சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்சாரம், மின்னணுப் பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் 20 வயது மாணவி பாலாஜி இலக்கியா, புதிய தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் சிறந்து விளங்குகிறார்.
தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மின்சாரப் பொறியியல் பயின்றபோது, ‘சூரிய ஒளி மின்வலு அமைப்புகள்’ குறித்த பாடம் இவருக்கு நீடித்த நிலைத்தன்மை மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.
உணவு விரயம், கடற்கரைச் சுத்திகரிப்பு ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால் அவர் இந்தத் துறையில் மேலும் ஈடுபட்டார்.
சுற்றுச்சூழல் சேவைத் துறையில் பணிபுரிய, திறமையான இளையர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 2020ல் தொடங்கப்பட்ட தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் (என்இஏ) துறை உபகாரச் சம்பளம், இவ்வாண்டு 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களுள் பாலாஜி இலக்கியாவும் ஒருவர்.
ஐந்தாம் முறையாக வழங்கப்படும் இந்த உபகாரச் சம்பளத்திற்காகப் பலதுறைத் தொழிற்கல்லூரியிலிருந்து இதுவரை இல்லாத அளவாக 78 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
உபகாரச் சம்பளம் பெற்ற 11 மாணவர்களும் பட்டம் பெற்றதும், தரவு அறிவியல் ஆய்வாளர் உதவியாளர்கள், மேலாண்மைப் பயிற்சிப் பணியாளர்கள், மெக்காட்ரானிக்ஸ் பொறியியல் உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகிய வேலைகளில் பணிபுரிவார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி, சிங்கப்பூரின் அத்தியாவசியச் சேவைகளில் இத்துறை வகிக்கும் முக்கியப் பங்கை வலியுறுத்தினார்.
திருப்புமுனையாக அமைந்த பினாங்கு பயணம்
கடந்த 2023இல் மாணவர் பரிமாற்றப் பயணம் மேற்கொண்டு பினாங்கிற்குச் சென்றது இலக்கியாவின் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
“ஆரம்பத்தில் மென்பொருள் நிரலாக்கம் (Coding) என்பது எனக்குப் பழக்கம் இல்லாததால் பயந்த நான் பினாங்கிலுள்ள பேராசிரியர்களின் எளிய பயிற்றுவிப்பின்மூலம் பெரும் நம்பிக்கையைப் பெற்றேன்” என்று இலக்கியா கூறினார்.
அந்த அனுபவமே அவரை பொருள்களில் இணையம் பற்றிய அடிப்படைக் கூறுகள் பாடத்தைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது.
கண்டுபிடிப்பும் கல்வியும்
இலக்கியா தனது முதலாம் ஆண்டுப் படிப்பின்போது, குப்பைத் தொட்டிகள் நிரம்புவதைக் கண்டறியும் ‘அறிவார்ந்த குப்பைத்தொட்டி’ (Intelligent Bin) எனும் திட்டத்தை உருவாக்கினார்.
‘ஐஓடி’, நிரலிடுதல் ஆகிய பாடங்கள்மூலம் தரவுகளைத் திரட்டிச் செயல்படும் இத்திட்டம் இவரது தொழில்நுட்பத் திறனுக்குச் சான்றாக அமைந்தது.
பட்டயப்படிப்பின் மூன்றாம் ஆண்டில் நிலைத்தன்மை சார்ந்த சிறப்புப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கவும் இலக்கியா திட்டமிட்டுள்ளார்.
உதவித்தொகையும் எதிர்காலமும்
தேசியச் சுற்றுப்புற வாரியத்தில் வழங்கப்படும் சுற்றுச்சூழல் சேவைத் துறைக்கான உதவித்தொகையைப் பெற்ற 11 மாணவர்களில் இலக்கியாவும் ஒருவர்.
இதன்மூலம் பிஎன்எல் குரூப் நிறுவனத்துடன் இணைந்துள்ள அவர், அங்குத் தனது உள்ளகப் பயிற்சியைத் (Internship) திங்கட்கிழமை (மார்ச் 16) தொடங்கியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பு முடிந்ததும் அதே நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றவுள்ளார்.
“தொடக்கத்தில் எனது பெற்றோர் இத்துறையில் நான் பணியாற்றவிருப்பதைக் குறித்துத் தயக்கம் காட்டினாலும், இத்துறையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை நான் விளக்கியதும் எனக்கு ஆதரவு அளித்தனர்,” என்று இலக்கியா கூறினார்.
எதிர்காலத்தில் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடரவும், சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளவும் இலக்கியா இலக்கு கொண்டுள்ளார்.

