பட்டக்கல்வியோடு இணைந்த தொழில்துறை அனுபவம்

பட்டக்கல்வியோடு இணைந்த தொழில்துறை அனுபவம்

2 mins read
eee83c6b-76eb-4802-b9b9-a98297ac35d2
பல்கலைக்கழகத்தில் விரிவான தொழில்துறை அனுபவத்தைப் பெற்ற நீல் ஷர்மா (நடுவில்). - படம்: நீல் ஷர்மா
Google News Preferred Icon

தொழில்நுட்பத்துறை அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சூழலில், பட்டக்கல்வியோடு சேர்த்து தொழில்துறை அனுபவமும் முக்கியம் என்பதை உணர்ந்து தன் பல்கலைக்கழக பயணத்தை அமைத்துள்ளார் பட்டதாரி நீல் ஷர்மா, 26.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலில் சிறந்த தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பை இவர் முடித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை-கல்வித் திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்பின் முதல் பட்டதாரித் தொகுதியைச் சேர்ந்த 36 மாணவர்களில் இவரும் ஒருவர்.

தொழில்துறை அனுபவமே முதல் ஈர்ப்பு

“தொழில்துறை குறித்த நேரடிப் புரிதலும் அனுபவமும் இருந்தால் மட்டுமே தொழில் வளர்ச்சி சிறப்பானதாக அமையும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன்,” என்றார் நீல்.

இந்த நம்பிக்கையே இவரை இப்பட்டப்படிப்பை மேற்கொள்ளத் தூண்டியது.

பல்கலைக்கழகப் பாடத்திட்ட மேலாளரின் முறையான வழிகாட்டலால் நான்காண்டுப் படிப்பும் வேலைப் பயிற்சியும் சீராகத் திட்டமிடப்பட்டன.

படிப்போடு சேர்ந்த ஓராண்டு வேலைப் பயிற்சி

நீல் படித்துக்கொண்டிருந்தபோதே ‘மேவரிக்ஸ் கன்சல்டிங்’ நிறுவனத்தில் மூன்று மாதங்கள், ‘ஆரக்கிள்’ நிறுவனத்தில் ஒன்பது மாதங்கள் என மொத்தம் ஓராண்டு காலம் வேலைப் பயிற்சியில் ஈடுபட்டார்.

வேலைப் பயிற்சி மூலம், வெவ்வேறு வயதுடைய நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றும் மக்கள் தொடர்புத் திறனையும் இளம் நிபுணராக தன்னம்பிக்கையையும் தாம் வளர்த்துக்கொண்டதாக இவர் குறிப்பிட்டார்.

“படிப்பையும் பணியையும் சேர்த்துக் கையாள்வது சவாலானது என்றாலும் நண்பர்கள், பேராசிரியர்களின் ஆதரவுடன் திட்டத்தைச் செயல்படுத்த முடிந்தது,” என்று நீல் பெருமிதத்துடன் கூறினார்.

முழுநேர வேலை வாய்ப்பு

பல்கலைக்கழகப் படிப்பின்போது நீல் பெற்ற விரிவான பணி அனுபவம், இவர் படிப்பை முடித்ததும் ஐபிஎம் நிறுவனத்தில் நேரடியாக இணைய வழிவகுத்தது.

செயற்கை நுண்ணறிவின் காரணமாக, தொழில்நுட்பத்துறை வேகமாக மாறி வரும் சூழலில், தொடர்க் கற்றலும் மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் அவசியம் என்றார் நீல்.

எனவே, தொழில்துறையின் வளர்ச்சிக்கேற்ப தானும் தொடர்ந்து கற்று வளர்வதோடு, துறை மேம்பாட்டிற்கும் பங்களிப்பவராகத் திகழ்வதே இவரின் இலக்கு.

குறிப்புச் சொற்கள்
தொழில்துறைபட்டக் கல்விபல்கலைக்கழகம்வேலைப் பயிற்சி