelerator) திட்டம் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட இளையர்களின் முயற்சிகளுக்கு அத்திட்டத்தின்கீழ் கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.

முந்தைய ஆய்வு வல்லுநர் குழுக்களின் கூட்டு மைல்கல்லாக விளங்கும் இந்த ஐந்தாம் ஆண்டுநிறைவு என்பது, கடந்த காலப் பயணங்களைக் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது என்று ‘ஹேலோஜென்’ அமைப்பு தெரிவித்தது.

அர்த்தமுள்ள, நிலையான மாற்றங்களை உருவாக்க இளம் தலைவர்களுக்குத் தெளிவு, தொடர்புகள், தன்னம்பிக்கை ஆகியவற்றை வழங்கி அவர்களைத் தயார்ப்படுத்த இந்த மாநாடு முனைகிறது.

இளையர்கள் வழிநடத்தும் கிட்டத்தட்ட 20 பணித்திட்டங்கள் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆதரவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட ‘அக்சலரேட்டர்’  திட்டம்  உதவுமென மாநாட்டில் பங்குபெற்ற அர்ஷுல் கார்க், 22, தெரிவித்தார்.
சமூக முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட ‘அக்சலரேட்டர்’  திட்டம் உதவுமென மாநாட்டில் பங்குபெற்ற அர்ஷுல் கார்க், 22, தெரிவித்தார். - படம்: ‘ஹேலோஜென்’

திட்டத்தின் பயன் குறித்து இளையர்கள் நம்பிக்கை

மாநாட்டில் பங்கேற்ற இளையர்களில் ஒருவரான சிங்கப்பூர் ஆயுதப்படைக் கல்விமான், அர்ஷுல் கார்க், 22, புதிய ‘அக்சலரேட்டர்’ திட்டம் தம்மைப் போன்றோர்க்குக் கைகொடுக்கும் என நம்புகிறார்.

“நாம் ஒரு முயற்சியைத் தொடங்கும்போது, பெரும்பாலும் நம்முடைய முழு நேரத்தையும் உழைப்பையும் அதற்குக் கொடுக்கிறோம்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“அதை நீண்ட காலத்திற்குத் தொடரவும், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் தேவையான நிபுணத்துவமும் ஆதரவும் பல நேரங்களில் கிடைக்காமல் போகலாம். அவற்றை இந்தப் புதுமுயற்சி வழங்குவது நம்பிக்கையளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

இளையர்களின் பணிகளுக்கு இந்தப் புதிய முயற்சி உந்துதலாக இருக்குமென விதீப் அகர்வால், 17, நம்புகிறார் .
இளையர்களின் பணிகளுக்கு இந்தப் புதிய முயற்சி உந்துதலாக இருக்குமென விதீப் அகர்வால், 17, நம்புகிறார் . - படம்: ‘ஹேலோஜென்’

மற்றொரு பணித்திட்ட வழிநடத்துநரான விதீப் அகர்வால், 17, இத்தகைய புதுத் திட்டங்கள் தங்களுக்குத் தேவைப்படும் உந்துதலைத் தருவதாகக் குறிப்பிட்டார்.

பெரிதும் ஆராயப்படாத, பேசப்படாத உலகச் சவால்களைக் குறித்து இளையர்கள் தகவல் திரட்டி ஆய்வுக் கட்டுரைகளை எழுத கைகொடுக்கும், ‘வோர்ல்டு இன் பேஜஸ்’ அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். கல்விமான்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களின் தொடர்புகளை இந்த அமைப்பு இளையர்களுக்கு வழங்குகிறது.

“இளையர்களாகிய நாங்கள் ‘நாளைய தலைவர்கள்’ மட்டுமல்லர். நாங்கள் ஏற்கனவே இங்குக் களத்தில் இறங்கி சேவை செய்து வருகிறோம். சமூகத்தை முன்னிறுத்தும் மாற்றங்களையும் உருவாக்கி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

சவால்கள் பற்றிய ஆய்வு வழியாக சமூகத்தின்மீது நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்த கான் முகம்மது முகம்மது தாசில், 20, முற்படுகிறார்.
சவால்கள் பற்றிய ஆய்வு வழியாக சமூகத்தின்மீது நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்த கான் முகம்மது முகம்மது தாசில், 20, முற்படுகிறார். - படம்: ‘ஹேலோஜென்’

சமூகத்தின்மீது நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆர்வம், தொடர்ந்து சமூக முயற்சிகளில் ஈடுபடத் தன்னை ஊக்குவிப்பதாகக் கூறினார் கான் முகம்மது முகம்மது தாசில், 20.

“தாக்கத்தை ஏற்படுத்துகிறேனா என்று பல நேரங்களில் என்னையே அடிக்கடி கேட்டுக்கொள்வேன். அதனால்தான் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், சமூக முயற்சிகளில் ஈடுபடுவதைக் கைவிடுவதில்லை,” என்றார் அவர்.

தனது சேவைகள்வழி மக்களின் வாழ்வை மேம்படுத்த விரும்புகிறார் ஹரிதா ராயசாம், 17.
தனது சேவைகள்வழி மக்களின் வாழ்வை மேம்படுத்த விரும்புகிறார் ஹரிதா ராயசாம், 17. - படம்: ‘ஹேலோஜென்’

இந்தப் புதுத்திட்டத்தின் உதவியுடன் மக்களின் பிரச்சினைகளுக்கு, அவர்களால் எளிதில் பயன்படுத்தக்கூடிய தீர்வுகளைக் கண்டறிய வேண்டுமென்ற குறிக்கோளை வைத்துள்ளார் ஹரிதா ராயசாம், 17.

“நான் செய்யும் பணி யாராவது ஒருவருக்கேனும் உதவினாலோ, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினாலோ மிகவும் மனநிறைவு கொள்வேன்,” என்றார் அவர்.

தேசிய இளம் தலைவர்கள் ‘ஃபெல்லோஷிப்’ திட்டத்தின் இளையர்கள் தொடர்ந்து தங்களால் முடிந்தவரை சமூக முயற்சிகளில் ஈடுபடப்போவதாகவும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்